ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

இஸ்லாமிய பெண்கள் மீதான அசிட் தாக்குதல்கள்

(சென்ற வாரத் தொடர்ச்சி .வினவு இணையம)
பெண்களின் நடத்தை, கண்ணியம் எல்லாமே ஆண்களின் மேற்பார்வையிலிருப்பதால் பெண்களும் தங்களைப் போல சம உரிமை பெற்ற மனித உயிர் என்று கருத அவர்கள் மறுக்கிறார்கள். சொல்லப்போனால், அப்படிச் சமமாக நடத்துவதை மதமே அல்லவா தடுத்து நிறுத்துகிறது?
மதத்தின் பெயரால், பெண்களின் கழுத்தின் மீதுதான் ஆண்களின் கால்கள் ஊன்றி நிற்கின்றன என்பதை மறுக்க முடியாது. இசுலாமிய சமூகத்தில் மதமே வாழ்வின் எல்லாவற்றிலும் கோலோச்சுகிறது – அவர்களுக்கென்று தனிப்பட்ட சட்டதிட்டங்கள், பழக்க வழக்கங்கள் என்று சகலமும் மதத்தையே முதுகெலும்பாகக் கொண்டிருக்கின்றன – இதற்கு எந்த மதமும் விதிவிலக்கல்ல என்றாலும்.
***
இந்தப் பின்னணியில்தான் நாம்  ஆசிட் தாக்குதல்களையும் நோக்க வேண்டியிருக்கிறது. எண்ணெயைப் பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்று மேற்குலகின் செல்வச்  செழிப்போடும், நவ நாகரிகத்தோடும் பின்னிப் பிணைந்து வாழும் அரபு முதலாளிகள் தங்கள் இனப் பெண்களை பர்தாவுக்குள் அடைக்கின்றனர். ஒழுக்கம், கண்ணியம், கற்பு என்று வரும்போது மட்டும் குரானுக்குள் ஒளிந்துகொண்டு  பெண்களைப் பலிகடாவாக்குகின்றனர். இந்த இரட்டை வேடத்தில் இந்துமதப் பயங்கரவாதிகளுக்கு சற்றும் குறைந்தவர்களில்லை, இசுலாமிய மதவாதிகள்.
சாதி மாறிக் காதலித்தால், ஒரே கோத்திரத்தில்  திருமணம் செய்து கொண்டால் பெண்ணை கண்டந்துண்டமாக்குவது பார்ப்பனிய இந்துமதம். சாதிக்குள்ளும்,  கோத்திரத்துக்குள்ளும் பெண்ணை அடைத்து வைத்திருக்கிறது இந்துமதம். பர்தாவுக்குள் அடைத்து வைத்திருக்கிறது இசுலாமிய அடிப்படைவாதம்.
ஒரு பெண்ணுக்கு மணமகன் கொடை அளித்துத்தான் திருமணம் செய்ய வேண்டுமென்பதாகக் கூறினாலும் உண்மை வேறு மாதிரியாக இருக்கிறது. பங்களாதேஷின் பெரும்பாலான ஆசிட் தாக்குதல்கள் ஏழை மக்களிடையே வரதட்சணைக்காகவே நடத்தப்பட்டிருக்கிறது. ஒரு பெண் தனது காதலை நிராகரித்தால் அல்லது தனது ஆசைகளை நிறைவேற்ற மறுத்தால் தாங்கிக்கொள்ள முடியாத ஆணின் ஈகோ வக்கிரமாக அந்தப்பெண்ணைப் பழிவாங்கத் துடிகிறது. அதற்கு மதமும் துணை போகிறது.
இதுவே ஒரு பெண் ஆணின் மீது ஆசிட் தாக்குதலை நடத்த முடியாதா? கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல் என்பதுபோல ஆசிட் அதே விளைவுகளைத்தான் ஆண் மீதும் ஏற்படுத்தும் என்றாலும், ஒரு பெண் அவ்வாறு செய்வாளென்று யாரும்  எதிர்ப்பார்ப்பதில்லை. நினைத்துக்கூட பார்ப்பதில்லை. அடங்கி நடக்க வேண்டியவளாகத்தான் எதிர்ப்பார்க்கப்படுகிறாள்.
ஆப்கானிஸ்தான் ரஷ்யாவின் கீழ் இருந்தவரை பெண்களுக்கான சம உரிமைகள் சட்டங்கள் மூலமாகத்தான் நிலைநாட்டப்பட்டன, மதத்தின் மூலமாக அல்ல. பங்களாதேஷில் பல பெண்கள் பொதுவாழ்வில் வெற்றிகரமாக ஈடுபட்டு வந்தாலும் சாமானிய மக்கள் வாழ்க்கையில் எந்தப் பெரிய மாற்றமும் இல்லாததற்கு இந்த மதரீதியான அடக்குமுறையே காரணம்.
ஷேக் ஹசீனா, காலிதா ஜியா மற்றும் சயீதா சஜீதா சவுத்ரி போன்றவர்கள் முக்கியமான  அரசியல் பதவிகளை வகிக்கின்றனர்.  2008 ஆம் ஆண்டின் கணக்குப்படி பொதுத்துறையில் உள்ள 4419 பேரில் பெண்கள் 673 பேர்தான். பெண்கள் முன்னுக்கு வருவதற்கு ஏகப்பட்ட மசோதாக்களும், சட்டங்களும், வளர்ச்சித்திட்டங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
இருந்தாலும், பெண்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே தீட்டப்படும் திட்டங்கள் வெறும் ஏட்டளவில்தான் இருக்க முடியும். 2000 ஆம் ஆண்டும், 2002 ஆம் ஆண்டும் சில கடுமையான சட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன. சட்டத்துக்குப் புறம்பான வகையில் ஆசிட் கையாளப்பட்டது தெரியவந்தால் 10 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை உண்டு. ஆசிட் தாக்குதல் நடத்தும் குற்றவாளிக்கு மரண தண்டனையும் உண்டு.  இதனாலெல்லாம் இந்தத் தாக்குதல்களைப் பெருமளவு நிறுத்திவிட முடியவில்லை என்பதுதான் நடைமுறை எதார்த்தம். எளிதில் குற்றவாளி வெளியில் வந்துவிட முடிகின்ற சட்டத்துறையும், ஊழல் மலிந்த காவல்துறையும் ஒரு காரணம். அதோடு குற்றவாளி பணக்காரராக இருந்தால் நிலைமை இன்னும் மோசம்.
நீதிமன்றத்துக்கு வரும் பாதிக்கப்பட்டவர்களை தொடுத்த வழக்கினைத் திரும்பப் பெறுமாறு மிரட்டுவார்கள். இல்லையென்றால், குடும்பத்தினரைத் தாக்கப் போவதாகவும் சொல்வார்கள்.  தன் சகோதரிக்காக வழக்குத் தொடுத்திருந்த ஒரு பெண் குற்றவாளியின் குடும்பத்தினரால் மிகக் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டாள். வழக்குத் தொடுப்பவர்கள் மற்றும்  பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த வறுமை நிலையிலிருப்பதால் அதிகாரத்தை எதிர்த்து நிற்க முடிவதில்லை. பெரும்பாலும் தன்னார்வக் குழுக்களின் இல்லங்களிலேயே இப்பெண்கள் காலம் கழிக்க நேரிடுகிறது.
பல தன்னார்வக் குழுக்கள் ஆசிட் வீச்சினால் பாதிப்படைந்தவர்களுக்கு ஆதரவளிக்கின்றன. அதோடு மருத்துவ உதவிகளை இயன்ற அளவுக்குச் செய்கின்றன. இருந்தாலும் பாதிப்படைந்தவர்களுக்கு உதவுவதாக எண்ணி அவர்களைத் தனிமைப்படுத்தி விடுகின்றன. கல்வியும், வேலையும் தருவதாகக் கூறிக்கொண்டு அவர்களைச் சமூக வாழ்க்கையிலிருந்து பிரித்தெடுத்து விடுகின்றன. வக்கிரமாகப் பாதிக்கப்பட்ட இப்பெண்கள், மேலும் இரக்கமற்ற வாழ்க்கைக்கே உந்தப்படுகிறார்கள்.
உதவும் நோக்கு என்று சொல்லிக் கொண்டாலும் இந்தத் தன்னார்வ குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றுமொரு தண்டனையாகவே அமைந்து விடுகின்றன.  எந்த உடல்நலக் குறைபாடோ, நோயோ இது போன்ற விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.  ஒருபோதும்  தங்களது பழைய உருவத்தை, அடையாளத்தைப் பெற முடியாது என்பது அவர்களது முகத்திலறையும் உண்மையாக இருக்கிறது. இதனை ஏற்றுக்கொண்டு வாழவேண்டிய  கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். பங்களாதேஷ் கிராமங்களில் அவர்கள் ஒருபோதும் தமது பழைய அங்கீகாரத்தைப் பெறுவதில்லை.
வாழ்வாதாரத்துக்காகச் செய்யும் வேலையும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. ஒன்றிரண்டு வேலைகளையே செய்து பிழைக்க முடியுமென்ற நிலைதான் மீந்திருக்கிறது. அதுவும் அவர்களது பொருளாதார நிலைமையை மிகவும் பாதிக்கிறது.
இதற்குத் தீர்வென்பது, ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான  சட்ட உரிமைகளாலும் மற்றும் நீதியாலுமே முடியும். சமூகத்தின் ஒட்டுமொத்தக் கண்ணோட்டமே மாற வேண்டியிருக்கிறது. சீர்திருத்தங்களால் அங்கொன்றும் இங்கொன்றுமாக வேண்டுமானால் ஓரிரு நபர்களுக்கு மட்டும் தீர்வு கிட்டலாமே ஒழிய அது தற்காலிமானதுதான்.
இந்த ஆசிட் தாக்குதல்கள் இந்தியாவிலும் சாதாரணமானதொன்றுதான்.  கடந்த ஜனவரி 9 ஆம் தேதி கேரளாவைச் சேர்ந்த அஞ்சலி என்ற பெண்ணின் மீது உள்ளூர் பாஜக தலைவர் பிஜூ என்பவரின் அடியாட்கள் ஆசிட் வீசியிருக்கின்றனர்.  அஞ்சலிக்கு அந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. பிஜூவின் ஆட்கள் அஞ்சலியின் வீட்டுக்கு ஃபோன் செய்து கூரியர் வந்திருக்கிறதென்றும், வீடு அடையாளம் தெரியாததால் வெளியில் வந்து நிற்குமாறும் கூறியிருக்கின்றனர். வீட்டுக்கு வெளியில் வந்து  நின்ற அஞ்சலி முகத்தில் ஆசிட்டை வீசியுள்ளனர். தற்போது இதற்கான வழக்கு நடந்து வருகிறது.  இதுவும் இந்துத்துவா காட்டும் பயங்கரவாதத்தின் மற்றொரு கோர முகம்தான்.
இந்தக் கோரமுகம்தான் நாடு முழுக்க கலாச்சாரக் காவலர் வேடமேற்கிறது. மதங்கள் வெவ்வேறானாலும் அதன் தூய்மை பெண்ணை எரிப்பதில்தான் இருக்கிறதென்று நிரூபிக்கின்றன இந்தச் சம்பவங்கள். சாதியையும், பெண்ணடிமைத்தனத்தையும் தனது கைகளாகக் கொண்டு மக்களை நசுக்கும் பார்ப்பனியம்தான் தற்போது அஞ்சலியின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் காதலை மறுத்த  இரண்டு மாணவிகள் மீது இளைஞர்கள் ஆசிட் வீசியதால் அப்பெண்கள் பலியான சம்பவத்தை செய்தியில் பார்த்திருப்போம். காதலித்த பெண்ணின் மீது ஆசிட் ஊற்றுவது என்ன வகையான நேசம் என்பது புரியவில்லை.
பெண்ணை நுகர்பொருளாக, உடமையாகக் கற்றுக்கொடுக்கும் ஊடகங்களும், சினிமாவும் அவளை அடைந்தே தீரவேண்டிய பொருளாகவே பார்க்கிறது. இந்தக் காதலை வியாபாரமாக்கிக் கொள்ளும் முதலாளித்துவமோ இன்றைய இளைஞர்களிடம் காதலைக் கூவிக் கூவி விற்றுக் காசாக்கிக் கொள்கிறது.  காதலை ஏற்க மறுக்கும் உரிமை  பெண்ணுக்கும் உண்டு என்பதை ஆணாதிக்கம்  உணர மறுக்கிறது. ரஜினி கமல் முதல் இன்றைய தனுஷ் வரை பெண்ணைத் தன் காலடியில் விழ  வைப்பதே ஆண்மைக்கழகு என்று  சவால் விட்டு அதனை நிரூபிக்கவும் செய்கிறார்கள். தனக்குக் கிடைக்காத பொருள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று ரசிகனுக்கும் கற்பிக்கிறார்கள்.
இந்த வழியில் இன்றைய இளைஞர்களும் அமிலத்தால் பெண்ணைத் துடிக்க துடிக்க அழிக்கிறார்கள். மதம் எதுவாக இருந்தாலும் அதன் ஒழுக்கம், அன்பு, அமைதி என்ற எல்லாவற்றையும் பிரித்துவிட்டுப் பார்த்தால்  மையமாக இருப்பது பெண்ணடிமைத்தனமும், ஆணாதிக்கமும்தான். வாழ்நிலைமைகளையும்,  செல்வத்தை விநியோகிக்கும் சமுதாய நிலைமைகளையும் முதலாளித்துவம் மாற்றியிருக்கிறது. ஆனால் அதன் இலாப நோக்குகளுக்காக நிலப்பிரப்புத்துவத்தின் பிற்போக்குத்தனங்களை அப்படியே நிலவ விட்டு ஆதாயமடைகிறது.  அல்லது பெண்களை அரைகுறையாக சீயர் லீடர்ஸ் என்ற பெயரில் கவர்ச்சிக்கு உபயோகப்படுத்துகிறது.
இந்த நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனங்களையும், முதலாளித்துவ பாலியல் சுரண்டல்களையும் எதிர்த்து மக்கள் அனைவரும் சேர்ந்து போராடுவதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும். தனிப்பட்ட ஓரிருவர் போராடுவது  எந்தப் பலனையும் தராது. ஆளும் வர்க்கத்தின் பண்பாட்டு, கலாச்சார நிறுவனங்களைத் தகர்க்கும் சக்தி ஒடுக்கப்படும் மக்கள் கையில்தான் இருக்கிறது. அப்படி சமூக நலனுக்காகப்  போராட புறப்படும் மக்கள் கையில்தான் விடுதலைக்கான திறவுகோல் இருக்கிறது.

கருத்துகள் இல்லை: