ஞாயிறு, 9 அக்டோபர், 2011

புலிப் பாணி TNA மக்களுக்கு விசுவாசமாக நடக்க வேண்டியது கடமையல்லவா?

TNA-confernceபுலிகளின் பாணியில் தமிழ்க் கூட்டமைப்பு?
தம்மை ஆதரிக்கும் மக்களுக்கு விசுவாசமாக நடக்க வேண்டியது TNAயின் கடமையல்லவா?
வடக்கு கிழக்கில் தமிழ் கூட்டமைப்பிற்கே தமிழ் மக்களின் ஆதரவு என மார்பு தட்டுவதை நிறுத்தி அம்மக்களுக்கு தங்களால் என்ன செய்ய முடியும் என்பது குறித்துச் சிந்திக்க வேண்டிய காலமும் நேரமும் கனிந்துள்ளது. முப்பது வருடங்களாக ஆட்சிபுரிந்த அரசாங்கங்களை தமிழ்த் தலைமைகள் எதிர்த்து வந்தமையால் வடக்கும் கிழக்கும் கண்ட அழிவை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அன்று தமிழ் இளைஞர்கள் தமது கைகளில் ஆயுதங்களை ஏந்தத் தூண்டுகோலாக இருந்த தமிழ்க் கட்சிகள் தாம் நினைத்ததைச் சாதிக்க முடிந்ததா? அல்லது சகோதர இயக்கங்களைப் படுகொலை செய்து தனித்து நின்று போராடிய புலிகளால்தான் தமிbழத்தைக் காண முடிந்ததா?

உரிமைப் போராட்டம் எனப் புறப்பட்டு இருந்தவற்றையும் இழந்து அனாதைகளாக நிற்கும் தமிழ்ச் சமூகத்திற்கு இன்று ஆறுதலாக எவருமே இல்லை. இன்று தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களை வைத்துத் தமது அரசியலையே நடத்தி வருகின்றன. அரசாங்கத்துடன் ஒத்துப்போய் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து அதே அரசாங்கத்திற்குச் சவால் விட்டுவருவது தற்போதைய நிலையில் நியாயமாகுமா?

தமிழ் மக்களின் இவ்வளவு அழிவுகளுக்குப் பின்னரும் தமிழ்க் கூட்டமைப்போ அல்லது அதில் அங்கம் வகிக்கும் முன்னாள் போராட்டக் குழுக்களோ அல்லது ஏனைய பழம்பெரும் கட்சிகளோ தமிழ் மக்களை மீண்டும் போராட்டத்திற்குத் தயாராக்க முனைவது பாரதூரமான விளைவுகளையே தருவதாக அமையும்.

அரசாங்கத்தை விமர்சித்தால்தான் தமது கட்சியை வழிநடத்த முடியும், அதன் மூலமே தமிழ் மக்களை ஏமாற்றலாம் என இனியும் தமிழ் கூட்டமைப்பு நினைக்குமானால் அதனை விட முட்டாள்தனம் எதுவுமாக இருக்க முடியாது. ஏனெனில் தமிழ் மக்கள் இன்று தெளிவாகவே உள்ளனர். வடக்கில் கூட்டமைப்பிற்கு வாக்கு வீதம் சற்று அதிகரித்துக் காணப்பட்டது என்பது ஒரு மாயை. அங்கு மாற்றுத் தெரிவு மக்களுக்கு இருக்கவில்லை. வடக்கில் நடைபெற்ற சபைகளில் கூட்டமைப்பு பெற்ற வாக்கு வீதம் மிகவும் குறைவானதே. பெரும்பான்மை அவர்களுக்காக இருக்கலாம். ஆனால் அதனை வெற்றி எனக் கொண்டாட முடியாது.

இதேவேளை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், தற்போது கூட்டமைப்பின் முக்கியஸ்தருமான மூத்த அரசியல்வாதி ஆனந்தசங்கரி ஐயா, சம்பந்தன் ஐயாவுடன் ஒப்பிடுகையில் இன்றைய யதார்த்தத்தைப் புரிந்துகொண்டவராக வும், தமிழ் மக்களின் இன்றைய மன நிலையை விளங்கிக் கொண்டவராகவும் செயற்பட்டுவரும் விதம் உண்மையில் பாராட்டுக்குரியது. புலிகளால் தமிbழத்தைக் காணமுடியாது என அடித்துக் கூறி அதை உண்மையும் ஆக்கிய அவர், புலிகள் மிகப் பலமாக இருந்த காலத்திலும் புலி களை அவர்களது கடும்போக்கிற்காகப் பயப்படாது விமர்சித்தும் வந்தவர்.

இன்று அரசாங்கத்துடன் முரண்டு பிடிப்பதிலும் பார்க்க ஒத்துப் போவதிலேயே தமிழ் மக்களுக்கான பல உரிமைகளை, சலுகைகளை வென்றெடுக்கலாம் என்பதை ஆனந்தசங்கரி ஐயா விளங்கிக் கொண்டுள்ளார். யாழ்ப்பாண இராணுவக் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவிற்கு அண்மையில் யாழ். தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அவர் எழுதிய கடிதம் அவரது அரசியல் முதிர்ச்சியையும், தீர்க்க தரிசனத்தையும் எடுத்துக் காட்டுகிறது.

எதிர்ப்புக் காட்டுவதிலும் பார்க்க இணைந்து சென்று காரியங்களைச் சாதிப்பதே இன்றைய சூழலில் சரியாக அமையும் என்பதை ஆனந்தசங்கரி ஐயா புரிந்து வைத்துள்ளார். இறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்கள் இன்னலுற்ற வேளை இராணுவம் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்து இப்போது நிம்மதியாக வாழும் மக்களுக்குச் சில கீழ் மட்ட படை வீரர்கள் கரைச்சல் கொடுப்பதை நாசூக்காக எழுதி தலைமை அதிகாரிக்கு விளங்கப்படுத்திய அவரது கடிதத்தை அனைவருமே பாராட்டினர். அவரது முயற்சியில் அவர் வெற்றியும் கண்டார்.

தமிழ் இளைஞர்களை மீண்டும் உசுப்பேற்றி அழிவுகளைத் தேடாது தமிழ் மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள் என்பதே மக்களது கோரிக்கையாக உள்ளது. அவர்கள் பட்ட துன்பங்கள் இழப்புக்கள், கண்ட அழிவுகள் போதும். இனியும் அழிவுகளைச் சந்திக்கும் நிலையில் அம்மக்கள் இல்லை. மீண்டும் யுத்தம் வந்தால் ஓடிச் சென்று ஒழிந்து கொள்ள அம்மக்களுக்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் போன்று இந்தியாவில் வீடுகளும் இல்லை, ஐரோப்பாவில் உறவுகளும் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே வடக்கு கிழக்கிலுள்ள பெரும்பாலான தமிழ் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பது உண்மை. அவ்வாறு தம்மை ஆதரிக்கும் தமிழ் மக்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டியது தமிழ்க் கூட்டமைப்பின் தலையாய கடமையும், பொறுப்புமாகும். ஆனால் இதனை அவர்கள் செய்கிறார்களா என்பது சந்தேகத்திற்குரிய விடயமே.

முன்னர் விடுதலைப் புலிகள் இருந்த காலத்திலும் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களை ஒரு பொருட்டாகக் கருதாமலேயே தமிழருக்காகப் போராடி வந்தார். ஒரு கட்டத்திலாவது விட்டுக்கொடுத்து நடந்திருந்தால் இன்று அவரும் இருந்திருப்பார், பல புலிகளும் உயிர் வாழ்ந்திருப்பர். அது மட்டுமல்லாது தமிழ் மக்கள் இவ்வ ளவு தூரமும் சீரழிந்திருக்கவும் மாட் டார்கள்.

எனவே புலிகளின் பாணியிலேயே தமிழ்க் கூட்டமைப்பும் இன்று அரசாங்கத்துடன் காய் நகர்த்தப் பார்க்கின்றது. பத்துச் சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் பலனில்லை என்றால் அதனைப் பக்குவமாக ஜனாதிபதிக்கு எடுத்துரைத்து பலனைக் கண்டிருக்க வேண்டும். அதனை விடுத்து ஏதோ யானைப் படை, குதிரைப் படை, விமானப்படை வைத்திருப்பவர்கள் போன்று அரசுடன் சவால் விடுவது ஆரோக்கியமானதல்ல. எல்லாப் படைகளையும் வைத்திருந்த புலிப்படையே இன்று முற்றாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் இனியும் உண்மையை, யதார்த்தத்தை தமிழ்க் கூட்டமைப்பு விளங்கிக் கொள்ளாவிட்டால் அவர்களை என்னவென்று அழைப்பது?

தமக்கு மக்கள் படை இருப்பதாக தமிழ்க் கூட்டமைப்பிற்கு ஒரு நினைப்பு. அதுவும் புலிகளுக்கு இருந்ததுதானே. புலிகளின் ஆயுதத்திற்குப் பயந்த சிலரும், தாமாக ஆதரவு தெரிவித்த பலரும் தமிழ்ச் சமூகத்தில் புலிகளின் காலத்தில் இருந்தார்கள். ஆனால் உரிமைப் போராட்டத்தால் இருந்ததையும் இழப்போம் என்று அவர்கள் ஒருபோதும் கனவில் கூட நினைக்கவில்லை. புலிகளின் வீரத்தால் தமிbழம் மலரும் எனக் கனவு கண்டோர் புலிகளின் பலம் புஸ் வாண மாகிப் போனதும் தமது எண்ணங்களை மாற்றிக்கொண்டார்கள்.

இந்நாட்டில் பெரும்பான்மைச் சமூகத்துடன் ஒன்றுபட்டு நாடு சுதந்திரமடைந்த காலத்தில் எவ்வாறு வாழ்ந்தோமோ அப்படி வாழ்தலே மேலானது என்பதைப் பல தமிழ் மக்களும் இன்று நன்கு உணர்ந்துள்ளார்கள். ஆனால் அரசியல் அரியாசனம் தரும் இராஜயோகம் தமிழ்க் கூட்டமைப்பு தலைவர்களுக்கு இவ்விடயத்தை விளங்கிக் கொள்ளவிடாது கண்ணை மறைத்து நிற்கிறது.

புத்திஜீவிகள், கல்விமான்களைக் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கி அவர்கள் மூலமாகத் தீர்வைக் காண அரசாங்கம் முற்பட்டால் இன்றைய சூழலில் தமிழ் மக்கள் அதனை நிச்சயம் வரவேற்பர். அதற்கு அரசாங்கம் தமிழ் மக்களால் முற்று முழுதான மனதுடன் ஏற்றுக்கொள்ளும் கறைகள் எதுவும் படியாத தமிழ் புத்திஜீவிகளையும், கல்விமான்களையும் தெரிவு செய்ய வேண்டும். அதில் துளியளவும் அரசியல் சாயம் இருக்கக் கூடாது
.
- தினகரன் -

கருத்துகள் இல்லை: