ஞாயிறு, 31 ஜூலை, 2011

மன்மோகன், சோனியாவின் பதில் என்ன?ஆ.ராசா கடுமையான குற்றச்சாட்டுகளை

சென்னை, ஜூலை 30: 2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.சென்னையில் அ.தி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டங்களுக்குப் பிறகு நிருபர்களிடம் முதல்வர் ஜெயலலிதா கூறியது:-"2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மீது தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார்.இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பல நாள்கள் ஆகியும், இது குறித்துப் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ எந்தவிதப் பதிலையும் அளிக்கவில்லை. இந்த ஊழலில் உள்ள உண்மையை அறிந்துகொள்ளக் கூடிய உரிமை இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிறது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி இது குறித்து அறிக்கையை வெளியிட வேண்டும். நாட்டின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.பழிவாங்கும் நடவடிக்கை இல்லை: நிலப் பறிப்பு வழக்குகள் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு தொடரப்படவில்லை. இது தொடர்பான புகார்கள் கடந்த 5 ஆண்டுகளாகவே அளிக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால், இது தொடர்பாக முந்தைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.புதிதாக அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் மக்கள் இது தொடர்பான புகார்களுடன் காவல்நிலையங்களில் குவிந்தனர். இந்தப் புகார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன. எனவே, இவற்றை விசாரிக்க காவல்துறையில் சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது.இப்போது இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்கும் வகையில் விரைவு நீதிமன்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தரும் புகார்கள் அனைத்தும் உண்மையான புகார்கள். அவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சேராதவர்கள். எனவே, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற கேள்வியே எழவில்லை. நிலப் பறிப்பு தொடர்பாக இதுவரை 2 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன.அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்று 2 மாதங்கள் ஆகிறது. இதுவரை யாரையும் பழிவாங்கவில்லை. பழிவாங்கும் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. போலீஸார் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்கள் மீதே போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் இல்லை. லோக்பால் சட்ட மசோதா: லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமரைச் சேர்க்கக் கூடாது என்று ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளேன். எந்த ஒரு தனிநபருக்காகவும் இதை நான் வலியுறுத்தவில்லை. பிரதமர் பதவியின் அதிகாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இதைக் கூறுகிறேன்.நாடாளுமன்றத்தில் இலங்கைப் பிரச்னை: இலங்கைத் தமிழர் படுகொலை தொடர்பாக எங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவை, மக்களவையில் பிரச்னை எழுப்புவார்கள். போரின்போது குற்றம் புரிந்தவர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவும், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் அவர்கள் வலியறுத்துவார்கள். கச்சத்தீவு ஒப்பந்தத்தை சட்டவிரோதம் என்று அறிவித்து அதையும் மீட்குமாறு எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துவார்கள். அரசு கேபிள் டி.வி. தொடர்பாக விளம்பரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக உங்களுக்கு அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றார் ஜெயலலிதா.ஸ்டாலின் கைதா? தி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாக நிருபர் கேட்டபோது, ""அவர் கைதுசெய்யப்படவே இல்லை'' என்றார் ஜெயலலிதா.செயற்குழுக் கூட்டத்துக்கு வந்த ஜெயலலிதா தொண்டர்களின் வாழ்த்துகளை ஏற்கிறார்.

கருத்துகள் இல்லை: