செவ்வாய், 31 ஜனவரி, 2012

A.R.Rahman எப்படி குதறி இருந்தார் என்பதையும் நாடே அறியும்

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், ராமனாதன், இளையராஜா போன்ற இந்துமதத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர்களை பற்றி எழுதியிருக்கிறீர்கள். ஆனால், இந்தியாவிற்கு ஆஸ்கார் விருது வாங்கித்தந்த ஏ.ஆர். ரகுமான் பற்றி இதுவரை ஒன்றுமோ சொல்லவில்லையே?
-கே. அப்துல்காதர், திருச்சி.
சொல்லிட்டா போச்சி.
கதையின் படி, பழைய காலத்தை நினைவூட்டுவதற்காக அல்லது கதாபாத்திரம் நினைத்துப் பார்ப்பதாக ஒரு பழையப் பாடலை கொஞ்சம் மாற்றி பாடுவதில் தவறில்லை.
அப்படிதான் தியாகராஜ பாகவதர் பாடிய “ராதே உனக்கு கோபம் ஆகாதடி” என்று ‘செஞ்சுருட்டி’ ராகத்தில அமைந்தப் பாடலை, அதற்கு பின் வந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் கொஞ்சம் வேகம் கூட்டி டி.எம். சவுந்தரராஜனை  பாட வைத்தார்.

“உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்” என்று ‘ஹரிகாம்போதியில்’ மெல்லிசை மன்னர் இசையமைத்தப் பாடலை, இசைஞானி இளையராஜா பழைய பாடலின் பின்னணி இசையை மட்டும் கொஞ்சம் மாற்றி, “பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை” என்று மெல்லிசை மன்னருக்கு மரியாதை செய்திருப்பார்.
இது முன்னர் இருந்த மேதைகளுக்கு, அதே துறையைச் சார்ந்த மேதைகள் செய்த கவுரம். ஆனால் இப்போது நடப்பதோ களவானித்தனம்.
பழைய பாடல்களை மறைமுகமாக திருடி இசையமைத்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது நேரடியாக பகிரங்கமாக ரீமிக்ஸ் என்ற பெயரில் வழிப்பறி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த மோசடியை ஆரம்பித்து வைத்தது, நமது ‘ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர். ரகுமான். ‘படகோட்டி’ படத்திற்கு மெல்லிசை மன்னர் அமைத்த ‘தொட்டால் பூ மலரும்’ என்ற புதுமையான  ஒலிகளை கொண்ட இசையை ‘பாவம் கொடூரன்’ எஸ்.ஜே. சூர்யா என்பவருக்காக களவாடியிருந்தார் ரகுமான். ‘பொன் மகள் வந்தாள்’  மெல்லிசை மன்னரால், மேற்கத்திய இசை கருவிகளை கொண்டு நுட்பமாக  இசையமைக்கப்பட்ட மிக நவீனமான, இனிமையான பாடல்.  அதை ரகுமான் எப்படி குதறி இருந்தார் என்பதையும் நாடே அறியும்.
ஆனால் ரகுமான் மீதான கோபம், இவைகளால் மட்டுமல்ல. கே. பாலசந்தரும், மணிரத்தினமும் இணைந்து இஸ்லாமியருக்கு எதிராக ‘ரோஜா’  என்ற திரைப்படத்தை மட்டும் தரவில்லை.  இசைஞானி இளையராஜாவிற்கு எதிராக ஏ.ஆர். ரகுமான் என்பவரையும் திட்டமிட்டு தயாரித்தார்கள்.
கே.ஆர். நாராயணனுக்கு எதிராக அப்துல்கலாமை பா.ஜ.க., தயாரித்ததைப் போல்.
அந்த விசுவாசம் ரகுமானுக்கு இருந்ததால்தான், ‘ரோஜா’ ‘பம்பாய்’ போன்ற இஸ்லாமிய எதிர்ப்புத் திரைப்படங்களில் அவருடைய இசையும் இஸ்லாமிய எதிர்ப்புக் குறியீடுகளாகவும், `இஸ்லாமிய இசை` தீவிரவாத  அடையாளமாகவும் பயன்படுத்தப்பட்டிருந்தது.
வழக்கமாக வில்லனுக்கான பின்னணி இசை அச்சமூட்டுகிற ஒலி, அல்லது திகிலூட்டுகிற இசை என்றுதான் இருக்கும். ஆனால் இந்தப் படம்தான் முதல் முறையாக இஸ்லாமிய இசையை, பாங்கு ஒலியை வில்லனுக்கான பின்னணியாக மாற்றியது. இஸ்லாமிய இறைவழிபாட்டு முறைகூட வில்லத்தனமான அடையாளமாக காட்டியது.
இதற்காகவே அந்த படத்தின் இசைக்காக தேசியவிருதும் வழங்கப்பட்டது. ‘வந்தே மாதரம்’ பாடல் வழியாக ஆஸ்கார் விருதுவரை ஏ.ஆர். ரகுமானை அழைத்தும் சென்றது.
இன்று கூட இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்களும், இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கிட்டை எதிர்க்கிற ஆதிக்க ஜாதிக்காரர்களும், ஏ.ஆர். ரகுமான் மற்றும் அப்துல் கலாமின் ஆதரவாளர்கள்தான்.
இவர்களை ஆதரிப்பதின் மூலமாக, தங்களின் இஸ்லாமிய எதிர்ப்பை மறைத்துக் கொள்கிறார்கள் அல்லது இஸ்லாமிய ஆதரவாளர்களாக சித்தரித்துக் கொள்கிறார்கள்.
இந்த பாணியில் அப்துல்கலாம் நேரடியான அரசியல் குறயீடு என்றால், ரகுமான் கலைவடிவ குறீயிடு.
www.mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை: