டெல்லி: திமுக ராஜ்யசபா உறுப்பினரும், முதல்வர் கருணாநிதி யின் மகளுமான கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி முடிவாகியிருப்பதாக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
முதல்வர் கருணாநிதி நேற்று முன்தினம் டெல்லி வந்தார். முதலில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலைச் சந்தித்தார். நேற்று காலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி யை சந்தித்தார். மாலையில் பிரதமரை சந்தித்தார். கருணாநிதி தன்னை சந்தித்து விட்டுச் சென்ற பின்னர் அவசரம் அவசரமாக பிரதமர் மன்மோகன் சிங் கை சந்தித்துப் பேசினார் சோனியா.
இந்த சந்திப்புகளின்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்து முதல்வர் கருணாநிதி சிலவற்றைக் கூறியிருந்தாலும் உண்மையில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும் காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் சில இதுபற்றித் தெரிவிக்கையில், சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் இடையிலான திடீர் சந்திப்பின்போது அமைச்சர் ராஜா விவகாரம் குறித்து பேசப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அதேசமயம், முதல்வரின் மகள் கனிமொழியை மத்திய அமைச்சராக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கலாம். கனிமொழி மத்திய அமைச்சராவது உறுதி. விரைவில் அவர் அமைச்சரவையில் சேருகிறார் என்று தெரிவித்தனர்.
அதேசமயம், மு.க.அழகிரி விவகாரம் குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பில் எதுவும் பேசிக் கொள்ளவில்லையாம். கனிமொழிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் திமுகவிலிருந்து யார் நீக்கப்படுவார் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
முன்னதா சோனியா காந்தியை முதல்வர் கருணாநிதி சந்தித்தபோது, ராஜா ஒரு தலித் என்பதால்தான் பிரச்சினையைக் கிளப்புகிறார்கள். எனவே அவர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தாராம். இதையே பிரதமரிடமும் முதல்வர் கூறியதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக