வியாழன், 2 பிப்ரவரி, 2012

திமுக கொ.ப.செ. கனிமொழி? துணைத் தலைவர் ஸ்டாலின்?


சென்னை: தமிழ்நாட்டின் பரபரப்பான அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் திமுகவின் பொதுக்குழு சென்னையில் நாளை கூடுகிறது.

திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெறும் பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது என்பதைவிட திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தில் சுழன்றடித்து வரும் புயல்களுக்கு அணை போடும் நடவடிக்கைக்களே அதிகம் இருக்கும் என்பது திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு.

கொ.ப.செ. கனிமொழி?:

நாட்டையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்தவர் கருணாநிதியின் மகள் கனிமொழி. இதனால் கனிமொழிக்கு கட்சியில் முக்கிய பதவி தரப்பட வேண்டும் என கருணாநிதிக்கு அவரது துணைவியார் ராஜாத்தி நெருக்கடி கொடுத்து வருகிறார்.

கனிமொழி சிறைக்குப் போக காரணமாக இருந்தவர் ஆ.ராசா. திகார் சிறையை விட்டு வெளியே வர முயற்சி செய்யாமல் தொடர்ந்து பிடிவாதமாக உள்ளேயே இருக்கிறார். அவர் திமுகவில் வகித்த பதவி கொள்கை பரப்புச் செயலாளர்.

இதனால் அந்தப் பதவியை கனிமொழிக்குத் தர வேண்டும் என்பது ஒரு தரப்பினரின் கோரிக்கை.

இதே நேரத்தில் கொ.ப.செ. பதவியை சிறைக்குப் போன கனிமொழிக்கு கொடுக்கக் கூடாது என்று மு.க. அழகிரி லாபி தடுத்து வருவதாகவும் தெரிகிறது.

அழகிரி வருவாரா?:

ஏற்கெனவே தனது அடிப்பொடிகளை போலீஸ் அவ்வப்போது அள்ளிக்கொண்டு போகும் நிலையில் குடும்பத்துக்குள் மோதலை தவிர்க்க அழகிரி பொதுக்குழுவை புறக்கணிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

துணைத் தலைவர் ஸ்டாலின்?

தற்போதைய திமுக பொதுக்குழுவில் கனிமொழிக்கு எப்படியாவது கட்சிப் பதவியை வாங்கிவிட ஒருதரப்பு துடிப்பதைப் போல இப்போதே தளபதிக்கு மகுடம் சூட்டியாக வேண்டும் என்று கொடிபிடிக்கிறது ஒரு குரூப்!

திமுகவின் பொருளாளராக இருக்கிறார் ஸ்டாலின். பொதுச்செயலாளர், தலைவர் என்ற படிநிலைகள்தான் அடுத்து இருப்பவை.

பொருளாளராக இருந்த ஆர்க்காடு வீராசாமிக்கு 'வாலண்டரி ரிட்டயர்மெண்ட்' கொடுத்து ஸ்டாலினுக்கு பொறுப்பு கொடுத்தது திமுக.

இதே 'பார்முலாவை' பொதுச்செயலாளராக அன்பழகனுக்கு பொருத்திப் பார்க்குமா பொதுக்குழு என்று ஒருதரப்பு எதிர்பார்க்கிறது.

'இப்பவே என்ன அவசரம்! இருக்கட்டும்... பார்க்கலாம்' என அழகிரி தரப்பு எகிறுவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால், ஸ்டாலினை துணைத் தலைவராக்கிவிடுவதில் தயாநிதி தரப்பு லாபி ரொம்பவே தீவிரம் காட்டுகிறதாம்.

இளைஞரணியில் தயாவா? உதயாவா?

இதேபோல் திமுக இளைஞரணியின் வயது பற்றி அதன் செயலாளர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட திடீர் ஞானோதயம் பொதுக்குழுவில் எதிரொலிக்கக் கூடும் என்று தெரிகிறது.

'எல்லாமே சென்னைக்காரங்களுக்குத் தானா? எங்களுக்கு என்னதான் இருக்கு' என்ற அழகிரியின் ஆவேச விசும்பலுக்கு ஆறுதல் பரிசு இந்தப் பிரிவில் கிடைக்கலாம்.

மு.க. அழகிரியின் மகன் தயாவுக்கு இளைஞரணியில் முக்கிய பொறுப்பு கொடுத்து 'புது ரத்தம்' பாய்ச்சுவதன் மூலம் குடும்பத்துக்குள் கலகத்தை ஏற்படுத்தும் புயலை சற்றே கரை ஏற்றி வைக்கலாம் என்பது கருணாநிதியின் கணக்கு என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.

இவைதான் திமுகபொதுக்குழு உள்ள பிரதான நாட்டு நடப்புகள். இவை அல்லாமல் கட்சியில் எதிர்காலத்தில் 'வாரிசுகளுக்கு" சிக்கல் வராத வகையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

விஜயகாந்த்:

பொதுக்குழு கூடும் சூழலில் விஜயகாந்தை விரட்டி அடித்துவிட்டார் ஜெயலலிதா. விஜயகாந்தும் மல்லுக்கு சவாலாக நிற்கிறார்.

அதிமுகவும் காங்கிரஸ் இயற்கையான கூட்டணி என்று ஒரு காலத்தில் வருணிக்கப்பட்டது வரலாறு. இப்போது திமுகவும் தே.மு.தி.க.வும் இயற்கையான கூட்டணியாக உருவெடுக்கக் கூடிய தருணம்.

தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்த கேப்டனுக்கு அம்மாவும் எதிரி. அய்யாவும் எதிரி.

கூட்டணி சேர்ந்த போது அய்யா மட்டும்தான் எதிரி.

இப்போது அம்மாதான் முதல் எதிரி. அய்யா பரவாயில்லை என்கிற நிலையில்.

இருவருக்கும் பொதுஎதிரியாக ஜெயலலிதா மாறிவிட்ட நிலையில் திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் விஷயமும் ஹைலைட்டாக இருக்கக் கூடும்.

குடும்ப களேபரங்கள், அரசியல் திருப்பங்களை திமுக பொதுக்குழு எதிர்கொள்ளும் விதம் நாளைக்கு தெரிந்துவிடும்

கருத்துகள் இல்லை: