சனி, 7 ஜூன், 2014

Trafic ராமசாமி மனு : சொத்துக்குவிப்பு வழக்கு நடக்கும்போது முதல்வராக பதவி வகிக்கலாமா? ஜெ.,வுக்கு எதிராக மனு

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வரும் போது ஜெயலலிதா முதல்வர் பொறுப்பில் வகிப்பது சரியல்ல, உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பெங்களூரு நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த டிராபிக் ராமசாமி மற்றும் வழக்கறிஞர் ராசாராம் ஆகியோர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர்.  ஜெயலலிதா முதல்வராக இருந்து சொத்துக்கள் வாங்கி குவித்தது தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பெங்களூரூ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இது வரை பல வழிகளில் வாய்தா வாங்கி வழக்கிற்கு ஒத்துழைக்காமல் இருந்து வந்தார் ஜெயலலிதா. மேலும் இந்த சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஜூன் 16-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது. பதவி விலக கோரி வழக்கு இந்நிலையில் பெங்களூரூ சிறப்பு நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த டிராபிக் ராமசாமி மற்றும் ராசாராம் ஆகியோர் ஒரு மனுவை தாக்கல் செய்தனர் . இந்த மனு மீதான விசாரணையில் இருவரும் வாதிடுகையில், ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ஒரு முதல்வராக இருப்பதால் பல்வேறு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார். இன்னும் பல முறைகேடுகள் செய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஒருவர் பதவியில் இருந்து கொண்டு வழக்கை சந்திப்பது சரியானதாக இருக்க முடியாது. சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் பொறுப்பில் இருந்த சீனிவாசன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் போது இவர் பொறுப்பில் இருந்தால் முறையான, நேர்மையான விசாரணை நடக்க முடியாது. இவர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டே கூறியது. இதனையடுத்த அவர் பதவியில் இருந்து விலகினார். ஒரு கிரிக்கெட் வாரியத்திற்கே இப்படி ஒரு நிலையை எடுக்கும் போது, ஒரு மாநில முதல்வராக இவர் எப்படி நீடிக்க முடியும், இது சரியாகாது எனவே இவர் முதல்வர் பொறுப்பில் நீடிக்க தகுதியற்றவர். இந்த பொறுப்பில் இருந்து ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என உத்தரவிட வேண்டும் என வாதிட்டனர். விவாதத்தை கேட்ட நீதிபதி ஜான்மைக்கேல் குன்கா, இது தொடர்பாக விசாரிக்க எனக்கு அதிகாரம் இல்லை. சொத்துக்குவிப்பு வழக்கைத்தான் விசாரிக்க உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது என்றார். ஆனால் மனுதாரர்கள் இதனை மறுத்தனர். உங்களுக்கு அதிகாரம் உண்டு. நீங்கள் முடிவு செய்யலாம் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் பல ஆவணங்களை வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்கிறோம். பின்னர் தீர்ப்பு வழங்குங்கள் என்று கோரினர். இதனையடுத்து வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
/tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: