இந்த லைசென்ஸ்களை வழங்கியவர் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 122 லைசென்ஸ்களையும் ரூ. 9,000 கோடிக்கு விற்றார் ராசா. இதனால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மத்திய அரசின் கணக்குத் தணிக்கை அதிகாரியான சிஏஜி குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து முறைகேடாக ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்றதாக 11 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இதைத் தொடர்ந்து இந்த முறைகேட்டுக்கு உதவியதாக ஆ.ராசா மற்றும் பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில் இன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதன்படி 2008ம் ஆண்டுக்குப் பின் 11 தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122, 2ஜி லைசென்ஸ்களையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த 122 லைசென்ஸ்களில் 85 லைசென்ஸ்கள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், ராசா பதவியில் இருந்தபோது வழங்கிய அனைத்து லைசென்ஸ்களையும் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துவிட்டது.
இதில் டாடா நிறுவனத்தின் 3 லைசென்ஸ்களும், வீடியோகான் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், லூப் டெலிகாம் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், யூனிநார் நிறுவனத்தின் 22 லைசென்ஸ்களும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் 13 லைசென்ஸ்களும், சிஸ்டமா-ஸ்யாம் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், எடிசலாட்-டிபி நிறுவனத்தின் 15 லைசென்ஸ்களும், எஸ் டெல் நிறுவனத்தின் 6 லைசென்ஸ்களும், ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் 9 லைசென்ஸ்களும் அடக்கம்.
இந்த அனைத்து லைசென்ஸ்களையும் ரத்து செய்யுமாறு மத்திய தொலைத் தொடர்புத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்குத் தொடர்பாக தன்னிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் மத்திய கண்காணிப்பு ஆணையத்திடம் (Central Vigilance Commission- CVC) ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
ராசாவின் பதவிக் காலத்தில் 2ஜி லைசென்ஸ்கள் சட்ட விரோதமாகவும் முறையற்ற வகையிலும் விற்கப்பட்டதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிபதிகள் சிங்வி, கங்கூலி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இந்தத் தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கில் தீர்ப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தாக்கல் செய்தது அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த பிரசாந்த் பூஷண் மற்றும் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக