திங்கள், 2 ஜூன், 2014

படிப்பு குறித்து பொய் தகவல்:நிரூபிக்கப்பட்டால் ஸ்மிருதிக்கு 6 மாத சிறை !

புதுடெல்லி: மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தனது கல்வி தகுதி குறித்து 3 முறை பொய் தகவல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாத சிறை தண்டனை கிடைக்கும். ஆனால், அவரது எம்பி பதவியும் அமைச்சர் பதவியும் பறிபோகாது என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில், டிவி நடிகை ஸ்மிருதி இரானி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2004ம் ஆண்டு டெல்லியில் சாந்தினி சவுக் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கபில் சிபலை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அப்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில், அஞ்சல் வழியில் பிஏ படித்திருப்பதாக தெரிவித்திருந்தார். கடந்த 2011ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அப்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பி.காம் படித்திருப்பதாக கூறியிருந்தார். கடைசியாக 2014 மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இந்த முறையும் அஞ்சல் வழியில் பி.காம் முதல் பார்ட் முடித்திருப்பதாக கூறியிருந்தார். பிளஸ் 2 படித்தவர் கல்வி அமைச்சரா என்று காங்கிரசை சேர்ந்த அஜய் மக்கான் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து இந்த விவரங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன. இதற்கிடையில் டெல்லி பல்கலையில் எந்த பட்டத்தையும் அவர் பெறவில்லை என்பதையும் அதற்கு ஆதாரமான சான்றிதழ்களையும் அங்கு பணிபுரிந்த 5 ஊழியர்கள் பத்திரிகை ஒன்றுக்கு அளித்தனர். இதை தொடர்ந்து அந்த 5 பேரையும் டெல்லி பல்கலை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. அவர்களது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஸ்மிருதி இரானி கேட்டுக் கொண்டார்.

தனது கல்வி தகுதி குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த இரானி, தனது செயல்பாடுகளை பார்த்து தனது திறமையை மதிப்பிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்நிலையில் வேட்பு மனுவில் பொய் தகவல் அளித்த இரானி மீது வழக்கு தொடர்ந்து குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 6 மாத சிறை தண்டனை கிடைக்கும் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது எம்பி பதவியோ, அமைச்சர் பதவியோ பறிபோகாது என்றும் வல்லுநர்கள் கூறினர். சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றால் மட்டுமே எம்பி பதவி பறிபோகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் வேட்பு மனுவில் பொய் தகவல் அளித்ததற்காக இரானி மீது நடவடிக்கை எடுக்க போவதில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது dinakaran.com

கருத்துகள் இல்லை: