புதன், 10 ஏப்ரல், 2013

ஜெயாவின் ஈழத்தாய் சீசன் 3 – கேள்வி பதில்!

ஈழத்தாய் ஜெயலலிதாவின்  பழைய வரலாறு என்ன?, என்று முழுமையிலிருந்து மதிப்பிடாமல் சில பல அதிரடி சவடால்களை வைத்து ஏமாந்தோம் என்றால் எந்த மக்கள் பிரச்சினைக்காகவும் நாம் போராட முடியாது. அப்படி போராடுபவர்களை வலுவிழக்கச் செய்வதற்குத்தான்  ஜெயாவின் புரட்சி-புரட்டு நடவடிக்கைகளை பார்த்து ஆதரிப்பவர்கள் துணை போகிறார்கள்.
கேள்வி 1:
ஈழம் தொடர்பான குரல்கள் பலமாக எழும் இவ்வேளையில், ஜெயலலிதாவின் ஐ.பி.எல் லில் இலங்கை வீரர்களை புறக்கணிக்க சொல்லும் குரலையும், அதன் தொடர்ச்சியாய் சுப்பிரமணிய சாமி ஜெ.அரசை  356 வது பிரிவை பயன்படுத்தி கலைக்க கோருவதையும் எப்படி பார்க்கிறீர்கள்? ஈழம் தொடர்பான ஜெயாவின் போக்கு இனிவரும் காலத்தில் எப்படி இருக்கும்?
கேள்வி 2:
கெயில் எரிவாயு குழாய் பதிப்பு மற்றும் ஈழம் தொடர்பான விசயங்களில் ஜெயலலிதா தொடர்ந்து சரியான பாதையில் நடப்பதாக ஒரு பரப்புரை நடக்கிறதே. உண்மையில் இம்மாதிரியான விசயங்களில் ஜெயாவை இயக்கும் அடிப்படை எது?
கேள்வி 3:
கேள்வி பதில் பகுதி தற்போது இயங்குவதே இல்லையே ஏன்? வினவில் அதிக செய்திகள் வரும் இக்காலகட்டத்தில் வாசகர்களின் பழைய பொருத்தமான கேள்விகளோடு இன்றைய செய்திகளை இணைத்து வழங்கலாமே…
- சீனிவாசன்
__________________________________________
ன்புள்ள சீனிவாசன்,
வேலைச்சுமை காரணமாகவே கேள்வி பதில் பகுதி தொடர்ச்சியாக இடம் பெறவில்லை. இனி முடிந்த மட்டும் எழுத முயல்கிறோம்.
ஐபிஎல் தொடர்பாக ஜெயாவும் சு.சாமியும் நேரெதிர் நிலை எடுத்திருப்பதாக தோன்றலாம். அப்படி இல்லை. காலந்தோறும் பார்ப்பனியம் என்ற வழக்கின் படி இந்த இரண்டு கருத்துக்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே!
முதலில் ஜெயாவின் ஈழத்தாய் சீசன் 3 வெளியீடைப் பார்த்து விடுவோம்.
பொது வாக்கெடுப்பு, தனி ஈழம், பொருளாதாரத் தடை, நட்பு நாடு என்று அறிவிக்க கூடாது இன்னபிற ஜெயாவின் அறிவிப்புக்களை உள்ளடக்கி இருக்கிறது தமிழக சட்டப்பேரவை தீர்மானம்.
முதலில் சட்டசபை தீர்மானம் குப்பைக் கூடைக்குச் செல்லும் பயன்மதிப்பு கூட அற்றது. அந்த வகையில் இவை வெறும் ஒரு அபிப்ராயம் மட்டுமே. மேலும் இவை குறித்து ஜெயா அவ்வப்போது மத்திய அரசுக்கு கடிதமும் எழுதி வருகிறார். மத்திய அரசும் உங்கள் கடிதம் கிடைத்தது என்று ஒப்புதல் தெரிவித்து வருகிறது என்றாலும் மீனவர் கொல்லப்படுவதற்காக கருணாநிதி கடிதம் எழுதியதைக் கிண்டல் செய்வோர் ஜெயா கடிதம் எழுதுவதை மட்டும் தீவிர நடவடிக்கையாக பார்க்கின்றனர்.
ஒரு கருத்து அமலுக்கு வருவதற்காக பேசுவது, போராடுவது ஒரு ரகம். அமலுக்கு வராது என்பதை நிச்சயம் தெரிந்து கொண்டு, விரும்பிக் கொண்டு, அதைப் பயன்படுத்துவதற்காக உணர்ச்சி பொங்க பேசுவது ஒரு நாடகமே அன்றி வேறல்ல.
ஜெயாவின் நோக்கம் தெளிவானது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாற்பது தொகுதிகளையும் வென்று, மத்திய அரசில் முக்கியமான கட்சியாக பேரம் பேசுவது, வரலாற்று விபத்து ஏதும் நடந்தால் பிரதமர் பதவியையும் கைப்பற்றுவது, இறுதியில் மத்திய அரசு அதிகாரத்தை வைத்துக் கொண்டு சொத்துக் குவிப்பு வழக்கை நீர்த்துப் போகச் செய்வது, தமிழக அளவில் இருந்து இந்திய அளவில் தனது அதிகாரத்தை விரிவுபடுத்துவது இவைதான் ஜெயாவின் அரசியல் நோக்கம்.
இந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் அதாவது நாற்பது தொகுதிகளையும் வெல்ல வேண்டுமென்றால் மக்கள் வாக்களிக்க வேண்டும். மின்வெட்டு, விலைவாசி உயர்வு, கல்விக் கட்டண உயர்வு என்று நாற்புறமும் தத்தளிக்கும் மக்களை திசை திருப்புவதற்கு ஜெயாவிற்கு கிடைத்த ஆயுதம்தான் ஈழம். அதில் மற்றவர்களை விட தான்தான் முன்னணியில் போராடுவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் பட்சத்தில் தமிழின ஆர்வலர்களின் உதவியுடன் ஈழத்தாயாக மீண்டும் உருவெடுத்து தேர்தலில் வென்றுவிடலாம் என்று ஜெயா பகிரங்கமாகவே முயல்கிறார். அதற்கு தோதாக அனைத்து வித தமிழின ஆர்வலர்களும், குழுக்களும் ஜெயாவின் ஈழம் குறித்த நாடகங்களை உண்மையென அங்கீகரிக்கின்றன.
ஐபிஎல் போட்டியில் இலங்கை வீரர்களை தடை செய்வது என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காட்டித்தான் தமிழக அரசு செய்திருக்கிறது. முக்கியமாக இந்திய அரசு, கிரிக்கெட் வாரியமும் கூட இதனை எதிர்க்கவில்லை, எதிர்க்கும் அவசியமில்லை என்பதையும் பார்க்க வேண்டும். மேலும் திமுக சார்ந்த கலாநிதி மாறனின் ஹைதராபாத் அணியின் கேப்டனே இலங்கை வீரர்தான் என்பதால் கருணாநிதியை கட்டம் கட்டுவதற்கும் இது உதவும். அந்த வகையில் தனது மேல் உள்ள மக்கள் அதிருப்தியை கருணாநிதி மேல் உள்ள வெறுப்பாக மாற்றுவதற்கும் ஈழப்பிரச்சினை ஜெயாவிற்கு உதவும்.
சு.சாமி, ஜெயலலிதாமற்றபடி ஐபிஎல் வீரர்கள் போல இலங்கையில் தொழில் செய்யும் அம்பானி, டாடா, ஏர்டெல், பொதுத்துறை நிறுவனங்களை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கோரமாட்டார் என்பது உங்களுக்கே தெரியும். இதனை ஏன் செய்ய முடியாது, வீரர்களை தடை செய்வது ஏன் சாத்தியம் என்பதன் வேறுபாடு கூட ஈழம் குறித்த ஜெயாவின் நாடகத்தை பளிச்சென அம்பலப்படுத்தும். ஐபிஎல் போட்டியில் இலங்கை வீரர்கள் ஆடக்கூடாது என்பதை ஒரு அரசியல் நடவடிக்கையாக ஈழ ஆர்வலர்கள் கோருகிறார்கள். போராடுகிறார்கள். ஜெயாவோ நானே அதை முடித்து தருகிறேன், அமைதியாக இருங்கள் என்கிறார். இதுதான் பிரச்சினை.

அதனால்தான் ஜெயாவின் இத்தகைய ஆபத்தில்லாத நடவடிக்கைகளை இந்தியா ஆளும் வர்க்கம் அனுமதிக்கிறது. இருப்பினும் சில தேசிய ஊடகங்கள், சு.சாமி போன்ற தரகர்கள் இதை எதிர்க்கிறார்கள். இது ஆளும் வர்க்கத்தில் ஒரு முரண்பாடு ஏற்படுத்தும் அளவிற்கு வலுவாக, அடிப்படையாக இல்லை. எனினும் சு.சாமி பேசும் இந்திய அரசு, வெளியுறவுக் கொள்கை, சட்டத்தின் ஆட்சி போன்றவை உண்மையில் இந்தியாவின் அடக்குமுறையை, இலங்கை குறித்த கொள்கையை வெளிப்படையாக ஆதரிப்பவை. இதுதான் இந்திய அரசின் கொள்கை என்றாலும் அதற்கு பங்கம் விளைவிக்காத அளவுக்கு ஜெயாவின் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன. அப்படி அனுமதிக்க கூடாது என்ற சு சாமியின் கருத்து குறித்து கவலைப்படும் அளவுக்கு நிலைமை மோசமாக இல்லை. இது சு சாமிக்கும் தெரியும்.
ஆகவே அவரது எச்சரிக்கை ஒரு செல்லமான கண்டிப்பே அன்றி வேறல்ல. முக்கியமாக புலிகளை அழித்து, ஈழத்தமிழர்களை கொன்று குவித்து, அவர்களது உரிமைப் போராட்டத்தை நசுக்கி விட்டபிறகு ஜெயாவைப் போன்றவர்கள் ஈழம் குறித்து என்ன குரல் எழுப்பினாலும் பலன் ஒன்றுமில்லை என்பதையும் ஈண்டு நினைத்துப் பார்க்க வேண்டும்.
கெயில் எரிவாயு குழாய் பதிப்பு, ஸ்டெர்லைட் போன்ற பிரச்சினைகளுக்காக மக்கள் போராடும் போது அதற்கு ஆதரவு என்பதாக காட்டிக் கொள்ளும் ஜெயா டெக்னிக்கலாக மட்டும் செயல்படுகிறார். ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியதே அவரது அரசுதான் என்றிருக்க இன்றைக்கு போராட்டம் நடைபெறுவதால் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் தற்காலிக தடையைத்தான் விதித்திருக்கிறார். உச்சநீதிமன்ற வழக்கை வென்று வந்திருக்கும் ஸ்டெர்லைட் அலை, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தையும் வழக்கில் வென்று வர முடியாதா என்ன? இதுவும் ஜெயாவுக்குத் தெரியும்.
அது போல கெயில் எரிவாயு குழாய் பதிப்பிற்காக  அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதில் நிறுத்தி கெய்ல் நிறுவனத்திற்கு எதிராக முடிவெடுத்துள்ள ஜெயா விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கக் கூடாது என்கிறார். ஆனால் 1990-களில் சென்னையையடுத்து ஃபோர்டு கார் கம்பெனியை நிறுவுவதற்காக, 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய-மேய்ச்சல் நிலங்களை வலுக்கட்டாயமாக பறித்துக் கொடுத்ததே அவர்தான்.
இந்தியத் தொழில் கூட்டமைப்பு என்ற தரகு முதலாளிகள் சங்கம் வெளியிட்டுள்ள “2025-இல் தமிழகம்” என்ற அறிக்கையில், “தற்போது 50 சதவீதமாக இருக்கும் தமிழக நகர்ப்புற மக்கள் தொகையை, 2025-இல் 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்; 2025-இல் விவசாயத்தைச் சார்ந்திருக்கும் கிராமப்புற மக்கள் தொகையை 25 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.  அப்படிக் குறைப்பதற்கு நகரமயமாவதைத் தற்பொழுதுள்ளதைக் காட்டிலும் 18 மடங்கு வேகத்தில் தீவிரப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த அபாயகரமான யோசனையின் உட்கிடை என்ன? விவசாயத்தையும், அதை நம்பி வாழும் மக்களையும் துரத்த வேண்டும் என்பதைத் தாண்டி வேறென்ன?
கூடங்குளம் போராட்டம் குறித்தும் ஜெயா எப்படி நடந்து கொண்டார் என்பது நமக்குத் தெரியும். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்த உடனே போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. ஆரம்பத்தில் எதிர்ப்பது போல நடித்து, நிபுணர் குழு, மத்திய அரசுக்கு கோரிக்கை என்று இழுத்து இறுதியில் அந்தப் பகுதியில் கடும் அடக்குமுறை கொண்டு ஒடுக்கி வருகிறது. கூடங்குளம் போராட்டக் குழுவினர் கூட ஜெயாவை இறுதிவரை நம்பினார்கள் என்பதும் உண்மையில்லையா?
இதே போன்று மூவர் தூக்கு விவகாரத்திலும் அவர் அடித்த பல்டியை நினைவுபடுத்திக் கொள்வோம். வரலாறு இத்தனை சாட்சியங்களை கொண்டிருந்தும் ஒவ்வொரு முறையும் ஜெயா அடிக்கும் சவடால்கள் கணிசமானோரை ஈர்க்கவே செய்கிறது. இதன் அரசியல் அடிப்படை என்ன?
மக்கள் நலன் சார்ந்த ஒரு பிரச்சினைக்கு நாம் அதில் பாதிப்படையும் மக்களையும், பாதிக்காத பிற பிரிவு மக்களிடையே பிரச்சாரம் செய்தும் அணிதிரட்டி போராட வேண்டும். ஆனால் அத்தகைய மக்கள் திரள் வேலையினை சுமையாகக் கருதும் நடுத்தர வர்க்க அரசியல் முன்னணியாளர்கள்தான் இப்படி அரசு, ஆளும் கட்சிகள் வழியாக ஏதும் நல்லது நடக்காதா என்று முயல்கிறார்கள். மக்கள் சக்தியால் நடைபெற வேண்டிய ஒரு விசயம் ஜெயா அரசால் மட்டுமே நடைபெற முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இது குறுக்கு வழி என்ற போதும் அவர்கள் விரும்பியே செல்கிறார்கள். மக்களை நம்பாத எவரும் இத்தகைய சமரச அழிவுப் பாதையில்தான் பயணிக்க முடியும்.
எனவே ஜெயாவை, அவர் எந்த வர்க்கங்களை பிரதிபலிக்கிறார், யாருக்காக ஆட்சி நடத்துகிறார், அவரது பழைய வரலாறு என்ன?, என்று முழுமையிலிருந்து மதிப்பிடாமல் சில பல அதிரடி சவடால்களை வைத்து ஏமாந்தோம் என்றால் எந்த மக்கள் பிரச்சினைக்காகவும் நாம் போராட முடியாது. அப்படி போராடுபவர்களை வலுவிழக்கச் செய்வதற்குத்தான்  ஜெயாவின் புரட்சி-புரட்டு நடவடிக்கைகளை பார்த்து ஆதரிப்பவர்கள் துணை போகிறார்கள். vinavu.com

கருத்துகள் இல்லை: