சனி, 8 மே, 2010

கேரள மாநிலம் கொல்லத்தில் 30 ஈழத் தமிழர்கள்புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ரா

கேரள மாநிலம் கொல்லத்தில் 30 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ரா மற்றும் ஐபி அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா வழியாக இலங்கைத் தமிழர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயலக் கூடும் என கேரள மாநில உளவுத்துறைக்கு, மத்திய உளவுத்துறை ஒரு தகவல் அனுப்பியது.

இந் நிலையில், கொல்லத்தில் மர்மமான முறையில் பலர் ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் போனது.

இதையடுத்து திருவனந்தபுரத்திலிருந்து உளவுத்துறை டி.எஸ்.பி. கிருஷ்ணகுமார் தலைமையில் விரைந்து வந்த போலீஸார், கொல்லத்தில் உள்ள சைன்ஸ் என்ற ஹோட்டலில் ரெய்டு நடத்தினர்.

அப்போது அங்கு கிட்டத்தட்ட 50 பேர் தங்கியிருந்தனர். அவர்களில் 4 பெண்கள் உள்பட 32 பேர் மட்டும் தமிழர்கள். இவர்களை தனியாகப் பிரித்து விசாரித்தபோது, தாங்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் போலீஸார் தொடர்ந்து விசாரித்தபோது தாங்கள் இலங்கை முல்லைத் தீவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் 25 முதல் 35 வயது வரை இருக்கும். இவர்கள் அனைவரும் கேரள கடற்கரை வழியாக படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது. யாரிடமும் விசாவோ, பாஸ்போர்ட்டோ இல்லை. இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு படகு ஏற்பாடு செய்து வைத்திருந்த புரோக்கரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2 நாட்களாக இந்த ஈழத் தமிழர்கள் கொல்லத்தில் தங்கியுள்ளனர். பிடிபட்டவர்களில் ஒருவரான சிவசுப்ரமணியன் என்பவர், கடந்த ஆண்டு தனது மனைவியின் சிகிச்சைக்காக முல்லைத் தீவிலிருந்து தமிழகம் வந்ததாக தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு 11 மணியளவில் இந்த கைது சம்பவம் நடந்துள்ளது. இவர்கள் விடுதலைப் புலிகளா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர

கருத்துகள் இல்லை: