மின்னம்பலம் - Aara : டிஜிட்டல் திண்ணை: அறநிலையத்துறைக்குள் அயோத்தீ… சேகர்பாபுவை சுற்றி என்ன நடக்கிறது?
அயோத்தியிலே பால ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து புதிய கோவிலை திறந்து வைத்து பிரதமர் மோடி விரிவான உரையாற்றியிருக்கிறார். இது மின்னம்பலத்தில் தனி செய்தியாக வெளிவந்திருக்கிறது. இதேநேரம் தமிழ்நாட்டில் இந்த நிகழ்வு குறித்து ஆளுங்கட்சியான திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான அரசியல் மோதல்கள் நடைபெற்றுள்ளன
.
ராமர் கோவில் திறப்பு விழா அன்று தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், நேரடி ஒளிபரப்புகள் செய்ய தமிழ்நாடு அரசு தடை விதிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜனவரி 21 ஆம் தேதி குற்றம் சாட்டினார்.
இதற்கு உடனடியாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மறுப்புத் தெரிவித்த நிலையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலினும் மறுப்பு தெரிவித்துள்ளார். பாஜகவில் அனைவரும் whatsapp யுனிவர்சிட்டியில் படித்தவர்களாக இருக்கிறார்கள் என்று கடுமையாக தாக்கியிருக்கிறார்.
இந்த அயோத்தி அரசியலில் ஆளுநர் ஆர்.என்.ரவியும் இணைந்துகொண்டார். மேற்குமாம்பலம் கோதண்டராமர் கோயில் அர்ச்சகர்கள் அச்ச உணர்வோடு இருந்ததை தான் உணர்ந்ததாக ஆளுநர் தெரிவித்திருந்தார். ஆனால் அப்படி எந்த அச்சமும் இல்லை என்று அந்த கோயில் அர்ச்சகரே மறுத்துவிட்டார். இதுபற்றித்தான் முதலமைச்சர் ஸ்டாலின், காமாலைக் கண் கொண்டவர்கள் என்று ஆளுநரைக் குறிப்பிட்டு பதிலளித்துள்ளார்.
கடந்த 2021 நவம்பர் மாதம் பிரதமர் மோடிஉத்தரகண்ட் மாநிலத்தில் கேதார்நாத்தில் சங்கராச்சாரியாரின் சிலையை திறந்து வைத்தார். அந்த நிகழ்வை தமிழக கோயில்களில் சிறப்பு நேரடி ஒளிபரப்பு செய்தது இதே சேகர்பாபு தலைமையிலான அறநிலையத்துறை. ஆனால் இப்போது என்ன நடந்தது?
ஜனவரி 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலையே பரவலாக அறநிலையத்துறையின் ஆளுகைக்கு உட்பட்ட கோயில்களின் நிர்வாக அலுவலர்கள் அலுவலகத்தில் இருந்து அந்தந்த கோவில் அர்ச்சகர்களுக்கு செல்போன் மூலமாக ஒரு அறிவுறுத்தல் செய்யப்பட்டது. அதாவது 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டு கோயில்களில் பாஜகவினர் பொது வழிபாடு என்ற பெயரில் அரசியல் செய்ய பார்க்கிறார்கள். எனவே அன்று வழக்கமான பூஜைகளை தவிர வேறு எந்த சிறப்பு பூஜைகளும் செய்ய வேண்டாம், மேலும் ஜனவரி 22 ஆம் தேதி சர்க்கரை பொங்கல் கூட சுவாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டாம் என்றும் அறநிலையத்துறை தரப்பில் வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த விஷயம் ஆலய அர்ச்சகர்களின் whatsapp குரூப் களில் பரவலாக விவாதிக்கப்பட அது இயல்பாகவே பாஜக வட்டாரத்தினருக்கு தெரிய வந்தது. ஏற்கனவே ஜனவரி 22ஆம் தேதி கோவில்களில் திரை கட்டி அயோத்தி நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய பாஜகவினர் ஏற்கனவே ஆங்காங்கே முயற்சி மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தான் இந்த விவகாரம் செய்தியாகவும் வெளிவர, அதை பயன்படுத்தி பாஜக அரசியல் விவகாரமாக மாற்றியது.
நாங்கள் எந்த தடையும் விதிக்கவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு கூறிய நிலையில், அப்புறம் எப்படி அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்க முடியும்? என்ற கேள்விக்கு விடை தேடியபோது மேலும் சில தகவல்கள் கிடைத்தன.
அதாவது தற்போதைய இந்து சமய அறநிலையத்துறையின் முதல் நிலை அதிகாரிகள், இடைநிலை அதிகாரிகள், கடைநிலை அதிகாரிகள் வரை 70% அதிகாரிகள் கடந்த அதிமுக ஆட்சியில் என்னென்ன பொறுப்புகளில் இருந்தார்களோ இப்போது வரை அதே பொறுப்புகளில் தான் தொடர்கிறார்கள். இவர்கள் கடந்த இரண்டரை வருடங்களாக மாற்றப்படவே இல்லை. கடந்த அதிமுக ஆட்சி காலத்திலிருந்தே பாஜகவினரோடு நெருக்கமாக இருக்கும் இவர்கள் அறநிலையத்துறைக்குள் நடக்கும் முக்கியமான மூவ்மெண்ட்டுகளை பாஜகவுக்கு நட்பு ரீதியாகவே பகிர்ந்து வந்தனர், வருகின்றனர்.
இந்த நிலையில் அதே அதிகாரிகள் தான் அமைச்சர் சேகர்பாபுவுக்கு தெரியாமலேயே கீழ்நிலை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். இதை கனகச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட பாஜக இதில் பரபரப்பான அரசியல் செய்து விட்டது.
ஜனவரி 22 ஆம் தேதி அன்று கோவில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வெளிப்படையான தடை விதிக்கவில்லை என்றாலும் அறநிலையத்துறையில் இருக்கும் சில அதிகாரிகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலேயே இந்த விஷயங்களை கையாண்டிருக்கிறார்கள். எந்தெந்த அதிகாரிகள் இதுபோல வாய்மொழி வதந்தியை கிளப்பியது என்பது பற்றி தனிப்பட்ட விசாரணையைத் தொடங்கியிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக