சனி, 28 செப்டம்பர், 2013

தமிழ்த்திரையின் முழுமையான முதல் ஹீரோ- பி.யூ.சின்னப்பா

பாட்டு, சண்டை எனப் பல திறமைகள் கொண்டு நாயகனாகத் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்தவர் பி.யூ.சின்னப்பா. எம்.ஜி.ஆர்-சிவாஜியில் தொடங்கி இன்று விஜய்-அஜீத் வரை தொடரும் ரசிகர்களின் போட்டி மனப்பான்மை அப்போதே எம்.கே.தியாகராஜபாகவதர்-பி.யூ.சின்னப்பா ரசிகர்களுக்கிடையே உருவாகி, நேரடி மோதல் வரை நீண்டது. புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் பி.யூ.சின்னப்பா. உலக நாதப்பிள்ளை, மீனாட்சி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாக சின்னப்பா 1916 மே 5ந் தேதி பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சின்னப்பாவின் தந்தை நாடக நடிகராக இருந்ததால் சின்னப்பாவும் 5-ம் வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் தொடங்கி விட்டார். தனது அப்பா பாடிய பாடல்களை அவரும் பாடுவது வழக்கம். ஊரில் பஜனைப்பாடல்கள் பாடுவதற்கும் சின்னப்பாவைத்தான் அழைப்பார்கள். பள்ளிப்படிப்பு என்பது 4ஆம் வகுப்பு வரைதான்.


குஸ்தி, குத்துச்சண்டை, கம்பு சுற்றுதல் ஆகியவற்றில் சின்னப்பாவுக்கு அதிக விருப்பம் உண்டு. ஊதியத்திற்காக கடைகளில் அவர் வேலை பார்த்தாலும் நாடகத்தில்தான் நாட்டம் அதிகமாக இருந்தது. தந்தையின் ஆதரவுடன், தத்துவ மீனலோசனி வித்வபால சபா, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி ஆகிய நாடக கம்பெனிகளில் நடித்தார். சின்னப்பாவுடன் நாடக மேடைகளில் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர், அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி, காளி என்.ரத்தினம் உள்ளிட்ட பலரும் நடித்தனர்.

புராண நாடகங்களிலும் சமூக நாடகங்களிலும் அவர் நடிப்பதும், சுருதி பிசகாமல் பாடுவதும் ரசிகர்களை ஒன்ஸ்மோர் கேட்க வைத்தன. ராக ஆலாபனையுடன் ஒரு பாட்டை அரை மணிநேரம் அருமையாகப் பாடக்கூடியவர் சின்னப்பா. தன் குரல்வளத்தைப் பெருக்கிக்கொள்ள திருவையாறு சுந்தரேச நாயனக்காரரிடமும் காரை நகர் வேதாசல பாகவதரிடமும் சின்னப்பா சங்கீதம் கற்றுக்கொண்டார். அதுபோல புதுக்கோட்டை ராமநாத ஆசாரியிடம் சிலம்பம், கத்திச் சண்டை ஆகியவையும் கற்றுக்கொண்டார். 

மிகவும் ஆபத்தான ஆயுதமான சுருள் பட்டா கத்தியை சுழற்றுவதில் சின்னப்பா அசகாய சூரர். 40 அடி தூரத்தில் உள்ள எதிரிமீதுகூட அந்த ஆயுதத்தால் தாக்க முடியும். ஆனால் கொஞ்சம் அசந்தால், லாவகம் தவறிப்போய் வீசுபவரின் தலையையே குறிவைத்துவிடும். (ரிக் ஷாக்காரன் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டையில் எம்.ஜி.ஆர் இந்த சுருள் பட்டா கத்தியைச் சுழற்றி அசத்தியிருப்பார்) குத்துச்சண்டை, வெயிட்லிஃப்ட்டிங் என எதையும் சின்னப்பா விட்டுவைக்கவில்லை. நெருப்பு வளையத்திற்கு நடுவே பாயும் சாகசத்தையும் அவர் செய்துவந்தார். வருமானத்திற்காக சிறப்பு நாடகங்களில் மட்டும் நடித்து வந்தார். 


சந்திரகாந்தா நாடகத்தில் சின்னப்பா பிரலமாக விளங்கி வந்ததை அறிந்த ஜூபிடர் பிக்சர்ஸார் சின்னப்பாவை தங்கள் தயாரித்த சந்திரகாந்தா படத்திற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். 1936ல் வெளியான சந்திரகாந்தா படத்தில் சுண்டூர் இளவரசனாகத் தோன்றிய சின்னப்பாவின் நடிப்பும், பாட்டும், ரசிகர்களைக் கவர்ந்தன. இப்படத்தில் அவரது பெயர் சின்னசாமி என்றே இடம்பெற்றது, பின்னரே சின்னப்பா ஆனார். அதன்பிறகு, பஞ்சாப் கேசரி, ராஜ மோகன், அனாதைப் பெண், யயாதி, மாத்ரு பூமி ஆகிய ஐந்து படங்களில் நடித்தார். இப்படங்கள் சுமாரான வெற்றியையே பெற்றன. அதனால் சரியான வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை.

தொழிலின்றி இருக்கும் நடிகர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு வாய்ப்பளித்தவர் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம். அவர் சின்னப்பாவை தனது ‘உத்தமபுத்திரன்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தார். தமிழில் முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பெருமைக்குரியவர் பி.யூ.சின்னப்பா. படம் பெருவெற்றிபெற்றது. வசூலை வாரிக்குவிக்கவே, சின்னப்பாவுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. அதன்பிறகு தயாளன், தர்மவீரன், பிருதிவிராஜன் போன்ற படங்களில் நடித்தார். பிருதிவிராஜன் படத்தில் சம்யுக்தையாக அவருக்கு ஜோடி சேர்ந்தவர் ஏ.சகுந்தலா. இருவருக்கும் உண்மையான காதல் ஏற்பட்டு பின்னர் வாழ்க்கைத் துணையாயினர்.

சின்னப்பாவுக்குப் பெரியஅளவில் பெயர் பெற்றுத்தந்த மற்றொரு படம், மனோன்மணி. இந்த சமயத்தில், தமிழ்த்திரையுலகில் பெரும்புகழ் பெற்றுவந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். சின்னப்பா ரசிகர்களுக்கும் பாகவதர் ரசிகர்களுக்கும் போட்டி மனப்பான்மை அதிகரித்து, அடிதடி வரை இறங்கினர். தமிழ்நாட்டில் சினிமா என்ற கலை பின்னாளில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தப்போவதன் அறிகுறியாக அவை நடந்ததோ என்னவோ!


ஆர்யமாலா படமும், அதன்பிறகு தமிழ்த்திரைப்பட வசனங்களில் மாற்றத்தை உண்டாக்கிய இளங்கோவனின் வசனத்தில் வெளியான ‘கண்ணகி’படமும் சின்னப்பாவுக்குப் பெயர் பெற்றுத்தந்தன. கண்ணகி படத்தில் கண்ணம்பாவின் வசன உச்சரிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சின்னப்பா தொடர்ந்து நடித்த குபேரகுசேலர், ஹரிச்சந்திரா, ஜெகதலப்ரதாபன், கிருஷ்ணபக்தி, மங்கையர்கரசி ஆகிய படங்களும் மிகுந்த வெற்றியைப் பெற்றன. மங்கையர்கரசி யில் மதுராந்தகன், காந்தரூபன், சுதாமன் என்று மூன்று வேடங்களில் நடித்திருந்தார் சின்னப்பா. 1949ல் வெளியான ரத்னகுமார் படத்தில் சின்னப்பாவுக்கு ஜோடி, பானுமதி. இப்படத்தில் எம்.ஜி.ஆரும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். 1960களில் தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னராக எம்.ஜி.ஆர் வளர்ந்ததும், எம்.ஜி.ஆர் நடித்த ரத்னகுமார் என்ற விளம்பரத்துடனேயே மறுவெளியீடாக பல அரங்குகளிலும் திரையிடப்பட்டது.. 

பாகவதர் உள்ளிட்ட நடிகர்களைப் போலவே சின்னப்பா பற்றியும் லட்சுமிகாந்தனின் இந்துநேசன் பத்திரிகையில் கிசுகிசுக்கள் வந்தபோது அவர் அதை பெரிதுபடுத்தவில்லை. நம்ம குறைகளை நாம சரிசெய்துகொள்வோம். அடுத்தவர் மீது ஏன் கோபப்படவேண்டும் என விட்டுவிட்டாராம். 


கலைத்துறையில் பலவித ஆற்றல்கள் கொண்ட தமிழ்த் திரை நடிகராக முழுமையாக ஒளிர்ந்த முதல் நாயகர் சின்னப்பா. அதனால் அவருக்கு ‘நடிக மன்னன்’ என்ற பட்டமும் உண்டு. புகழ்பெற்ற நடிகரான சின்னப்பா 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் நாள் தனது 35 வயதிலேயே காலமானார். அன்றைய நடிகர்களான பாகவதர், கலைவாணர் உள்ளிட்ட பலரும் மிகக் குறைந்த வயதிலேயே இறந்தது தமிழ்த்திரைக்கு ஏற்பட்ட பெருநட்டம்.

மறைந்தாலும் மனோன்மணி, மங்கையர்கரசி, ரத்னகுமார் என இன்றும் சின்னத்திரையில் எப்போதாவது ஒளிபரப்பப்படும் படங்களில் சின்னப்பாவைக் காணமுடியும். தமிழ்த்திரை வரலாற்றில் அவர் நிரந்தரமாகவே நிலைத்திருப்பார். 

(தகவல் உதவி-- எஸ்.வி. ஜெயபாபு)  cinema.nakkheeran.in

கருத்துகள் இல்லை: