புதன், 24 ஜனவரி, 2024

அயோத்தி ராமர் கோவில் குறித்து இஸ்லாமிய நாடுகள் ( OIC ) கவலை தெரிவிப்பது ஏன்?

BBC News தமிழ் :  இஸ்லாமிய மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு(OIC) அயோத்தியில் ராம் கோவில் கட்டப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஓஐசி செவ்வாயன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், "இந்திய நகரமான அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் 'ராமர் கோவில்' கட்டப்பட்டது கவலைக்குரியது,” என இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள் கூறியுள்ளன.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள புதிய ராமர் கோவிலை ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், பாலிவுட்டின் பிரபல நடிகர், நடிகைகள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்விற்கு ஒரு நாள் கழித்து, ஜனவரி 23 அன்று மசூதிக்கு பதிலாக ராமர் கோவில் கட்டப்படுவதற்கு ஓஐசி கண்டனம் தெரிவித்துள்ளது. அதுகுறித்த தனது அறிக்கையில், "ஓஐசி நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சிலின் முந்தைய கூட்டங்களில் வெளிப்படுத்தப்பட்ட நிலைப்பாட்டிற்கு ஏற்ப, பாபர் மசூதி போன்ற முக்கியமான இஸ்லாமிய தளங்களை அழிக்கும் இந்த நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இந்தியா தரப்பில் இருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு

ஓஐசி என்றால் என்ன, அதில் இந்தியா ஏன் இல்லை?
முஸ்லீம் மக்கள்தொகை அடிப்படையில், இந்தோனீசியா மற்றும் பாகிஸ்தானுடன் இந்தியா முதல் மூன்று நாடுகளில் உள்ளது. பியூ ஆராய்ச்சியின்படி (Pew Research) , 2060இல் இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகமாக இருக்கும் என்றும் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஓஐசி என்பது இஸ்லாமிய அல்லது முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் அமைப்பு. இதில் மொத்தம் 57 நாட்டின் உறுப்பினர்கள் உள்ளனர். சௌதி அரேபியா ஓஐசி-இல் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் சௌதி அரேபியா முஸ்லீம் மக்கள்தொகை அதிகமாக இருக்கும் உலகின் முதல் 10 நாடுகளில்கூட இல்லை. இருப்பினும், இஸ்லாத்தின் பார்வையில், சௌதி அரேபியா மெக்கா மற்றும் மதீனாவின் காரணமாக மிகவும் முக்கியமானது.

முஸ்லீம் மக்கள்தொகை அடிப்படையில் முதல் மூன்று நாடுகளில் இந்தியா இருந்தாலும் ஓஐசி-இல் உறுப்பினராக இல்லை. 2006ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி சௌதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் இந்தியா வந்தார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது, ஓஐசியில் இந்தியா பார்வையாளர் அந்தஸ்தை பெற வேண்டும் என்று கூறியிருந்தார். இந்தத் திட்டத்தை பாகிஸ்தான் இந்தியாவிடம் முன்வைத்தால் நல்லது என்று சௌதி மன்னர் கூறியிருந்தார்.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், ஓஐசியில் பார்வையாளர் அந்தஸ்தை விரும்பும் எந்த நாடும், ஓஐசி உறுப்பு நாடுகளுடன் எந்தவிதமான சர்ச்சையிலும் ஈடுபடக்கூடாது என்று கூறியது.

கடந்த 1969ஆம் ஆண்டு மொராக்கோவின் தலைநகரான ரபாத்தில் ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் நடைபெற்ற இஸ்லாமிய உச்சி மாநாடு முதல் ஓஐசி மற்றும் இந்தியா இடையிலான உறவுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த மாநாட்டிற்கு சௌதி அரேபியாவின் மன்னர் பைசல் இந்தியாவை அழைத்திருந்தார். அங்கு அது முஸ்லிம் நாடுகளின் பிரச்னையல்ல மாறாக அனைத்து முஸ்லிம்களின் பிரச்னை என்றும் கூறினார், அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன்.

பின்னர், இந்திய பிரதிநிதிகளும் உச்சிமாநாட்டில் உரையாற்றினர். ஆனால், இதை விரும்பாத பாகிஸ்தான், உச்சி மாநாட்டின் எஞ்சிய அமர்வுகளில் இருந்து இந்தியாவை வெளியேற்றியது. பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் யாஹ்யா கான் இந்தியாவை புறக்கணித்தார்.

அப்போதிருந்து, ஓஐசி மற்றும் இந்தியா இடையிலான உறவுகள் மிகவும் சுமூகமாக இல்லை. ஓஐசி காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு நெருக்கமான அறிக்கைகளை வெளியிடுகிறது. அது இந்தியாவால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் 1948 மற்றும் 1949 தீர்மானங்களின்படி, காஷ்மீரிகள் சுயநிர்ணய உரிமையைப் பெற வேண்டும் என்று ஓஐசி கூறுகிறது. ஓஐசி சாசனத்தின்படி, இந்த அமைப்பின் இலக்குகளை ஊக்குவிக்க விரும்பும் முஸ்லீம் நாடுகள் மட்டுமே உறுப்பினராகத் தகுதியுடையவை.

ஆனால், முஸ்லீம் அல்லாத நாடுகள் ஓஐசி-இல் பார்வையாளர் அந்தஸ்தை பெற்றுள்ளன. ரஷ்யா 2005இல் பார்வையாளராக இணைந்தது. பௌத்த பெரும்பான்மை நாடாக இருந்தாலும் தாய்லாந்துக்கு 1998இல் பார்வையாளர் அந்தஸ்து கிடைத்தது.


இந்தியா தொடர்பான பிரச்னையில், ஓஐசி அறிக்கை வெளியிடுவது இது முதல்முறை அல்ல. இந்த அமைப்பு இதற்கு முன்பும் வெவ்வேறு பிரச்னைகளில் இதைச் செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு நீக்கப்பட்டதை இந்திய அரசின் ஒருதலைபட்சமான முடிவு எனவும் ஓஐசி கண்டனம் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக ஓஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்ச்சைக்குரிய இந்தப் பகுதியின் மக்கள்தொகை கட்டமைப்பை மாற்றும் நோக்கில் இது செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீர் தலைவர் யாசின் மாலிக்கிற்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை குறித்தும் ஓஐசி கவலை தெரிவித்திருந்தது.

பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா விவகாரத்திலும் ஓஐசி கடும் ஆட்சேபனை தெரிவித்ததுடன், இந்தியாவில் இஸ்லாம் மீதான வெறுப்பு அதிகரித்து வருவது, இஸ்லாத்தை இழிவுபடுத்துவது முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட முயற்சியின் ஒரு பகுதி என்றும் கடுமையாகக் கூறியிருந்தது.

ஓஐசி-இன் அறிக்கைகளுக்கு இந்தியாவின் எதிர்வினை என்ன?
இருப்பினும், ஓஐசி வெளியிடும் அறிக்கைகளை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது குறித்த ஓஐசி-இன் எதிர்வினைக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் இது 'தவறான நோக்கத்துடன் கொடுக்கப்பட்ட அறிக்கை' எனக் கூறியது.

பாகிஸ்தானை சுட்டிக்காட்டிய அமைச்சகம், "ஓஐசி மனித உரிமைகளை மீறும் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒருவரின் உத்தரவின் பேரில் இதுபோன்ற கருத்துகளைக் கூறுகிறது. இதுபோன்ற அறிக்கைகள் ஓஐசி-இன் நம்பகத்தன்மையை பலவீனப்படுத்துகிறது," என்று கூறியது.

ராமர் கோவில் தொடர்பாக பாகிஸ்தானில் என்ன விவாதம் நடக்கிறது?

ஓஐசி,யின் அறிக்கைகளுக்கு இந்தியாவின் எதிர்வினை
பிரபல பாகிஸ்தானிய எழுத்தாளர் பர்வேஸ் ஹூட்பாய் பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான் நாளிதழில் "ராம் மந்திர் - அன் ஹோலி" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர், ஜனவரி 22ஆம் தேதி நடந்த நிகழ்வுகளும், அதில் இந்திய பிரதமரின் பங்கும் மத அடிப்படையிலானது எனக் கூறியுள்ளார்.

"மோதி தனது ஆட்சியின்கீழ், 1947இல் பிறந்த இந்தியாவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய இந்தியாவை உருவாக்கியுள்ளதாக மீண்டும் ஒரு முறை சமிக்ஞை செய்ய விரும்புகிறார்," என எழுதியுள்ளார் பர்வேஸ் ஹூடாபாய்.

"மார்ச் 2023இல், ஒரு கும்பல் 'ஜெய் ஸ்ரீராம்' என்று முழக்கமிட்டு, நூறு ஆண்டுகள் பழமையான மதரஸாவை தீ வைத்து எரித்தது, அதில் ஒரு நூலகமும் இருந்தது. பழங்கால கையெழுத்துப் பிரதிகள் இந்த நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 12ஆம் நூற்றாண்டில் முஸ்லிம் படையெடுப்பாளர் பக்தியார் கில்ஜியால் நாளந்தா பல்கலைக்கழகத்தை அழித்ததற்கு பழிவாங்கப்பட்டது," என பர்வேஸ் ஹூட்பாய் எழுதினார்.

"ராமர் கோவில் கும்பாபிஷேகம் காங்கிரஸை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன், எதிர்க்கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் இதை 'அரசியல் நிகழ்ச்சி' என்று கண்டித்து, அதில் பங்கேற்க மறுத்துவிட்டனர். ஆனால் கட்சியின் சிறிய அணிகளில் உள்ள ஒரு தலைவர் அயோத்திக்கு சென்று சரயு நதியில் குளித்துவிட்டு, ராமராஜ்ஜிய பிரமாணம் செய்து கொண்டார். இருப்பினும் அவரது 'ராமராஜ்யம்' பாஜகவின் 'ராம ராஜ்ஜியத்தில்' இருந்து சற்று வித்தியாசமானது."

பாகிஸ்தானின் வரலாற்றை அறிந்தவர்கள், மதம் மற்றும் அரசியலின் கலவையைக் கண்டு ஆச்சரியப்பட மாட்டார்கள். 1937 தேர்தலில் ஒரு மோசமான தோல்விக்குப் பிறகு, அகில இந்திய முஸ்லிம் லீக்கின் தலைமை, மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தியது மற்றும் அதை அரசியலில் இணைத்தது," என எழுதியுள்ளார் பர்வேஸ் ஹட்பாய் எழுதுகிறார்.

அப்துல் பாசித்
இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் அப்துல் பாசித், 'டிசைஃபர்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில், நாட்டின் மதச்சார்பற்ற அரசலமைப்புடன் முன்னேற விரும்பும் மக்கள் இந்தியாவிலும் உள்ளனர் என்று கூறினார்.

ராம் மந்திர் பிரான் பிரதிஸ்தா நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், அதில் பங்கேற்க மறுத்துவிட்டனர். மதச்சார்பற்ற அரசமைப்பை முன்னோக்கிக் கொண்டு செல்ல விரும்பும் நல்லவர்கள் இந்தியாவில் உள்ளனர். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்ததும், இந்தியாவில் குறிப்பாக சிறுபான்மையினரின் நிலைமை மோசமாகிவிட்டது, எனப் பேசியுள்ளார்.

"நாம் அங்குள்ள ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களைப் பார்த்தால், அங்கு பெரும் அமைதி இருப்பதாகவும், எந்த பிரச்னையும் இல்லை எனவும் காட்டப்படுகிறது. ஆனால் அது அவ்வாறு இல்லை," எனப் பேசினார். முன்னதாக, ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகமும் அறிக்கை வெளியிட்டது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "1992இல் மசூதி இடிப்புக்குப் பிறகு கடந்த 31 ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள் இன்று ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன. இவை இந்தியாவில் பெருகி வரும் பெரும்பான்மைவாதத்தை சுட்டிக்காட்டுகின்றன.

இவை இந்திய முஸ்லீம்களை அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒதுக்கி வைக்கின்றன. இடிக்கப்பட்ட மசூதி இடத்தில் கட்டப்பட்ட ராமர் கோவில், இந்திய ஜனநாயகத்தில் நீண்ட காலத்திற்குக் கறையாக இருக்கும்," எனக் கூறியுள்ளது.

பிரதமர் மோதி என்ன சொன்னார்?
முன்னதாக, ஜனவரி 22ஆம் தேதி பேசிய பிரதமர் மோதி, "பல நூற்றாண்டுகள் பொறுமையாக இருந்து நாம் இன்று நம் பாரம்பரியத்தைப் பெற்றுள்ளோம். இன்று நமக்கு ஸ்ரீராமரின் கோவில் கிடைத்துள்ளது. அடிமை மனப்பான்மையை உடைத்து எழுந்த தேசம், இதுபோன்ற ஒரு புதிய வரலாற்றை உருவாக்குகிறது," என்றார்.

பிரதமர் தனது உரையில், ராமர் கோவில் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பையும் குறிப்பிட்டு, “அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகும், ராமர் இருப்பதற்காகப் பல தசாப்தங்களாக சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. இந்தியாவின் நீதித்துறை கண்ணியத்தைக் காப்பாற்றியது. ராமர் நீதிக்கு இணையானவர். கோவிலும் நீதி மற்றும் நியாயமான முறையில் கட்டப்பட்டது," என்றார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக வழக்கு நடந்து வந்தது. சர்ச்சைக்குரிய நிலத்தை அறக்கட்டளையிடம் ஒப்படைத்து, அங்கு கோவில் கட்ட வேண்டும் என்று 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனுடன், நீதிமன்ற உத்தரவின் பேரில், உத்தர பிரதேச மத்திய சன்னி வக்பு வாரியத்திற்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அயோத்தியில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள இந்த நிலத்தில் ஒரு மசூதி கட்டப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை: