கொஞ்சம் மேலோட்டமாக பாருங்கள், இந்த குற்றச்சாட்டை தே.மு.தி.க நேரடியாக வைக்கவில்லை! வெளியே பேசிக்கொள்கிறார்கள் என்பதன் மூலம் இதை புரட்சித்தலைவியின் மனம் கோணாமல் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ளலாம். அந்த வகையில் தே.மு.தி.கவின் உறுப்பினர்கள் அம்மா பயத்தில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. ஏற்கனவே இவர்களுக்கு வரலாறும் தெரியவில்லை, புவியியலும் தெரியவில்லை என்று அம்மா ஏகப்பட்ட டோஸ் கொடுத்திருக்கிறார்.
இப்போதும் அப்படித்தான். மின் கட்டண உயர்வை நிர்ணயிப்பது அரசு கிடையாது, மின்சார ஒழுங்குமுறை ஆணையம்தான் நிர்ணயிக்கிறது, கருத்து கேட்பதும் கூட அவர்களது விதிமுறையின் கீழ்தான் நடக்கிறது, தான்தோன்றித்தனமாக கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கவில்லை, இந்த அடிப்படை விவரம் கூட தெரியாமல் பேசுவது உறுப்பினரின் அறியாமையைக் காட்டுகிறது என்று ஜெயலலிதா சீறினார்.
அல்லிராணி அவையில் வெளியே சில ஆட்டுக்குட்டிகள் பசியில் கத்துகின்றன என்று பேசுவதை உள்ளே ஒரு அடிமை முணுமுணுத்தது கூட அல்லிராணிக்கு அலர்ஜி என்பதுதான் விசயம். இப்படித்தான் புரட்சிக் கலைஞருக்கும், புரட்சித் தலைவிக்கும் உள்ளே ஆவேச வாதங்கள் துவங்கின.பால் விலை, பேருந்து கட்டண உயர்வை உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பேயே அமல்படுத்தவில்லையே ஏன் என்று தே.மு.தி.க அப்பாவிகள் அடுத்த கேள்வியை கேட்டதால் சினமடைந்த ஜெ இதெல்லாம் ஏனென்று மக்களிடம் விளக்கிவிட்டேன், நீ யார் கேட்பதற்கு என்று சீறினார். கூடவே இதை சவால் விட்டுப் பேசும் அக்கட்சி சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்து வேட்பாளரை நிறுத்தி போட்டியிட தில் உள்ளதா என்று சவால் விட்டார். அதாவது மேற்கண்ட கட்டண உயர்வுக்கு பிறகு நடக்கும் தேர்தலில் கூட நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது ஜெவின் சவால்.
உண்மையில் இது சவால் இல்லை வெறும் போங்காட்டம் என்பது அதிர்ஷ்டவசமாக கேப்டனுக்கும் பட்டிருப்பது குறித்து கொஞ்சம் ஆச்சரியம்தான். அவரும் தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதும், அது போன்ற அதிகார பலத்தால் நீங்களும் சங்கரன்கோவிலில் வெற்றி பெறுவீர்கள் என்பது தனக்குத் தெரியுமென்று பேச இரு தரப்பு அடிமைகளும் ஆவேசமாக சண்டை போட்டனர்.
விஜயகாந்த் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டாரென ஜெ பேச, பென்னகரத்தில் நீங்கள் டெபாசிட் கூட வாங்கவில்லையே என்று பதிலுக்கு விஜயகாந்த் பேச சண்டை வலுத்திருக்கிறது. பின்னர் அ.தி.மு.கவினர் கையை காட்டி பேசியதாக கேப்டன் சீற அவரது கட்சியினர் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் தே.மு.தி.கவினரின் பிரச்சினையை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக சபாநாயகர் ஜெயக்குமார் அறிவித்தார். உண்மையில் இவர்கள் அனைவரையும் சட்டசபை நடக்கும் காலம் முழுவதும் சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும், போனால் போகிறதென இத்தோடு முடித்திருக்கிறோம் என்று ஜெ உறுமியிருக்கிறார்.
இதன்பிறகு சட்டசபையில் தான் கூட்டணி வைத்தாலும், வைத்திருக்காவிட்டாலும் அ.தி.மு.க பெரு வெற்றி அடைந்திருக்குமெனவும், தன்னோடு கூட்டணி வைத்ததால்தான் தே.மு.தி.கவினருக்கு எதிர்க்கட்சி அந்தஸ்டு கிடைத்திருக்கறது, தகுதியில்லாவர்களெல்லாம் பதவிக்கு வந்தால் என்ன ந்டக்குமென்பது தற்போது தெரியவந்திருக்கிறது, இவர்களோடு கூட்டணி வைக்க தான் விரும்பவில்லை, கட்சிக்காரர்களுக்காகத்தான் கூட்டணி வைத்தேன் என்றெல்லாம் ஜெ பொங்கியிருக்கிறார்.
இந்த இரண்டு ஈகோ ஃபேக்டரிகளும் சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்த போதே இதைபற்றி எழுதியிருக்கிறோம். ஜெயலலிதாதான் விஜயகாந்த், விஜயகாந்துதான் ஜெயலலிதா என்பதால் இந்த இரண்டு குண்டு ஆளுமைகளும் சேர்ந்திருப்பது சாத்தியமே இல்லை என்பதையும் அப்போது எழுதினோம்.
தகுதி குறித்து ஜெ பேசியிருப்பது அவரது பார்ப்பன மேட்டிமைத் திமிரில் கலந்த ஒன்று. கண்ட கண்ட நாய்களெல்லாம், அறிவில்லாத கூமுட்டைகளெல்லாம் அரசியலுக்கு வந்து நாறடிக்கின்றன என்பதுதான் அவரது பேச்சின் உட்கிடை. தன்னைப் போன்ற கான்வென்டு எஜுகேட்டட் சீமாட்டிகளெல்லாம் இத்தகைய அறிவிலிகளோடு காலம் தள்ள வேண்டியிருக்கிறதே என்பது அவரது பொறுமல்.
எல்லாவற்றும் மேலாக தேர்தல் காலத்தின் போது அவர் கூட்டணி வைத்தது என்பது அவரது கூற்றுப்படி அவர் விரும்பிய ஒன்றல்ல. எப்படியாவது தி.மு.கவை தோற்கடிக்க வேண்டுமென்ற பொதுக்கருத்தை அறுவடை செய்து கொள்ள வேறு வழியின்றித்தான் அவர் கூட்டணி வைத்தார். சோ போன்ற தரகர்களும் அதற்கு தீவிரமாக முயற்சி செய்தனர். அப்படியும் அந்த கூட்டணியை கேலிக்குள்ளாக்கும் வகையில் அவர் தனியாக வேட்பாளர்களை அறிவித்ததும், அப்போதும் கூட தே.மு.தி.க மற்றும் போலிக்கம்யூனிஸ்டுகள் வெட்கம், மானம், ரோஷமின்றி அம்மாவை கூல் செய்து கூட்டணியை தொடர்ந்ததும் வரலாறு.
இந்த நிலையில் ஈழப்பிரச்சினைக்காகத்தான் ஜெ வெற்றி பெற்றார் என்று நமது தமிழின ஆர்வலர்கள் இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது அம்மாவின் கவனத்திற்கு போனால் அனைவருக்கும் குண்டாஸ் சட்டத்தில் உள்ள போவது உறுதி. ஏற்கனவே ஈழத்தாய் பட்டம் கொடுத்து அம்மாவை தொழுது வணங்கிய நாம் தமிழர் புலி சீமான் இப்போது ஆட்டுக்குட்டியாய் அடைந்து கிடைக்கிறார்.
ஜெ வெற்றி பெற்றதும் முற்றிலும் மாறிவிட்டார் என்று பார்ப்பன ஊடகங்களும், தி.மு.க எதிர்ப்பாளர்களும், போலிக் கம்யூனிஸ்டுகளும், தமிழின – ஈழ ஆர்வலர்களும் பிதற்றித் திரிந்தது அடி முட்டாள்தனம் என்பதை முன்னரே சொன்னபோது அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இதற்கு மேல் சொல்ல ஒன்னுமில்லை.
உள்ளாட்சித் தேர்தலின் போதே இதை ஜெ பட்டவர்த்தனமாக தெரியப்படுத்தினார் என்றாலும் கூட்டணியில் இருந்த தே.மு.தி.க, போலிக் கம்யூனிஸ்டுகள் எல்லாம் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அப்போதும் சரி, அதன் பின்னரும் சரி இவர்கள் அனைவரும் ஜெவை பயபக்தியோடுதான் அணுகினர் அல்லது விமரிசித்தனர். இன்று கூட இவர்கள் ஜெவே எதிர்ப்பதெல்லாம் அவர்களது சொந்தக் கருத்து, கட்சி காரணமாக இல்லை. அதுவும் கூட ஜெவே பிடித்து தள்ளியதால் வந்த முரண்பாடுதான். இதில் கொள்கை, மக்கள் நலன், என்று எதுவுமில்லை.
ஆனாலும் சில அப்பாவிகள் அடிமைகளான தே.மு.தி.கவின் எதிர்ப்பை வைத்து விஜயகாந்தை ஏதோ மாபெரும் புரட்சி வீரனாக சித்தரிப்பதைப்ப பார்த்தால் இதற்கு ஜெவே தேவலாம் என்று தோன்றுகிறது. ஒரு கட்டவுட் நாயகனுக்கும், ஒரு கட்டவுட் நாயகிக்கும் நடக்கும் சவுடால் சண்டையை காமடியாக புரிந்து கொள்ளுமளவு கூட நமகு மக்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லை என்றால் என்ன செய்வது? கவுண்டமனி, வடிவேல், விவேக் நகைச்சுவை காட்சிகளைப் பார்த்து சிரித்த மக்களின் தரம் இதுதான் என்றால் நம் நகைச்சுவை அறிவிலும் பெரிய கோளாறு இருப்பது உறுதி.
இதில் சசிகலா நீக்கத்தை வைத்து ஜெவின் அனைத்து பாவங்களையும் கழுவி புனிதப்படுத்திய பார்ப்பன ஊடகங்கள் இப்போது என்ன சொல்வார்கள்? மன்னார் குடி கும்பல் போய், மயிலாப்பூர் கும்பல் வந்த பிறகும் இதுதாண்டா ஜெ என்று அவர் காட்டிவிட்டதை குற்ற உணர்வுடன் ஒத்துக் கொள்வார்களா?
சுயமோகமும், பார்ப்பன விழுமியங்களும், அதிகார வர்க்கத்தை வைத்து பாசிச ஆட்சி நடத்தும் ஒரு சர்வாதிகாரிதான் ஜே என்பைதயும் இந்த பாசிஸ்ட்டை விஜயகாந்த் போன்ற அட்டைக்கத்தி ‘வீரர்கள்’ எதிர்க்க முடியாது என்பையும் இந்த அக்கப்போரிலிருந்து நாம் எளிமையாகவே புரிந்து கொள்ளலாம். முல்லைப் பெரியாறு, கூடங்குளம் என்று மக்களின் ஜீவாதாரா பிரச்சினைகள் பேசப்படும் காலத்தில் இந்த அக்கப்போர்களெல்லாம் மாபெரும் பாரதப் போர் என்று அரசியலாக முன்வைக்கப்படும் துரதிர்ஷடமான காலத்தில் நாம் வாழ்கிறோம்.
மக்கள் நலனிலிருந்து மட்டுமே அரசியல் மலர முடியுமென்பதை புரிந்து கொள்வதற்கு இந்த எதிர்மறை சான்றும் ஒரு எடுத்துக்காட்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக