ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

அண்ணா ஹஸாரேவை மக்கள் ஏன் பின்தொடர்கிறார்கள்?

தர்க்கரீதியாக ஜன்லோக்பால் மசோதாவைப் பார்க்கும்போது என் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மெலிதான அரசு என்ற என் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது ஜன்லோக்பால் முன்வைக்கும் மாதிரி. இப்போதுள்ள அரசின் சில அமைப்புகளை வலிமைப்படுத்துவதன்மூலம் ஊழலைக் குறைக்கமுடியும் என்பதே என் கருத்து.
ஆனால் அண்ணா ஹஸாரேவை மக்கள் ஏன் கூட்டம் கூட்டமாகப் பின்தொடர்கிறார்கள்? யார் இவர்கள்?
என் நண்பர் சமீபத்தில் தில்லி சென்றிருக்கிறார். அப்போது அண்ணா ஹஸாரே உண்ணாவிரதக் கூட்டத்தில் பங்கெடுக்க கிழக்கு உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்திருந்த மூவரை பேருந்தில் பார்த்திருக்கிறார். அவர்கள் அரசு வேலை பார்ப்பவர்கள்.
“அண்ணா ஹஸாரே, ஜன் லோக்பால் என்கிறாரே, இதெல்லாம் உங்களுக்குப் புரிகிறதா?”

“இல்லை. அதெல்லாம் எங்களுக்கு அவ்வளவாகப் புரியாது.”

“அப்படியென்றால் எதற்காக உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள வந்திருக்கிறீர்கள்?”

“உங்களுக்குத் தெரியாது... என் தாயும் தந்தையும் விபத்தில் இறந்து அந்த உடல்களை வாங்க நான் எவ்வளவு லஞ்சம் கொடுக்கவேண்டிவந்தது, எவ்வளவு கஷ்டப்படவேண்டியிருந்தது என்று. நீங்கள் எல்லாம் பையில் காசைப் போட்டு வேலைக்காரனிடம் கொடுத்தனுப்பி உங்கள் வேலைகளைச் செய்துகொள்பவர்கள். உங்களுக்குத் தெரியாது நாங்கள் தினம் தினம் படும் கஷ்டம். அண்ணா ஹஸாரே எங்களுக்காகப் போராடுகிறார். அதனால் லஞ்சம் தீர்ந்துவிடுமா என்றால் தெரியாது. ஆனால் ஒருவேளை தீர்ந்துவிட்டால்? அதனால்தான் வந்திருக்கிறோம். எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்லை. எனக்குச் சம்பளமே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவருடன் இருப்போம். மேலும் இன்னொரு விஷயம். அவர் நல்லவர்.”
இந்த ஒரு பதிலில் கிட்டத்தட்ட எல்லாமே அடங்கிவிட்டது என்று நினைக்கிறேன். பொட்டில் அறைந்தாற்போல இருந்தது எனக்கு. அண்ணா ஹஸாரேயால் லஞ்சம், ஊழல் எல்லாம் முற்றிலுமாக ஒரே நொடியில் தீர்ந்துவிடும் என்று பொதுமக்கள், அதுவும் அடிமட்ட மக்கள், நினைக்கவில்லை. ஆனால் அவர்மூலமாக ஊழல் ஒழியக்கூடும் என்ற நம்பிக்கையை ஓர் ஓரத்தில் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையே நிராசையாக இருக்கும்போது ஏன் அவர்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கக்கூடாது?

அதனால்தான் இந்த அளவுக்கு வரலாறு காணாத கூட்டம் அவர்பின் வருகிறது. இது நிச்சயம் பிரியாணியும் சாராயமும் வாங்கிக்கொடுத்து கட்சிகள் சேர்க்கும் கூட்டமல்ல. தானாகச் சேரும் கூட்டம். கூடவே லாப்டாப் வைத்திருக்கும் நவீன இளைஞர்களும் இருக்கிறார்கள்; அதுவும் தொலைக்காட்சி கேமராவைக் கண்டுவிட்டால் முன்னால் துருத்திக்கொண்டு வந்து நிற்கிறார்கள், வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள் என்பது முற்றிலும் வேறு விஷயம். அதைப் புறந்தள்ளுவோம்.

ஆனாலும் என் மனம் ஜன்லோக்பாலை ஏற்க மறுக்கிறது. அதே நேரம், காங்கிரஸ் கட்சியினர்போலோ அல்லது வினவு குழுவினர்போலோ அண்ணா ஹஸாரேமீது சேறை வாரி இறைக்கமாட்டேன். அவர்மீது அளவுகடந்த மதிப்பு உள்ளது. மிகவும் அப்பாவியாகத் தெரிகிறார் அவர். அவரது கூட்டணியினரும் அரசுடன் மோதும் போக்கை மட்டுமே கடைப்பிடிப்பதாகத் தெரிகிறது. என் பயம் எல்லாம் அவரையே தங்கள் நாயகராக, தங்கள் பிரச்னைகளுக்கெல்லாம் ஒரு தீர்ப்பாக நம்பியிருக்கும் அடிமட்ட மக்களை நினைத்துத்தான்.

அவர்களது நம்பிக்கை நாசமாகாமல் இருக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை: