செவ்வாய், 3 ஜூன், 2014

மல்லிகா ஷெராவத்தும் ஆர்.எஸ்.எஸ் ரசிகர்களும் !

ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை பொறுத்தவரை பன்வாரி தேவி எனும் பாரதப் பெண் இழிவு படுத்தப்பட்டிருக்கிறாள் என்பதை விட தேசியக்கொடி கவர்ச்சிக்காக பயன்பட்டிருக்கிறது என்பதே கவலை.
சாதிப் படிநிலையில் கீழே உள்ள ஆண்களை காதலிக்கவோ அல்லது திருமணம் செய்யவோ நம் நாட்டு ஆதிக்க சாதிப் பெண்களுக்கு உரிமை கிடையாது. யாரும் மீறி முயன்றால் கவுரவக் கொலை நிகழ்த்தி நம் ‘பாரத’ப் பண்பாட்டை தூக்கி நிறுத்துவது சங்க பரிவாரங்கள் மற்றும் ஆதிக்க சாதி வெறியர்களின் முக்கியமான வேலை.
அடங்கிக் கிடப்பதே பெண்களின் நல்லியல்பாகவும் மறுத்தால் ஒடுக்கியும் வரும் பார்ப்பனியத்தின் பாதுகாவலர்கள் மறுபுறம் அதே பெண்களை நதி, தாய்நாடு, தெய்வம் என்று தொழுவதாக பீற்றிக் கொள்ளுகின்றனர். ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் பெண்களை மரியாதை செய்யும் இலட்சணம் இப்படிப்பட்டதே!

மல்லிகா ஷெராவத்தின் நடிப்பை விட ஆர்.எஸ்.எஸ் நடிப்பு அட்டகாசம்!
மல்லிகா ஷெராவத்தின் நடிப்பை விட ஆர்.எஸ்.எஸ் நடிப்பு அட்டகாசம்!
அதனால்தான் உ.பி.-‘யில் யாதவ ஆதிக்க சாதி வெறியர்கள் இரு தலித் பதின்ம வயது சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, தூக்கிலேற்றிய நிகழ்வு குறித்து பாஜக கூட்டம் அகிலேஷ் யாதவ் அரசை மட்டும் கண்டித்திருக்கிறதே அன்றி, ஆதிக்க சாதிவெறியை அல்ல. முசாபர்நகர் கலவரத்தில் ஜாட் ஆதிக்க சாதிகளின் வாக்குகளை அறுவடை செய்த சங்க பரிவாரத்திற்கு இங்கே யாதவ சாதி வாக்குகளை அள்ளுவதற்கு இந்த பாராமுகம் நிச்சயமாக உதவி செய்யும்.
இந்தியாவில் ஏதாவது ஒரு பெண்ணுக்கு பாதிப்பு என்றால் மற்றவர்கள் அந்த பெண்ணுக்காக குரல் கொடுத்தால், இந்துமத வெறியர்கள் மட்டும் அந்த பிரச்சினையின் மூலம் பாரதப் பண்பாடு எப்படி ‘பாதிக்கப்பட்டிருக்கிறது’ என்று  கண்டுபிடித்து போராடுவார்கள்.
அப்படித்தான் ஒரு சினிமா சுவரொட்டியில் பாரத மாதாவை இழிவுபடுத்தும் வண்ணம் தேசிய கொடியை ஆபாசமான ஆடையாக அணிந்து விட்டார் எனக் கூறி பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு எதிராக போராடத் தயாராகி உள்ளனர், ஆர்.எஸ்.எஸ் வானரக் கும்பல்கள்.

மல்லிகா ஷெராவத், கவர்ச்சி வேடங்களுக்காக பெயரெடுத்த ஒரு பாலிவுட் நடிகை. பரபரப்பான செய்திகளில் முன்னிலையில் இருக்க வேண்டும் என்பது இத்தகைய கவர்ச்சி நடிகைகளின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. ஏற்கெனவே அமெரிக்க தேசிய கொடியை படுக்கையாக பயன்படுத்தி ‘பாலிடிக்ஸ் ஆப் லவ்’ என்ற திரைப்பட சுவரொட்டியில் போஸ் கொடுத்தது, ரியாலிட்டி ஷோ மூலமாக தனக்கு சுயம்வரம் நடத்தியது என அவ்வப்போது காசே செலவு செய்யாமல் செய்திகளில் தலைகாட்டி விளம்பரத்தை பெற்றுக் கொள்ளும் மல்லிகா ஷெராவத், ஏறக்குறைய சினிமா உலகிலிருந்து ஓய்வுபெறும் சந்தை பறிபோன நடிகையாக இருக்கிறார்.
இதன் பொருட்டே அவர் சர்ச்சைகளின் நாயகியாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் தேவை இருக்கிறது. இப்போது இந்த முயற்சிக்கு ஆர்.எஸ்.எஸ் அடிப்படைவாதிகளும் உதவி செய்கிறார்கள். அவர் கதாநாயகியாக நடிக்கும் “தி டர்ட்டி பாலிடிக்ஸ்” என்ற திரைப்படத்தின் சுவரொட்டிகள் கடந்த வாரம் மும்பையில் வெளியாகின.
இந்திய தேசியக் கொடி அல்லது காங்கிரசு கட்சியின் கொடியிலுள்ள வண்ணங்களால் (காவி, வெள்ளை, பச்சை) ஆன ஒரு துண்டை மாத்திரம் கட்டிக் கொண்டு, பாதி உடல் தெரியும் வண்ணம் ஒரு அரசாங்க சைரன் பொருத்திய அம்பாசிடர் கார் மீது அமர்ந்திருக்கிறார் மல்லிகா ஷெராவத். வலது கை விரலில் கிருஷ்ண பரமாத்மாவின் சக்கரம் போல ஒரு வீடியோ சிடி இருக்கிறது. படத்தின் பின்புறமாக ராஜஸ்தான் மாநில சட்டசபை காட்டப்படுகிறது.
இந்த புகைப்படத்தை தனது முகநூலின் முகப்பிலும் மல்லிகா ஷெராவத் பகிர்ந்திருக்கிறார். உடனடியாக தேச பக்தர்களும், இந்துமதவெறி ஆதரவு சக்திகளும், மல்லிகா தேசியக் கொடியை அவமதித்து விட்டதாக பின்னூட்டங்கள் மூலமாக கண்டனங்களை தெரிவித்திருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை சிடி தான் அசோக சக்கரம். மற்றபடி பின்னூட்டமிட்ட பல ஆண்களுக்கும் ஷெராவத்தையும் ‘தனிப்பட்ட’ முறையில் பிடிக்கும், தேசிய கொடியையும் பிடிக்கும் என்பது அவர்களே மறுக்கமுடியாத முரண்பாடு. இதன்றி பாஜக முன்னாள் செயலர் சஞ்செய் ஜோஷியின் ‘சிடி’, கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் பிட்டு படம் பார்த்தது, பாஜகவின் ஞானகுரு ஆஸ்ரம் பாபுவின் பாலியல் வக்கிரங்கள் அனைத்தும் தற்கால பாரத பண்பாட்டின் மைல் கற்கள்.
கடந்த ஆண்டு நடைபெற்ற 67 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் தி டர்ட்டி பாலிடிக்ஸ் திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அதன் விளம்பர தூதுவராகவும் மல்லிகா ஷெராவத் தான் சென்றிருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த அரைகுறை உடைகளைப் பற்றிதான் அங்கே பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த புகைப்பட கலைஞர்கள் எல்லோரும் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு அவரை வளைத்து வளைத்து புகைப்படமாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார்கள். படத்துக்கு ஜாக்கி வைத்து தூக்குவதற்காகத்தான் அந்த அரைகுறை ஆடைகள் என்பதை அனைவரும் தெரிந்துதான் இருந்தார்கள். இது ஒரு தனிக்கதை.
இந்திய இறையாண்மை பறிபோனதை விடவா இந்த பட சுவரோட்டியின் மூவர்ணக் கொடி மரியாதை முக்கியம்?
இந்திய இறையாண்மை பறிபோனதை விடவா இந்த பட சுவரோட்டியின் மூவர்ணக் கொடி மரியாதை முக்கியம்?
2013 துவக்கத்திலேயே மல்லிகா ஷெராவத்துக்கும், தி டர்ட்டி பாலிடிக்ஸ் பட இயக்குநர் கே.சி.பொக்காடியாவிற்கும் ‘மிரட்டல்’கள் வந்தன. 2011-ல் செப்டம்பர் 1-ம் தேதி காணாமல் போன ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த ஆரம்ப சுகாதார மையத்தை சேர்ந்த செவிலியர் பன்வாரி தேவியின் கதை இது என்பதுதான் இந்த மிரட்டலுக்கான காரணம். செப்டம்பர் 1-ம் தேதி பன்வாரி தேவி (வயது 36) காணாமல் போனார். அதுபற்றி அவரது கணவர் அமர் சந்த் போலீசில் புகார் தெரிவித்தார். தனது மனைவியை காங்கிரசு கட்சியை சேர்ந்த மாநில அமைச்சர் மஹியால் மர்தேனா கடத்திக் கொண்டு போய் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, பின் கொன்று விட்டதாக அவர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து மாநிலத்தில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. காங்கிரசு ஆட்சியை கலைக்க கோரினர். அமைச்சருடன் காங்கிரசு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மல்கான் சிங், ஷாபுதீன், சோஹன்ராம், பால்தேவ் ஆகியோர் கைதாகினர். இக்குற்றச்சாட்டில் ஷகிராம் பிஸ்னோய் என்பவர் சரணடைந்தார். இத்துடன் பன்வாரியின் கணவர் அமர் சந்தும் கைதானார்.
பன்வாரி தேவி, கைதான அமைச்சர் உள்ளிட்டவர்களுடன் பாலியல் தொடர்பில் இருந்ததாகவும், அதனை வீடியோவாக பிடித்து வைத்துக் கொண்டு அமைச்சரை பணம் கேட்டு மிரட்டியதாகவும் பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.  இந்த வழக்கில் அவரது கணவரும் குற்றவாளிகளுடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்திருந்தது. அதற்காக அவருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டதாகவும் குற்றவாளிகள் தெரிவித்திருந்தனர்.
ஜலிவாடா கிராமத்தை சேர்ந்த பன்வாரி தேவியின் அஸ்தி ஜலோடா கிராமத்திற்கருகில் ராஜீவ் காந்தி கால்வாயில் கரைக்கப்பட்டது. அவருடைய சில எரியாத எலும்புத் துண்டுகளும், மோதிரமும் கால்வாயில் இருந்து கைப்பற்றப்பட்டன. நூறு நாட்களில் வேகமாக விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்திருந்தது. பன்வாரி தேவியின் கடைசி மகளுக்கு தந்தை, கைதான எம்.எல்.ஏ மல்கான் சிங்தான் என்பதை டி.என்.ஏ சோதனை மூலம் சிபிஐ நிரூபித்தது. பன்வாரி தேவி பதிவு செய்ததாக இரண்டு சிடிக்களை கைப்பற்றியிருப்பதாக சிபிஐ குற்றப் பத்திரிக்கையில் தெரிவித்திருந்தது.
காங்கிரசு எம்.எல்.ஏ, மற்றும் அமைச்சர்களின் இந்த ‘சாதனையை’ தணிக்கும் பொருட்டு, பன்வாரி தேவியின் மூன்று குழந்தைகளுக்கும் கல்வி உதவி அளிப்பதாக மாநில முதல்வராக அப்போது இருந்த காங்கிரசின் அசோக் ஹெக்லாட் உறுதி கூறியிருந்தார்.
இந்த கதையை வைத்துதான் தி டர்ட்டி பாலிடிக்ஸ் படம் எடுத்துள்ளார்கள். படத்தில் ஒம் பூரி, நஷ்ருதீன் ஷா, அனுபம் கெர், ஷாக்கி ஷெரப், கோவிந்த் நாம்தேவ், அசுதோஷ் ராணா, ராஜ்பால் யாதவ் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. இருப்பினும் இந்த பிரபலங்களால் ஆதாயமில்லை என்று முடிவு செய்திருக்கும் படத் தயாரிப்பாரளர்கள், படத்தை ஓட்டுவதற்காக மல்லிகா ஷெராவத்தை திரையில் பன்வாரி தேவியாக ‘காட்டும்’ பொறுப்பினை ஏற்றுக் கொண்டனர்.
ஹரியாணா மாநிலத்தில் ஒரு வசதியான ஜாட் சாதி குடும்பத்தில் பிறந்த மல்லிகா ஷெராவத்திடம் படத்தைப் பற்றி கேட்டதற்கு, அமெரிக்க ஆங்கில உச்சரிப்புடன் அவர் கூறியது ”இது எப்படி ஒரு பெண் செவிலிக்கு அரசியல்வாதிகளுடன் தொடர்பு ஏற்படுகிறது, எப்படி கடைசியில் அவள் கொல்லப்படுகிறாள் என்பதை சொல்கிறது. எப்படி அவள் அரசியல்வாதிகளால் மிக மோசமாக வல்லுறவுக்குள்ளானாள், துன்புறுத்தப்பட்டாள் என்பதை பதிவு செய்து ஊடகங்களிடம் தருமளவுக்கு அவளுக்கு தைரியமிருந்தது”.
ஆனால் இந்த தைரியம் மல்லிகாவுக்கோ இல்லை இயக்குநர் உள்ளிட்ட படத்தின் படைப்பாளிகளுக்கோ இல்லை. அதனால்தான் ஷெராவத்தை ஆபாசமாக காட்டி தமது படைப்பின் வர்த்தக நலனை உறுதி செய்து கொண்டனர்.
இப்படத்தின் சுவரொட்டியை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக வடிவமைக்க கோரி பலவித அரசியல் கட்சிகளின் அழுத்தங்கள் படத்தின் இயக்குநருக்கு தரப்பட்டன. ராஜஸ்தானை சேர்ந்த சில அரசியல் கட்சிகள் வழக்கு போடப் போவதாக கூறியுள்ளனர். படப்பிடிப்பு துவங்கும்போதே அவருக்கு ராஜஸ்தான் மாநில காங்கிரசார் கொலை மிரட்டல் வேறு விடுத்துள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை தங்களது வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடக் கூடாது என்ற கவலை.
படத்தின் இயக்குநருக்கோ அல்லது மல்லிகா ஷெராவத்துக்கோ பன்வாரி தேவியின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்பதோ அல்லது இனி பாலியல்ரீதியாக பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்க வேண்டும் என்பதோ நோக்கமாக இருந்திருக்க முடியாது. இதனை இயக்குநரும் வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டுள்ளார். மல்லிகா ஷெராவத்தும் குறைந்து வரும் தனது சந்தை மதிப்பை மீட்டெடுக்கவே இப்படத்தில் நடித்திருக்கிறார். இல்லையென்றால் பன்வாரி தேவியை இழிவு படுத்தும் காட்சிகளில் கவர்ச்சியாக நடிக்க முடியுமா என்ன?
ஏற்கெனவே வித்யா பாலன் நடிப்பில் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டிருப்பதாக சொல்லி கல்லா கட்டிய பாலிவுட்டைப் பொறுத்தவரை, பன்வாரி தேவி திரைக்கு வராத ஒரு சில்க் ஸ்மிதா. அதனால் அவரது வரலாற்றை இழுத்து வந்து வெண்திரையில் காட்டுகிறார்கள். ஆபாசப்படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யும் தயாரிப்பாளர்கள், அதில் சமூகத்திற்கு உபதேசம் செய்யும் கருத்துகளை கண்டிப்பாக வைத்திருப்பார்கள். சதையை பார்க்க வரும் ரசிகன் கதையையோ இல்லை அதில் ஒரு நீதியையோ எதிர்பார்க்க மாட்டான். ஆனாலும் கவர்ச்சிக் கதைகளுக்கு அப்படி ஒரு அறம் தேவைப்படுகிறது.
பன்வாரி தேவி கொலை செய்யப்பட்டு ஏன்?
பன்வாரி தேவி கொலை செய்யப்பட்டது ஏன்?
ஷகிலா படங்கள் தமது பாரதப் பண்பாட்டை இழிவு படுத்துகிறது என்று போராட முடியாதவர்கள் ஷெராவத்திற்கு மட்டும் வருவது ஏன்?  ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை பொறுத்தவரை பன்வாரி தேவி எனும் பாரதப் பெண் இழிவு படுத்தப்பட்டிருக்கிறாள் என்பதை விட தேசியக்கொடி கவர்ச்சிக்காக பயன்பட்டிருக்கிறது என்பதே கவலை. இந்த தேசத்தின் பண்பாடு, ஒரு பெண்ணை அடிமை போல நடத்துவதை பெருமையாக கருதுபவர்கள், அந்த தேசத்தின் கொடி சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முரணல்ல.
”மூவர்ண கொடியை நாட்டுக்காக போராடி உயிர்நீத்த போர் வீரர்கள் மீது மட்டும்தான் போர்த்த முடியும்” என்கிறது ஆர்.எஸ்.எஸ். இதன்படி அப்பாவிகளை போலி என்கவுண்டரில் போடும் இராணுவ, போலீசின் ‘வீரத்திலும்’ தேசக் கொடியின் பெருமிதம் இருக்கத்தான் செய்கிறது.
இப்போது ராஜஸ்தானில் வசுந்துரா ராஜே சிந்தியா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருவதால் ஷெராவத்துக்கு பின்புறமாக ராஜஸ்தான் சட்டசபையை காட்டியது கூட தங்களை அவமதிப்பதாகத்தான் அர்த்தம் என்று அவர்கள் சொல்லிக் கொள்கின்றனர். கூடவே காங்கிரசும் இந்தக் கொடியை தங்களது கட்சிக் கொடி என்று உரிமை பாராட்டுகிறது. அதனால் சுவரொட்டியை திரும்ப பெறுமாறு வலியுறுத்துகிறது.
காங்கிரசும், பாஜகவும் இந்தியாவின் இறையாண்மையை போட்டி போட்டுக் கொண்டு ஏகாதிபத்தியங்களுக்கு விற்பனை செய்யும் தருணத்தில் தங்களது அம்மணத்தை மறைக்க இத்தகைய சில்லறை பிரச்சினைகளை கையிலெடுக்கின்றனர். பன்றிகளின் கூடரம் ஆகிவிட்ட பாராளுமன்ற, சட்ட மன்றங்களின் மீது இவர்களுக்கு இருக்கும் பற்றும் சுயமரியாதையும், ஷகிலா படங்களில் இருக்கும் அறச்சீற்றத்தை நினைவுபடுத்துகிறது.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கால் மீது கால் போட்டு உட்கார்ந்திருக்கையில் அவரது பாதங்களுக்கருகே இந்திய தேசிய கொடி இருந்த புகைப்படத்தை பார்த்த இதே இந்துத்துவா தேச பக்தர்கள் முன்னர் அதனை பிரச்சினையாக்கினார்கள். அதற்காக சானியா மன்னிப்பு கேட்ட பிறகுதான் பிரச்சினை தீர்ந்தது. 2000-ல் மாலினி ரமணி என்ற ஆடை வடிவமைப்பாளர் தனது உடையை மூவண்ண கோடுகளும், நடுவில் நீல நிற சக்கரமும் கொண்டதாக வடிவமைத்திருந்த காரணத்துக்காக கடும் எதிர்ப்புக்குள்ளாகியிருந்தார். சில ஆண்டுகள் கழித்து நடிகை மந்திரா பேடியும் ஒரு கிரிக்கெட் போட்டிக்கு இதுபோன்ற ஆடையுடன் வந்த காரணத்துக்காக இந்துத்துவா சக்திகளின் கடும் கண்டனத்துக்குள்ளாகினார்.
இப்படி பெண்கள், அதுவும் விளையாட்டு வீரங்கனைகள் மற்றும் நடிகைகளின் பிடியில் இருந்து நாட்டின் சுயமரியாதையை காப்பாற்றும் தேசபக்த சிங்கங்கள் எதற்கும் ஏகாதிபத்தியங்களின் மூலதனம் இங்கே வந்து சூறையாடுவதும், தேசமே ‘கற்பழிக்கப்படுவதும்’ கண்களுக்கு தெரியவில்லை. மட்டுமல்ல அந்த வன்புணர்ச்சியின் தரகர்களாகவும் இவர்களே இருக்கிறார்கள். ஆகவே நம் கேள்வி எளிது. ஒரு விபச்சாரத் தரகன் ‘கற்பு’ குறித்து வகுப்பு நடத்த முடியுமா?
ஒரு அமைச்சர் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஒரு அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதுடன், கொலையும் செய்துள்ளார். பிறகு குற்றவாளிகள் கொலையான பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரிக்கவும் செய்துள்ளனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணையில் கூட தடயங்கள் எதுவும் கிடைக்காதவாறு குற்றவாளிகள் திட்டமிட்டு சாம்பலை ஆற்றில் கலந்து விட்டிருந்தார்கள்.
இத்தகைய பெண்ணைத்தான் இப்போது ஒரு சகுனி போன்ற பண்புடைய ஒரு விபச்சாரி என்றும், ஒரு அமைச்சரை வலையில் விழ வைத்து சம்பாதிக்க முயன்றாள் என்றும் சித்தரிக்கிறார்கள். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த அமைச்சரல்லவா சாம்பலாக ஆற்றில் கலந்திருக்க வேண்டும்? பன்வாரி தேவிக்கு செல்வாக்கும் அதிகாரமும் இருக்கும் பட்சத்தில் அவள் ஏன் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும்?
பெண்கள் குறித்த எல்லா செய்திகளும் ஆண் வாசகர்களின் பரபரப்புக்கு தீனி போடும் பொருட்டே இப்படி எழுதப்படுகின்றன. மேட்டுக்குடி மைனர் செய்யும் தவறுகளை இயல்பாக எடுத்துக் கொள்ளும் ஊடகங்கள் அதையே ஒரு பெண் செய்தால் அவளின் ‘சுய ஒழுக்கத்தை’ காரணம் காட்டி குற்றாளிகளுக்கு ஆதரவாக வாதிடுவார்கள். தவறே செய்யவில்லை என்றாலும் ஏழைப் பெண்கள் தொடர்பான வழக்குகளில் அவர்களது நடத்தை மட்டும் இழிவாக பேசப்படும். இதனால்தான் நமது நாட்டில் பல குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் விடுதலையாகியுள்ளனர்.
தொன்னூறுகளில் (1992) ராஜஸ்தானில் பெருமளவு பேசப்பட்ட இன்னொரு பன்னாரி தேவி (வயது 50) வழக்கில், பாலியல் வல்லுறவுக்குள்ளான அந்த சமூக சேவகி நேரடியாக குற்றம்சாட்டிய ஆண்கள் ‘உயர்’சாதியினர் என்ற காரணத்தால் மட்டுமே விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை தீண்டியிருக்க மாட்டார்கள் என்றும், ஆகவே பன்வாரி தேவி வல்லுறவுக்குள்ளாகவேயில்லை என்றும் கூறி குற்றவாளிகளான ஐந்து ஆதிக்க சாதியினரையும் ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் விடுதலை செய்தது.
அமெரிக்க கொடியின் ஆசிர்வாதத்தோடு இந்தியக் கொடி! பாரத மாதாவின் தவப் புதல்வி மல்லிகா ஷெராவத்!!
அமெரிக்க கொடியின் ஆசிர்வாதத்தோடு இந்தியக் கொடி! பாரத மாதாவின் தவப் புதல்வி மல்லிகா ஷெராவத்!!
உச்ச நீதிமன்றம் வரை சென்ற பன்வாரி தேவியின் விடா முயற்சியால் தான் இன்றைக்கு பணியிடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பை வழங்க வகை செய்யும் விசாகா கமிட்டி அமைவதற்கான ஒரு தீர்ப்பு பெறப்பட்டது. குழந்தை திருமணங்களை தடுப்பதற்காக காவல்துறையில் புகார் அளித்தார் என்பதற்காக பன்வாரி தேவி ஆதிக்க சாதியினரால் கும்பலாக பாலியல் வல்லுறவுக்குள்ளாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1974-ல் பீகாரில் இரு காவலர்கள் ஒரு தலித் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கூட இப்படித்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வெண்மணி படுகொலையில் கூட கோபால கிருஷ்ண நாயுடு போன்ற ‘உயர்’சாதியை சேர்ந்த நபர் இதுபோன்ற படுபாதக செயலில் ஈடுபட்டிருப்பார் என்பதை நம்ப முடியவில்லை என்று சொன்னது நீதிமன்றம். இதுதான் நீதிமன்றத்தின் பார்வையும் கூட.
இப்படி நீதி மன்றம் போய்தான் தங்களை விடுவிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்ற எண்ணத்தால்தான் பாலியல் குற்றவாளிகள் பலரும் பாலியல் வல்லுறவோடு, கொலையையும் சேர்த்தே செய்து விடுகின்றனர். 2011-ல் ராஜஸ்தானில் பன்வாரி தேவி என்றால், 2014-ல் உபி இரண்டு தலித் சிறுமிகள்.
ஆணாதிக்கம் கோலோச்சும் பார்ப்பனிய சமூக அமைப்பில் பெண்கள் மீதான பாலியல் ரீதியிலான தாக்குதல்களை பிறப்புரிமையாகத்தான் பல ஆதிக்கப் பிரிவு ஆண்களும் கருதிக் கொள்கிறார்கள். சமூக வாழ்விலும், குடும்ப வாழ்விலும் தங்களது சக பயணி என்ற அந்தஸ்தை பெண்களுக்கு வழங்குவதை அவர்களது பார்ப்பனிய ஆணாதிக்க மனோநிலை தடுக்கிறது. அதிலும் அமைச்சர், அதிகாரிகள் போன்ற பொறுப்புகளில் ஆண்கள் இருந்து, அவர்களுக்கும் கீழான சமூகப்படி நிலை அந்தஸ்தில் பெண்கள் இருக்க நேரிட்டால், தங்களது பாலியல் தேவைகளுக்கான நுகர்பொருட்களாகத்தான் பெண்களை அவர்கள் பார்க்கிறார்கள். அதனால்தான் தங்களது நுகர் பொருள் நுகர்பவனை கேள்வி கேட்பதை அவர்கள் அனுமதிப்பதில்லை. சம்பந்தப்பட்ட பெண்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பின் மரணமும், வேசிப் பட்டமும் அவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும்.
பழைய பன்வாரி தேவியை வல்லுறவுக்குள்ளாக்கி நடைபிணமாக்க முயன்றனர் ஆதிக்க சாதியினர். புதிய பன்வாரி தேவியை கொலையும் செய்து விட்டனர். கூடவே வேசிப் பட்டமும் அளிக்க தயாராகி விட்டனர். இவர்களே சொல்வது போல பன்வாரி தேவி ஒரு ‘வேசி’ என்று வைத்துக் கொண்டாலும் அவளை கொல்வதற்கான அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கினார்கள்? அல்லது அந்த பெண்ணை வேசி போல துன்புறுத்தியது யார்? இது அவளது விருப்பமா இல்லை நிர்ப்பந்தமா?
பழைய பன்வாரி தேவி கதையை வைத்து நமக்கு கிடைத்தது ‘பாவந்தர்’ இந்தி திரைப்படம். புதிய பன்வாரி தேவியை முன்வைத்து தி டர்ட்டி பாலிடிக்ஸ். இதைத் தாண்டி படம் ஓட வேண்டும் என்ற பரபரப்புக்காக இப்போது கவர்ச்சி + தேசியக் கொடி + மல்லிகா ஷெராவத், அதற்கு ஆதரவாய் தேவலோக ரம்பைகளின் ரசிகர்களான ஆர்.எஸ்.எஸ் இன் எதிர்ப்பு.
-    கௌதமன் vinavu.com

கருத்துகள் இல்லை: