திங்கள், 12 செப்டம்பர், 2011

தே.மு.தி.க.,- காங்கிரசுக்கு தலா 2 மாநகராட்சிகள்: விரைவில் பேச்சு துவக்கம்

தலா இரண்டு மாநகராட்சிகளை தே.மு.தி.க., வுக்கும், காங்கிரசுக்கும் ஒதுக்கீடு செய்ய, அ.தி.மு.க., தி.மு.க., கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. வரும் 14ம் தேதி, சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், உள்ளாட்சித் தேர்தலுக்கான, இடப்பங்கீடு பேச்சுவார்த்தையை, ஆளுங்கட்சி துவக்கவுள்ளது.
சட்டசபை தேர்தலில், போட்டியிட்ட கட்சிகளில், ஆளுங்கட்சி கூட்டணி மட்டும் சேதாரம் அடையாமல் உள்ளது. தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த, பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வெளியேறி விட்டன.அ.தி.மு.க.,வில், உள்ளாட்சித் தேர்தலை பொருத்தவரை, சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு அடிப்படையில், இடப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும், அ.தி.மு.க., மூவர் குழு, தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட, கூட்டணிக் கட்சிகளிடம் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

தமிழகத்தில், சென்னை, மதுரை, கோவை, தூத்துக்குடி, வேலூர், சேலம், திருப்பூர், நெல்லை, திருச்சி, ஈரோடு ஆகிய, 10 மாநகராட்சிகள் உள்ளன. இதில், மதுரை, சேலம் ஆகிய இரண்டு மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை, தே.மு.தி.க., விரும்புகிறது. வட மாவட்டங்களில், முக்கிய மாநகராட்சியான சேலம், தென் மாவட்டங்களில் முக்கிய மாநகராட்சியான மதுரை ஆகிய இரண்டையும் தே.மு.தி.க., வுக்கு ஒதுக்கீடு செய்ய, ஆளும் அ.தி.மு.க., விரும்பவில்லை.அதேநேரம், இரண்டில் ஒரு மாநகராட்சியும், மற்றொரு மாநகராட்சியாக, வேலூர் அல்லது தூத்துக்குடி மாநகராட்சிகளில் ஒன்றையும் தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கீடு செய்யவும், மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர் பதவிகளில் இடப்பங்கீடு வழங்கவும், ஆளுங்கட்சி முடிவெடுத்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தி.மு.க.,வை பொருத்தவரை, காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு மாநகராட்சிகளை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. கூட்டணியை விட்டு, பா.ம.க.,வும், விடுதலை சிறுத்தைகளும் வெளியேறி விட்டதால், மற்ற எட்டு மாநகராட்சிகளிலும், தி.மு.க.,வே போட்டியிட முடிவு செய்துள்ளது. மற்ற கூட்டணி கட்சிகளான, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளுக்கு, கவுன்சிலர் பதவிகளில் இடப்பங்கீடு அளிக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. -நமது சிறப்பு நிருபர்-

கருத்துகள் இல்லை: