செவ்வாய், 23 நவம்பர், 2010

விதிகளை மீறிய கட்டிடங்கள்-அனுமதி தந்த அதிகாரிகள் பட்டியலை கோரும் ஹைகோர்ட்

சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் பட்டியலை ஒரு வாரத்தில் தாக்கல் செய்யுமாறு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு (சி.எம்.டி.ஏ) உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த சாலமன் சென்னை மாநகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் விசாரித்து, சென்னை நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு (சி.எம்.டி.ஏ), மாநகராட்சிக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பட்டியல் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள் ஒரு வார கால அவகாசம் கொடுத்தனர். அத்துடன் விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகளின் பெயர் பட்டியலையும் சேர்த்து தாக்கல் செய்யுமாறு சி.எம். டி.ஏவுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: