Saturday, January 28, 2012
இந்திய பிஸினஸ் வரலாற்றில் நகரத்தார்கள் அடைந்த வளர்ச்சிக்கு அளவே இல்லை; அதேபோல அவர்கள் இழந்த சொத்துகளுக்கும் அளவில்லை. ராப்பகல் என்று பார்க்காமல், குடும்பத்தையும் குழந்தைக் குட்டிகளையும் பிரிந்து, ஒவ்வொரு காசாக தேடித் தேடி சேர்த்தவர்கள் கடைசியில் அதை அநியாயமாக இழந்தது கொடுமையிலும் கொடுமை.
இப்படி மிகப் பெரிய அளவில் சொத்துக்களை இழந்தபோதும், இன்றைக்கும் பெயர் சொல்லும்படியாக, நகரத்தார் சமூகத்திற்குப் பெருமை சேர்க்கும் விதமாக வாழ்ந்தவர்தான் எம்.சிடி.எம்.சிதம்பரம் செட்டியார். யார் இந்த சிதம்பரம் செட்டியார்?
இரண்டு வாரங்களுக்கு முன்பு செட்டி நாட்டு அரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரைப் பற்றி விரிவாகப் பார்த்தோம் அல்லவா? ராஜா சர் அண்ணாமலை யின் மூத்த சகோதரர் சிதம்பரம் செட்டியாருக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் முத்தையா செட்டியார். இவர் சென்னையின் செரீப்-ஆக இருந்தவர். (இரண்டாவது மகன் பெத்தாச்சி செட்டியார் கரூருக்குப் பக்கத்தில் உள்ள ஆண்டிப்பட்டியின் ஜமீன்தாராக இருந்தார்!)
1922-ல் எட்டாம் எட்வர்ட் அரசர் சென்னைக்கு வந்த போது, பிரம்மாண்டமான வரவேற்பு தந்தார் முத்தையா செட்டியார். பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு 'சர்’ பட்டம் வழங்கி கௌரவித்தது.
'சர்’ முத்தையா செட்டி யாருக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் சிதம்பரம், 1908-ல் கானாடுகாத்தானில் பிறந்தார். இந்த அத்தியாயத்தில் நாம் விரிவாக பார்க்கப் போவது இவரைப் பற்றித்தான்.
'சர்’ முத்தையா செட்டியார் நாற்பது வயதானபோது அகால மரணமடைந்தார். அப்போது சிதம்பரம் செட்டியாருக்கு வெறும் 21 வயதுதான். புதிய வாய்ப்புகளைத் தேடும் உற்சாகமும் சதாசர்வ காலமும் கண்களில் துருதுரு பார்வையும் சுறுசுறுப்பும் சிதம்பரத்திடம் எப்போதும் இருந்தது.
இத்தனைக்கும் அவர் பள்ளிப்படிப்பைகூட முடிக்கவில்லை. கானாடு காத்தானில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு, சென்னையில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் ஹைஸ்கூலில் சேர்ந்தார்.
அச்சமயத்தில் பள்ளி யில் விழுந்து விழுந்து படிப்பதைவிட, வீட்டில் அளிக்கப்படும் நடைமுறைப் பயிற்சி செட்டியார் வீட்டு குழந்தைகளுக்குப் பிரதானமாக இருந்தது. பிற்காலத்தில் அவர்கள் பிஸினஸ் ஜாம்பவான்களாக விளங்குவதற்கும் இதுவே முக்கிய காரணமாக இருந்தது. சிதம்பரத்திற்கும் இந்த பயிற்சி குறைவில்லாமல் அளிக்கப்பட்டது. அவரும் ஒரு குறையும் இல்லாமல் அந்த பயிற்சியைப் பெற்றார்.
பள்ளிப் படிப்பை முடிக்காத இந்த மாணவன்தான் பிற்காலத்தில் ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தையும், ஒரு வங்கியையும் வெற்றிகரமாக நடத்தினார் என்றால் நம்ப முடிகிறதா? எப்படி சாத்தியமானது இது?
யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ்!
1906-ல் விஜயேந்திர ராவ் என்பவர் யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் என்கிற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். ஏழைகளுக்கும் மத்தியதர மக்களுக்கும் குறைந்த செலவில் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வழங்க வேண்டும் என்பதே இந்நிறுவனத்தின் நோக்கமாக இருந்தது.
1922-ல் விஜயேந்திர ராவ் இறந்தபிறகு, அந்த நிறுவனம் தடுமாற ஆரம்பித்தது. சரியான நேரத்தில் இந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு கைகொடுக்க முன்வந்தார் சிதம்பரம் செட்டியாரின் தந்தையார் எம்.சிடி.முத்தையா செட்டியார். அவரும் 1929-ல் இறந்து போகவே, அவருடைய மகனான சிதம்பரம் செட்டியார் யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்குத் தலைமை ஏற்க வேண்டியிருந்தது.
அதுநாள்வரை பெரிய வளர்ச்சி காணாமலேயே இருந்த இந்நிறுவனம், சிதம்பரம் செட்டியார் தலைமை ஏற்றவுடன் வேகமான வளர்ச்சிகாண ஆரம்பித்தது. உள்நாட்டில், அதுவும் தென் இந்தியாவில் மட்டுமே இருந்த இந்நிறுவனத்தை பர்மா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என பல நாடுகளுக்கும் கொண்டு சென்றவர் சிதம்பரம் செட்டியார்.
1932-ல் யுனைடெட் இந்தியா வெள்ளி விழா கொண்டாடிய சமயத்தில் சில்வர் ஜூப்ளி பாலிசி ஒன்றை அறிமுகப்படுத்தினார் சிதம்பரம் செட்டியார். பாலிசி அறிமுகமான 24 மணி நேரத்தில் 10 லட்சம் ரூபாய் வசூலானதில் இருந்தே சிதம்பரம் செட்டியார் இந்நிறுவனத்தை எப்படி நடத்தினார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை அளிக்க யுனைடெட் இன்ஷூரன்ஸ் நிறுவனம் இருக்க, ஜெனரல் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை அளிக்க யுனைடெட் இந்தியா ஃபயர் அண்ட் ஜெனரல் என்கிற நிறுவனத்தையும் தொடங்கினார். தென் இந்தியாவிலிருந்து தொடங்கப்பட்ட முதல் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் இதுதான்.
1956-ல் எல்.ஐ.சி. நிறுவனம் தொடங்கப்பட்டபோது, யுனைடெட் இந்தியாவும் நியூ கார்டியன் லைஃப் இன்ஷூரன்ஸும்தான் முதலில் எல்.ஐ.சி.யுடன் இணைக்கப்பட்டன.
தற்போது அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தை 14 மாடிகள் கட்டுவதற்கான திட்டத்தை 1953-ல் நடந்த ஆடிட் ஜெனரல் மீட்டிங்கில் அறிவித்தார் சிதம்பரம் செட்டியார். 1956-ல் யுனைடெட் இந்தியாவின் பொன் விழா ஆண்டு விழாவின்போது அந்த கட்டடம் தயாராகிவிடும் என்று அறிவித்ததோடு, முழுமூச்சில் அதை கட்டியும் முடித்தார்.
ஆனால், அந்த ஆண்டுதான் இந்தியாவில் இருந்த அத்தனை இன்ஷூரன்ஸ் நிறுவனங் களையும் இந்திய அரசாங்கம் அரசுடமை ஆக்கியது.
பாடுபட்டு வளர்த்த யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை ஒரேநாள் இரவில் அரசாங்கம் எடுத்துக் கொண்டது நாட்டுக்கு வேண்டுமானால் நல்ல விஷயமாக இருக்கலாம்; ஆனால், அதை கண்ணும் கருத்துமாக வளர்த்த சிதம்பரம் செட்டியார் குடும்பத்திற்குப் பெரிய இழப்புதான்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி!
1910-களில் தமிழ்நாட்டில் பல கூட்டுறவு வங்கிகள் தொடங்கப்பட்டன. 1901-ல் தஞ்சாவூர் பேங்க், 1903-ல் திருநெல்வேலியில் சவுத் பேங்க், 1904-ல் கும்பகோணம் சிட்டி யூனியன் பேங்க், 1905-ல் மெட்ராஸ் சென்ட்ரல் யூனியன் கோ-ஆப்ரேட்டிவ் பேங்க் என வரிசையாக பல வங்கிகள் தொடங்கப்பட்டன.
ஆனால், பெரிய வங்கி நம்மிடம் எதுவுமில்லையே என்கிற வருத்தம் நம் மூதாதையர்களிடம் இருந்தது. இந்த வருத்தத்தைப் போக்குவதற் காகத் தொடங்கப்பட்டதே இந்தியன் பேங்க்.
இந்தியன் பேங்க் தொடங்கப் பட்ட சமயத்திலிருந்தே நகரத்தார்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. 1929-ல் இந்தியன் வங்கியில் இருந்த 47 போர்டு உறுப்பினர்களில் 22 பேர் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
சிதம்பரம் செட்டியாரின் தந்தை 'சர்’ முத்தையா செட்டியாரும் இந்தியன் வங்கி போர்டு உறுப்பினர்களில் ஒருவர். அவர் காலமானபிறகு அந்த பதவி சிதம்பரம் செட்டியாருக்கு கிடைத்தது.
இந்தியன் வங்கி நல்ல வளர்ச்சி கண்டு வந்தபோதிலும், இன்னும் பல புதிய வேலைகளைச் செய்ய வேண்டும் என்று நினைத்தார் சிதம்பரம் செட்டியார். குறிப்பாக, பர்மா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என பல்வேறு வெளிநாடுகளில் கிளை அலுவலகத்தைத் திறக்க வேண்டும் என்பது சிதம்பரம் செட்டியாரின் ஆசை.
அந்த வேலையை இந்தியன் வங்கியின் மூலம் செய்ய முடியாதபோது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்னும் புதியதொரு வங்கியை திறந்தார் சிதம்பரம் செட்டியார்.
1936, நவம்பர் 20 அன்று உதயமானது ஐ.ஓ.பி. வங்கி. இந்த வங்கியைத் தொடங்கியபோது சிதம்பரம் செட்டியாருக்கு வெறும் முப்பது வயதுதான்.
ஐ.ஓ.பி. ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே பர்மா, மலேசியா, இலங்கை, ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற வெளிநாடு களிலும் மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், அமிர்தசரஸ், கொச்சி என இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் கிளை தொடங்கி வெற்றிகரமாகச் செயல்படுத்தினார். அடுத்த பத்தாண்டுகளில் அமெரிக்கா, இங்கிலாந்திலும் கால் பதித்தது ஐ.ஓ.பி.
1936-ல் 25 லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட ஐ.ஓ.பி., 1969-ல் வங்கிகளை தேசிய உடைமையாக்கப்பட்ட போது அரசாங்கமே எடுத்துக் கொண்டது. இதுவும் அந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பே!
திருவாங்கூர் ரேயான்!
1946-ல் கேரளாவில் கொச்சிக்கு அருகே செயற்கை நூலிழை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் செயற்கை நூலிழை தயாரிக்கும் நிறுவனம் இது. கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் படிப்படியாக வளர்ந்து பெரும் வளர்ச்சி கண்டு வந்தது.
விமான விபத்து!
1954. பிஸினஸ் விஷயமாக தெற்காசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார் சிதம்பரம் செட்டியார். இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் ஐ.ஓ.பி. வங்கிக் கிளை தொடங்குவது தொடர்பாக அங்கு விமானத்தில் சென்றார். விமானம் தரையிறங்கும் சமயத்தில் விபத்துக்குள்ளானதால் அதில் பயணம் செய்த அத்தனை பேரும் இறந்தனர். அப்போது அவருக்கு வெறும் 46 வயது!
இந்த விபத்து மட்டும் நடக்காமல் இருந்திருந்தால், அவர் மிகப் பெரிய பிஸினஸ் மேனாக இருந்திருப்பார். இன்னும் பல நிறுவனங்களை உருவாக்கி வெற்றி கண்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
thanks vikatan +muthaiah singapore
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக