1991-ல் நடிக்க வந்த வடிவேலுவுக்கு இப்போது வயது 53. சுமார் 300 படங்களில் நடித்து, அதில் சரிபாதிப் படங்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்த இந்த காமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம் என்றால், எத்தனை சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டிருக்க வேண்டும்? ஆனால், நம்பினால் நம்புங்கள்… ஒரே ஒரு சினிமா பிரபலம்கூடக் கலந்துகொள்ளாத வகையில் திட்டமிட்டு, தன் மகள் கன்னிகா பரமேஸ்வரியின் திருமணத்தை மதுரையில் நடத்தியிருக்கிறார் வடிவேலு!
சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுக்குத் தகவல் மட்டும் தெரிவித்துவிட்டு,
‘ஆனா, தயவுசெஞ்சு கல்யாணத்துக்கு வரணும்னு சிரமப்பட்டுக்காதீங்க.
பிள்ளைங்களை நானே ஒரு நாள் உங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துர்றேன்!’
என்று பாலீஷாகச் சேதி சொல்லி யிருக்கிறார் வடிவேலு. பத்திரிகை யாளர்களுக்கு
அந்தத் தகவலும் இல்லை. ரசிகர் மன்றத்தினருக்கு ‘வர வேண்டாம்!’ என்று மிகக்
கண்டிப் பான கட்டளை.
மதுரை நகரைவிட்டு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு மண்டபத்தில், கடந்த ஞாயிறு
அன்று நடந்தது திருமணம். மண்டபத்தை புக் பண்ணும்போதுகூட, எந்த வடிவேலு
என்று சொல்லாமல் மண்டபத்தை புக் செய்திருக்கிறார்கள்.
ஆரம்ப காலத்தில் வடிவேலுவின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்த ராஜ்கிரண்,
ஆர்.வி.உதயகுமார் போன்றோர் ‘கண்டிப்பாக நாங்கள் வருவோம்!’ என்று
சொல்லியபோது, ‘சூழ்நிலை அப்படி இருக்குண்ணே. பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு
நானே உங்க வீட்டுக்கு வந்திடுறேன்!’ என்றாராம் வடிவேலு.
காலை 9-10 முகூர்த்தத்துக்கு 9.30 மணிக்குத்தான் மேடைக்கே வந்தார் வடிவேலு.
பட்டு வேட்டி, சட்டை அணிந்து அமைதியாக அமர்ந்து திருமணச் சடங்குகளில்
ஈடுபட்டார். மேடைக்கு முன், முதல் வரிசையில் உட்கார்ந்து தன் பேத்தி யின்
திருமணத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் வடிவேலுவின் அம்மா
சரோஜினி அம்மாள்.
மணமகள் அருகே கலகலவென இருந்தார்கள் வடிவேலுவின் மற்ற இரு மகள்களான
கார்த்திகாவும் கலைவாணியும். கார்த்திகா எம்.பி.ஏ., கலைவாணி எம்.சி.ஏ.
பட்டதாரிகள். வடிவேலுவின் ஒரே மகன் சுப்பிரமணியன், சென்னையில் பி.பி.ஏ.
படிக்கிறார்.
காலை 8 மணியில் இருந்தே ‘மச்சான்’ சடங்குகளை நிறைவேற்றிக்கொண்டிருந்த
சுப்பிரமணியன், செம ஸ்டைல் லுக்கில் இருந்தார். வடிவேலுவின் மாப்பிள்ளை
சதீஷ்குமார், காமராசர் பல்கலைக்கழகம் செல்லும் வழியில் இருக்கும்
விளாம்பட்டியைச் சேர்ந்தவர். எம்.ஃபார்ம். பட்டதாரியான சதீஷ்குமார்,
மதுரையில் ஒரு மருந்து நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக் கிறார்.
மகள் கழுத்தில் தாலி ஏறும் வரை சின்ன பதைபதைப்புடன் இருந்த வடிவேலு,
கெட்டிமேளம் உற்சாகமாகக் கொட்டி முழக்கப்பட்ட பிறகே ரிலாக்ஸானார். அதன்
பிறகு, அருகில் இருப்பவர்களுடன் வழக்கமான கேலி, கிண்டல் மூடுக்கு வந்தார்.
முகூர்த்தத்துக்கு முந்தைய நாள் இரவு 14 வகை பதார்த்தங்களுடன் விருந்து,
முகூர்த்த நாளில் 17 வகை உணவுடன் விருந்து என உறவினர்களைக் குஷிப்படுத்திய
வடிவேலு மொய் வசூலிக்கவில்லை.
‘ரொம்ப நாள் கழிச்சு சொந்தக்காரங்களோட சந்தோஷமா இருக்கேன். அவங்க வர்றதே
பெரிய கௌரவம். மொய் கிய்னுலாம் எதுவும் வாங்கிப்புடாதீங்க!” என்பது
வடிவேலுவின் கட்டளை. திருமணப் பத்திரிகை, தாம்பூலப்பை என எந்த இடத்திலும்
நடிகர் என்ற வார்த்தையை அச்சிடவில்லை. பத்திரிகையிலும் தன் பெயரை
எஸ்.என்.வடிவேலு என்றுதான் பிரசுரித்திருந்தார்.
திருமண மண்டபத்துக்குப் பின்புறம் கேரவன் ஒன்று நின்றது. யாரேனும் மிக
முக்கிய வி.ஐ.பி. வருவார் என்ற நினைப்புக்கு மாறாக, அதைப் பயன்படுத்தியது
வடிவேலுவேதான். உறவினர்களில் ஒருவராக கேரவனுக்குள் சென்றுவிட்டோம். ”ஏண்ணே…
சினிமாக்காரங்க வரலை?’ என்று இயல்பாகக் கேட்டோம். ”சினிமாக்காரங்களைக்
கூப்பிட்டா, கட்சிக்காரங்களைக் கூப்பிடணும்.
கட்சின்னா, நமக்கு தி.மு.க-வும் வேணும். அ.தி.மு.க – வும் வேணும்.
கலைஞரய்யாவைக் கூப்பிட்டா, ஜெயலலிதா அம்மாவையும் கூப்பிடணும். அப் புறம்
ரசிகர்களையும் கூப்பிடணும். தாக்குப் பிடிக்குமாய்யா? அதனாலதான் யாரையும்
கூப்பிடலை.
மக கல்யாணத்தை சிம்பிளாதான் வைக்கிறேன்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன்.
சினிமாவுல அடுத்த ரவுண்ட் ஆரம்பிச்சாச்சு. மகன் கல்யாணத்தைத் தடபுடலா
வெச்சி அசத்திப்புடலாம்!” என்று பாந்தமாகச் சிரிக்கிறார் அப்பா வடிவேலு.
- விகடன் -
- விகடன் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக