திங்கள், 22 ஆகஸ்ட், 2011

ஐரோப்பா, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

பிழைக்குமா ஐரோப்பா?
europe-லண்டன் : தனது உயர் தரக் கடன் குறியீட்டை, அமெரிக்கா இழந்துள்ள நிலையில், அதன் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியான ஐரோப்பா, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில், எதிர்காலத்தில், ஐரோப்பா தனது உலக முதன்மையை, இழந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என, நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஐரோப்பாவில் கிரீஸ், அயர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின் நாடுகள் படிப்படியாக கடன் என்ற குழியில் விழுந்து கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய யூனியனில் இடம் பெற்றுள்ள பிரிட்டனில், வர்க்கப் போராட்டம் கலவரமாக வெடித்துள்ளது. ஐரோப்பாவின் வர்த்தகக் கூட்டாளியான அமெரிக்காவும், கடும் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது. அது தனது, "ஏஏஏ' என்ற கடன் பெறும் உயர் தர அந்தஸ்தை இழந்திருக்கிறது.
இந்த அபாயகரமான சூழல்களால், அமெரிக்க, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. "கடந்த 2008 ஐ விட இருமடங்கான பொருளாதார மந்தத்தை, உலகம் விரைவில் சந்திக்கும். இரண்டாம் உலகப் போரில் இருந்து, உலக முதன்மையில் முக்கிய இடம் வகித்து வரும் ஐரோப்பா, எதிர்காலத்தில் அதே இடத்தை தக்க வைக்கும் வாய்ப்பு, மிக மிகக் குறைவு தான்' என்கின்றனர் நிபுணர்கள்.
ஏற்றுமதி சந்தை :
இதற்குச் சில காரணங்களையும் முன்வைக்கின்றனர். அமெரிக்கா மற்றும் சீனாவின் மிகப் பெரிய ஏற்றுமதிச் சந்தையாக ஐரோப்பா உள்ளது. பொருளாதார நெருக்கடியால், ஐரோப்பா தனது இறக்குமதியைக் குறைத்துக் கொண்டால், அமெரிக்காவும் சீனாவும் பெருத்த பாதிப்படையும். அதோடு, அன்னியச் செலாவணியில் டாலருக்கு அடுத்த இடத்தில் உள்ள யூரோ கரன்சியின் நம்பகத் தன்மையும் குறையும். கடந்த 1991 முதல் 2008 வரை இருந்த வளர்ச்சி, அதற்குப் பின் இல்லை. அதோடு, வளர்ச்சி தேங்கவும் துவங்கிவிட்டது. இதனால், ஐரோப்பிய நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது.
 "யூரோ' மண்டல நாடுகளின் நிதிப் பற்றாக்குறை, உள்நாட்டு உற்பத்தியில், 6 சதவீதம். இதுவே அமெரிக்காவில், 10.6 சதவீதம். தனது நிதிப் பற்றாக்குறையைப் போக்க, அமெரிக்கா மீண்டும் கடன் வாங்குவதற்குப் போதுமான நேரம் மற்றும் போதுமான செல்வாக்குடன் உள்ளது. ஆனால், ஐரோப்பாவுக்கு இந்த இரண்டுமே இல்லை. அமெரிக்கா தனது அரசியலைக் கடந்து, கடன் நெருக்கடியைச் சமாளிக்கும். ஆனால், ஐரோப்பாவில் அரசியல் தான் முக்கியப் பிரச்னையே.
அரசியல் ஒற்றுமை இல்லை :
தனது உறுப்பு நாடுகளிடம் இருந்து, லாபத்தைப் பகிர்ந்து கொள்வதில் முனைப்பாக உள்ள ஐரோப்பிய நாடுகள், அதே நாடுகளின் கடன் சுமை, போர்ச் செலவுகளைப் பகிர்ந்து கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை. கடந்த 1958ல், ஆறு நாடுகளின் கூட்டமைப்பாக உருவானதில் துவங்கி, 1993ல் பல்வேறு நாடுகளையும் உள்ளடக்கி, "ஐரோப்பிய யூனியன்' என்ற பெயரில் உருமாறி, "யூரோ' 1999ல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும், ஐரோப்பிய நாடுகளுக்குள் அரசியல் ஒற்றுமை என்பதே கிடையாது. கடந்த 2005ல், ஐரோப்பிய யூனியனுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, ஓட்டுக்கு விடப்பட்ட போது, அதை பெரும்பாலான நாடுகள் நிராகரித்ததே இதற்கு உதாரணம்.
விதிகளை மதிக்காத போக்கு :
 கிரீஸ், பெல்ஜியம் மற்றும் அயர்லாந்து நாடுகள், தங்கள் தகுதியை மீறி கடன் வாங்கிக் குவித்த போது, ஐரோப்பிய மத்திய வங்கி (இ.சி.பி.,) கண்டு கொள்ளவில்லை. இதனால், அந்நாடுகள் வாங்கிய கடனுக்கு, அவற்றை பொறுப்பாளியாக்க ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் முனையவில் லை. கிரீஸ் போன்ற நாடுகளின் நடவடிக்கைகள், 17 நாடுகள் பயன்படுத்தும் "யூரோ' கரன்சியைச் சிதைக்கும் நடவடிக்கைகளாக மாறிய போது, ஜெர்மனி, பிரான்சால் அதைத் தடுக்கவும் முடியவில்லை.
ஆண்டு பட்ஜெட் பற்றாக்குறை, 3 சதவீதத்தைத் தாண்டக் கூடாது; உள்நாட்டு உற்பத்தியில், கடனளவு 60 சதவீதத்திற்கு அதிகமாகக் கூடாது போன்ற, ஐரோப்பிய யூனியனின் பொருளாதார விதிகளை, அதன் உறுப்பு நாடுகளே மதிக்கவில்லை.
வேறு வழி என்ன? :
பொருளாதாரத்தில் வலுத்த ஜெர்மனி போன்ற நாடுகள், உலகப் பொருளாதாரப் போட்டியைச் சமாளிக்க, ஐரோப்பாவில் உள்ள விளிம்பு நிலை நாடுகளை, அவற்றின் கரன்சிகளை கைவிடச் செய்தன. "யூரோ'வில் கலந்த பின், இந்த விளிம்பு நிலை நாடுகளுக்கு, இரண்டே வாய்ப்புகள் தான் முன்னால் உள்ளன. ஒன்று, மக்கள் நலத் திட்டங்களை குறைத்தல், வரிச் சீர்திருத்தம், ஓய்வூதியத்தில் கை வைத்தல், கடினமாக உழைத்துப் போட்டியில் பங்கேற்றல் ஆகியவற்றைச் செய்யலாம். இரண்டாவது, ஐரோப்பிய மத்திய வங்கியில், கடன் வாங்கிக் காலத்தைக் கழிக்கலாம். அதற்கும் சில நிர்பந்தங்கள் உண்டு.
சமீபத்தில், ஸ்பெயின் மற்றும் இத்தாலியின் கடன் பத்திரங்களை, மத்திய வங்கி வாங்கியதில், முக்கியப் பங்காற்றிய அதன் தலைவர் ழான் க்ளாட் டிரிஷேவுக்கு, ஜெர்மனி அதிபர் மெர்க்கெல்லும், பிரான்ஸ் அதிபர் சர்கோசியும் முழு மனதுடன் ஆதரவளிக்கவில்லை. மீட்பு நிதிக்குப் பெருமளவில் நிதியளிக்க, அவர்கள் இன்னும் தயங்குகின்றனர்.
ஆனால், மத்திய வங்கியின் நடவடிக்கைகள், ஐரோப்பாவின் கடன் புண்ணுக்கு புனுகு தடவுவது போலத் தான் என்பதை, முதலீட்டாளர்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர். "மொத்தத்தில், ஐரோப்பியக் கண்டத்தில், அரசியல் ஒற்றுமை வந்தால் தான், இப்பிரச்னைக்கு ஓரளவேனும் தீர்வு கிடைக்கும். ஏனெனில், ஐரோப்பாவைக் கடனில் இருந்து மீட்பது, அவ்வளவு எளிதானதல்ல. இந்தக் காரணங்களாலேயே, அது தன் உலக முதன்மையை இழக்கும் வாய்ப்பு அதிகம்' என, நிபுணர்கள் கருதுகின்றனர்.
மிக்கேல் ஹார்ட்னட், "பேங்க் ஆப் அமெரிக்கா'வின் பொருளாதார நிபுணர் : "உலகப் பொருளாதாரப் பிரச்னைகளின் மையத்தில், ஐரோப்பா உள்ளது. கடன் பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறமை, அரசியல்வாதிகளுக்கு இல்லாததால், அல்லது விருப்பம் இல்லாததால், உலகப் பொருளாதாரப் பிரச்னைகள் மேலும் அதிகரித்துள்ளன'
கென்னத் ரோகோப், ஹார்வர்டு பல்கலைக்கழக பொருளாதாரப் பேராசிரியர் : "ஐரோப்பா, தற்போது வீழ்ச்சியின் விளம்பில் உள்ளது. அமெரிக்கா மீண்டும் உலகப் பொருளாதாரத்திற்கு உந்து சக்தியாக இருக்கும் என்ற நம்பிக்கை நீடிக்கும் என்று சொல்வதற்கில்லை. அமெரிக்கா, தனது உள்நாட்டிலேயே நிறைய பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளது'
ழான் ஆர்த்தூயிஸ், பிரான்ஸ் பார்லிமென்ட் மேலவையின் நிதிக் கமிஷன் தலைவர். : "யூரோ பயன்படுத்தும் நாடுகளுக்காக, ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கினோம். ஆனால், அந்த ஒப்பந்தம் தற்போது ஏமாற்றுபவர்கள் மற்றும் பொய்யர்களின் ஒப்பந்தமாக மாறிவிட்டது'

கருத்துகள் இல்லை: