ஞாயிறு, 9 அக்டோபர், 2011

தமிழ்க் கட்சிகளே முட்டுக்கட்டை?பேச்சைக் குழப்புவதும் அரசை வசைபாடுவதும்!

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் சில தமிழ்க் கட்சிகளே முட்டுக்கட்டை?வேண்டுமென்றே பேச்சைக் குழப்புவதும் பின்னர் அரசை வசைபாடுவதும்!

நாட்டில் பல தசாப்தங்களாக நிலவிவரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பது தமிழ்க்கட்சிகளும் அதன் தலைவர்களும் தான் எனும் பொதுவானதொரு குற்றச்சாட்டு தமிழ் மக்களிடையே காணப்படுகிறது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தீர்வு தொடர்பாக பல முயற்சிகள் எடுத்திருந்தாலும் இறுதியில் அவை யாவும் தமிழ்க்கட்சிகளின் எதிர்ப்புகளினாலும், அவர்களிடையே காணப்படும் ஒற்றுமையின்மை காரணமாகவும் தவிடு பொடியாகிவிடுகின்றன.இறுதியில் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டி தமிழ்க் கட்சிகள் அறிக்கைகள் விடுவதில் ஒவ்வொரு பேச்சுக்களின் பின்னரும் சிறிது காலம் வீணாகக் கடந்து செல்கிறது. அதன் பின்னர் மீண்டும் ஒரு முயற்சி முன்னெடுக்கப்படும். அதுவும் தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை, சண்டித்தனமான காலக்கெடு, வீரவசன அறிக்கைகள் என்பவற்றால் தட்டிக்கழிந்து செல்லும் நிலையே காணப்படுகிறது. இதுவே கடந்த காலங்களில் இனப்பிரச்சினைத் தீர்விற்கான பேச்சுவார்த்தைகளின் தொடர்கதையாக இருந்து வருகிறது.

இதனைவிடுத்து ஆக்கபூர்வமாகச் சிந்தித்து செயற்படுவது எவ்வாறு? இதற்கு என்ன செய்யலாம்? தமிழ்க் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தி ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து புரையோடிப் போயுள்ள இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது எப்படி எனத் தமிழ்பேசும் தலைவர்கள் வாரமஞ்சரிக்குத் தெரிவித்த கருத்துக்களை இங்கே தருகின்றோம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, செயலாளர் நாயகம் ஈ.பி.டி.பி

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்பட்டு தமிழ் மக்கள் உட்பட முழு நாட்டு மக்களுமே ஏற்றுக் கொள்ளும் நல்லதோர் நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் என்பதே எல்லோரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாக இருக்கிறார். அவரது தலை மையிலேயே இதற்குத் நல்ல தீர்வு கிடைக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

இதற்கு தமிழ்க் கட்சிகள் உண்மையுட னும், இதயசுத்தியுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சர்வதேசத்தை நம்பும் சிலர் அரசாங்கத்தைக் குறைத்து மதிப்பிடுவது கவலைதரும் விடயம், இனப்பிரச்சினைக்கு ஜனாதிபதியுடனும் அவரது தலைமையிலான அரசாங்கத்துடனும் பேசியே தீர்வு காண வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

எனவே தீர்வைக் காண்பதில் அரசைக் குறைகூறுவதை விட தமிழ்க் கட்சிகள் தமக்கிடையே ஒற்றுமைப்பட வேண்டும் என்பதே சரியானது என நான் எண்ணு கிறேன். எமது கட்சியைப் பொறுத்தவரை நாம் அன்றும் இன்றும் ஒரே நிலைப் பாட்டிலேயே இருக்கிறோம். அதனால் எம்மை ஒற்றுமைப்படவில்லை என்று யாரும் கூற முடியாது. தமிழ்பேசும் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் தீர்வை காண்பதே எமது இலக்கு.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் (தலைவர், முஸ்லிம் காங்கிரஸ்)

சிறுபான்மைக் கட்சிகளின் ஒற்றுமையீன மும் முரண்பாட்டு அரசியல் செயற்பாடு களுமே இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சி இழுத்தடிக்கப்படுவதற்கான பிரதான காரணமல்ல.

மாறிமாறி வந்த அரசாங்கங்கள் இதய சுத்தியாக தீர்வை முன்வைக்காமையும் பேரினவாத சக்திகளின் கூக்குரல்களுமே தீர்வு கிடைக்காமற் போனதற்கு காரணம். தீர்வு முயற்சிகள் பல்வேறு வடிவங்களில் முன்வைக்கப்பட்ட போது தமிழ், முஸ் லிம் கட்சிகள் ஒத்துழைப்பு நல்கியுள்ளன. தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான அரசியல் அபிலாஷைகள் வேறுபட்டவையே. எனினும் இரண்டு சாராரும் எல்லா முயற்சிகளிலும் பங்கேற்றுள்ளனர். சந்திரிகா அம்மையார் அரசு சார்பில் மர்ஹும் அஷ்ரபினால் கொண்டுவரப்பட்ட தீர்வுத் திட்ட நகலை கிழித்து, எரித்தது யார்?

இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகள் என்ற பேச்சு எழும் போதெல்லாம் இனவாதத்தை உசுப்பி விட்டவர்கள் யார்? அதே போன்று தமிழ்ச் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளுக்கு முஸ்லிம்கள் ஒரு போதும் குறுக்கே நின்றது கிடையாது.

முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினால் தான் உரிமைகளைப் பெற முடியுமென்று தமிழ்க் கூட்டமைப்பின் எம்.பியொருவர் கூட்டங்களில் பேசியுள்ளார். எனது உரையொன்றின் அர்த்தங்களை விளங்காமல் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தமிழ்- முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு ஆரோக்கியமானதாகவில்லை.

மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப், மேற் கொண்ட ஜனநாயக ரீதியான போராட்டத் தின் காரணமாகவே பிரேமதாஸ அரசில் சிறுபான்மை மக்களுக்கு இருந்த 12.5 சதவீத வெட்டுப்புள்ளி 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை நினைவுபடுத்துகின்றோம். இதன் மூலம் சிறிய கட்சிகளும், சிறு பான்மைக் கட்சிகளும் பயனடைந்து வருவதே உண்மை. இந்த வரலாறுகளை அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இரா சம்பந்தன் எம்.பி.

தலைவர், இலங்கை தமிழரசுக் கட்சி

தமிழ் அரசியல் கட்சிகளிடையே கருத் தொருமைப்பாடு இல்லை என்பதை ஏற்க முடியாது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வும் இணைந்த வட கிழக்கில் சமஷ்டி ஆட்சியே வேண்டுமெனக் கூறியிருக்கின்றார். இதே கருத்தையே தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆனந்த சங்கரியும் தெரி வித்திருக்கிறார்.

எனவே, தமிழ்க் கட்சிகளிடையே ஒற்றுமையின்மையால்தான் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லையென்பது நொண்டிச் சாட்டு. அதே நேரம் இதனை உத்தியோக பூர்வமாக அரசாங்கம் அறிவிக்கவும் இல்லை. ஜனநாயக ரீதியாக மக்கள் ஓர் அரசாங்கத்தைத் தெரிவு செய்துள்ளதைப் போல் வடக்கு, கிழக்கு மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆணை வழங்கி, அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி தீர்வு காணச் சொல்லியிருக்கிறார்கள்.

பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம்

தலைவர் - இ. தொ. கா.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்று வரும்போது. நிச்சயம் மலையக மக்களின் பிரச்சினைகளும் உள்வாங்கப்பட்டுத் தீர்வு காணப்படும். ஆகவே, அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் ஒத்துழைக்க வேண்டியது எமது கடமையாகும். அமரர் செளமியமூர்த்தி தொண்டமான், வட, கிழக்குப் பிரச்சினை தொடர்பில் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாரோ அதே நிலைப்பாட் டையே அமைச்சர் ஆறுமுகன் தொண்ட மானும் கொண்டிருக்கிறார்.

சிறுபான்மை இனம் என்ற வகையில் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். தனியாக சரியாகக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், முதலாவது சிறுபான்மை யினமாக இந்திய வம்சாவளியினரே இருப்பார்கள். வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சகல பகுதிகளிலும் உள்ள சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளின் போது நாம் ஒன்றாகவே செயல்படுகிறோம். பாராளுமன்றத்தில் இதனை நன்கு உணர்ந்துகொள்ளலாம். சிறுபான்மை கட்சிகளிடையே ஒற்றுமை கிடையாதென்று யாரும் சொன்னால் அது நொண்டிச் சாட்டுதான்.

13 ஆவது திருத்தத்தின் கீழ் தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் நாமும் உடன்படுகிறோம். அதேநேரம் பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்பதிலும் உறுதியாகவுள்ளோம். ஐயா தொண்டமான் காலத்திலிருந்தே எமது நிலைப்பாடு இதுதான். அனைவரும் இணைந்து தீர்வொன்றைக் காண்பதற்காகவே பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைக் கப்படுகிறது. அதற்காகத் திணிக்கப்படும் தீர்வை ஏற்கவும் முடியாது.

கருத்துகள் இல்லை: