ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

India 10 தமிழ்க் கட்சிகளுக்கு தனித்தனியே அழைப்பு!

இலங்கைத் தமிழர் விவகாரம்:டில்லியில் மாநாடு 10 தமிழ்க் கட்சிகளுக்கு தனித்தனியே அழைப்பு!

Sunday, August 21, 2011
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் இந்த வாரம் இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக இரு நாள் மாநாடு இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்கு 10 இலங்கை தமிழ்க் கட்சிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருக்கிறது.

துயரும் தீர்வும்' என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. உலக முன்னேற்றத்திற்கான மனித உரிமைகள் தொடர்பான இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 23, 24 ஆம் திகதிகளில் பகல் 11 மணி5 மணி வரை இந்த மாநாடு இடம்பெறவிருக்கிறது.
தமிழகத்தின் சிவகங்கை தொகுதியைச் சேர்ந்த இராஜ்ஜிய சபா எம்.பி.யான டாக்டர் இ.எம். சுதர்ஷன நாச்சியப்பன் மாநாட்டின் ஏற்பாட்டாளராவார். உலக முன்னேற்றத்திற்கான மனித உரிமைகள் தொடர்பான இந்திய பாராளுமன்ற அமைப்பில் 150 எம்.பி.க்கள் அங்கம் வகிக்கின்றனர். இந்திய பாராளுமன்றத்தின் மக்களவையான லோக்சபா, மாநிலங்கள் அவையான இராஜ்ஜிய சபா ஆகியவற்றின் எம்.பி.க்களே இதில் இடம்பெற்றுள்ளனர். இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கைத் தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒன்றுபட்ட அரசியல் நிலைப்பாட்டை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்த மாநாட்டிற்கு உலக அபிவிருத்திக்கான மனித உரிமைகள் தொடர்பான பாராளுமன்ற அமைப்பு அனுசரணை வழங்கியுள்ளது.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான கட்டமைப்பை உருவாக்குதல், மாநாட்டில் பங்குபற்றும் இலங்கைத் தமிழ்க் கட்சிகள் மத்தியில் கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துதல் என்பனவே இந்த மாநாட்டின் நோக்கமாகும். இந்த மாநாட்டில் இலங்கைத் தமிழ்க் கட்சிகள் மத்தியில் கருத்தொருமைப்பாடு ஏற்படுமேயானால், இதன் மூலம் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து ஆதரவைத் திரட்டிக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் புதுடில்லியின் அணுகுமுறையில் சாத்தியமான மாற்றத்தை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மேற்கொள்ளும் விதத்தில் செல்வாக்கைச் செலுத்தக் கூடியதாக இந்த முன்னகர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடில்லிக்கு, வருகை தருமாறு உலக அபிவிருத்திக்கான மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான இந்திய பாராளுமன்ற அமைப்பினால் ஒவ்வொரு தமிழ் கட்சியினதும் இரு பிரதிநிதிகளைக் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் அல்லது செயலாளர் அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பத்து தமிழ்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்ற போதிலும் டில்லி மாநாட்டில் சகல தமிழ்க் கட்சிகளும் கலந்துகொள்வார்களா என்பது குறித்து அறியவரவில்லை.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்டிருக்கும் அதேசமயம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லையென இணையத்தளச் செய்தியொன்று தெரிவித்தது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை அமைப்பு, சுரேஷ் பிரேமச்சந்திரன் அமைப்பு ஆகிய நான்கு கட்சிகள் அங்கம் வகிக்கும் தமிழ்க் கூட்டமைப்பிற்கு தனியாக அழைப்புவிடுக்கப்படாமல் அதன் நான்கு பங்காளிகளுக்கும் தனித்தனியே அழைப்புவிடுக்கப்பட்டிருக்கிறது. தமிழரசுக் கட்சியின் பிரதிநிதியாக அக்கட்சியின் யாழ்.மாவட்ட எம்.பி.மாவை சேனாதிராஜா தேசிய பட்டியல் எம்.பி. எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். சுரேஷ் பிரேமச்சந்திரன் மாநாட்டில் கலந்துகொள்வார். அதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எவ்.இன் பத்மநாபா பிரிவைச் சேர்ந்த சிறிதரன் துரைரட்ணம், அழைப்புவிடுக்கப்பட்டிருக்கிறது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, அகில இலங்கைத் தமிழர் ஐக்கிய முன்னணித் தலைவர் டாக்டர் கே.விக்னேஷ்வரன் ஆகியோரும் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

புளொட் மற்றும் ஈ.என்.டி.எல்.எவ். ஆகிய கட்சிகளுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதாக அறிய வருகிறது. ஞானசேகரம் அல்லது பரந்தன் ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எவ். இந்தியாவின் பங்களூரைத் தளமாகக் கொண்டிருக்கிறது. டில்லி மாநாட்டிற்கு உலக அபிவிருத்திக்கான மனித உரிமைகள் தொடர்பான இந்திய பாராளுமன்ற அமைப்பிற்கு ஈ.என்.டி.எல்.எவ். அனுசரணை வழங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மலையக தமிழ்க் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகள் அல்லது ஐ.தே.க., ஐ.ம.சு.மு. அல்லது ஜே.வி.பி. போன்ற கட்சிகளைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருக்கவில்லை. துயரும் தீர்வும் என்ற மாநாட்டிற்கு இந்திய அரசாங்கம் தந்திரோபாயமான ஆதரவை வழங்கியிருக்கும் சாத்தியம் இருப்பதாக ஊகிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த மாநாட்டின் ஏற்பாட்டாளர் சுதர்ஷன நாச்சியப்பன் இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் விசுவாசியென ஊடகங்கள் சில விமர்சித்துள்ளன. தமிழ் நாட்டிலுள்ள கடும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் காங்கிரஸ் கட்சி தற்போது கடுமையான எதிர்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் நிலையில் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருப்பது குறித்து பல்வேறு விதமான ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன

கருத்துகள் இல்லை: