ஞாயிறு, 4 மார்ச், 2018

காவிரி மேலாண்மை வாரியம் பணிகள் தொடங்கிவிட்டது ... மத்திய இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேஹ்வாலு

காவிரி மேலாண்மை வாரியம்: பணிகள் தொடங்கிவிட்டன!
மின்னம்பலம் :காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் துவங்கிவிட்டதாக மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த 16ஆம் தேதி வழங்கியத் தீர்ப்பில், ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அதற்கான பணிகள் தொடங்கவில்லை என்று கூறப்பட்டது. இதுகுறித்து பிரதமரை சந்தித்து வலியுறுத்த தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதுவரை பிரதமரை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. மேலும் அண்மையில் சென்னை வந்திருந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தான் எவ்வித உத்தரவாதமும் கொடுக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.
இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா என்று சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் நாளை கடலூரில் நடைபெறும் விழாவுக்காக இன்று (மார்ச் 4) தமிழகம் வந்த மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. இன்னும் ஆறு வாரத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்" என்று கூறியுள்ளார். இதுகுறித்த தகவலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கருத்துகள் இல்லை: