சனி, 27 ஜனவரி, 2024

காங்கிரசை கடுமையாக விமர்சிக்கும் அமைச்சர் கண்ணப்பன்: சிவகங்கை சீற்றமா?

 மின்னம்பலம் - Aara  : காங்கிரசை ‘காலி’ செய்த திமுக அமைச்சர் கண்ணப்பன்: சிவகங்கை சீற்றமா?
காங்கிரஸ் கட்சி பற்றி திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசிய பேச்சு தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 25 மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க பொதுக்கூட்டத்தில் புதுச்சேரியில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசினார்.
அப்போது அவர், “இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெரிய கட்சி. 120 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிற கட்சி. ஆனால் வலிமை இழந்துவிட்டது. உண்மைய ஒத்துக்கணும்.
காங்கிரஸ் காரங்க நம்மகூட இருக்காங்க. அவங்கள குறையா சொல்லலை. அவங்க உழைக்கணும். ஈரோடு இடைத் தேர்தல்ல பார்த்தேன். தலைவர் எவ்வளவு கஷ்டப்பட்டார்னு பார்த்தேன். நாங்க வேலைபாக்குறோம். அமைச்சர்கள் வேலை பாக்குறாங்க. தலைவர் வர்றாரு. செலவு நம்மதான் பண்றோம். அங்க மட்டுமல்ல வர்ற தேர்தல்லையும் அப்படித்தான். அது உலகம் தெரிஞ்ச விஷயம்.
வேலை செய்யணும், கஷ்டப்படணும், அந்த தொகுதிய ஜெயிக்கணும்னு எண்ணம் இருக்கணும். காங்கிரஸ் கட்சி என்னன்னா சீட்டு வாங்குறதுக்குன்னே கட்சி நடத்துறது. அதுல என்ன பிரயோசனம்? மக்களுக்காக உழைக்கணும். ஆனா தேர்தல் நேரத்துல எட்டிப் பாக்குறது மக்கள் மத்தியில எடுபடறதில்லை. பாஜக அதனாலதான் ஆட்டம் போடுது.



நேத்திக்கு வந்தவங்க எல்லாம் இன்னிக்கு ஆட்சி நடத்துறான் இந்தியாவுல. அவர்கள் மிரட்டலுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம். மோசமான ஆட்சி இந்தியாவுல நடக்கிறது. காங்கிரஸ் 120 ஆண்டு கால பெரிய கட்சி. ஆனால் வலிமை இழ்ந்துவிட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் வேற வேற மாதிரி இருக்கு. மெஜாரிட்டி  இருப்பது மாநில கட்சிகள்தான்” என்று பேசியிருக்கிறார் அமைச்சர் ராஜ கண்ணப்பன்.

இந்த பேச்சின் வீடியோவை ஆங்கில சப் டைட்டிலோடு எடுத்து தனது சமூக தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,
“காங்கிரஸ் கட்சியை அம்பலப்படுத்த I.N.D.I. கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட்டு தீர்மானம் எடுத்துள்ளன போல. காங்கிரஸ் கட்சி தேர்தல் நேரத்தில் சீட்டு தேடுவதற்காகவே நடத்துகிறது என திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியிருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.

9 பேர் இன் படமாக இருக்கக்கூடும்

கண்ணப்பன் இப்படி திடீரென காங்கிரஸ் மீது பாய்ச்சல் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று விசாரித்தபோது,

“ராஜ கண்ணப்பன் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா போட்டியிடுவார் என்று தெரிகிறது. திமுக சார்பில் தனது மகனுக்காக முதலில் ராமநாதபுரம் மீதுதான் ராஜ கண்ணப்பன் கண் வைத்திருந்தர். ஆனால் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அதிமுக சார்பில் சிவகங்கை தொகுதியில் கோகுல இந்திரா போட்டியிடலாம் என்று அவருக்கு தகவல் கிடைத்ததால்… தனது சொந்த ஊர் அமைந்துள்ள சிவகங்கையில் திமுக சார்பில் தன் மகன் திலீப்பை நிறுத்த முயற்சிக்கிறார் அமைச்சர் கண்ணப்பன்.

இந்த நிலையில் காங்கிரஸில் ஏற்கனவே எம்பியாக இருந்த கார்த்தி சிதம்பரம் இதற்கு தடையாக இருக்கிறார். மீண்டும் சிவகங்கையில் போட்டியிடுவதற்கான எல்லா வேலைகளிலும் கார்த்தி சிதம்பரம் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் தனது சிவகங்கை தொகுதியின் அடிப்படையிலான எரிச்சலை புதுச்சேரியில் காங்கிரஸ் மீது பொத்தாம் பொதுவாக கொட்டிவிட்டார்” என்கிறார்கள் சிவகங்கை திமுகவினர்.

திமுக -காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைகள் அதிகாரபூர்வமாக தொடங்க இருக்கும் நிலையில் கண்ணப்பனின் இந்த பேச்சு கூட்டணிக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
–வேந்தன்

கருத்துகள் இல்லை: