சனி, 27 ஜனவரி, 2024

மாலத்தீவு வரும் சீனக் கப்பல் - மாலத்தீவு மீதான சீனாவின் செல்வாக்கை குறைக்க முடியுமா?

BBC News தமிழ் : இந்தியாவுக்கு மாலத்தீவுக்கும் இடையிலான ராஜ்ஜீய மோதல்களுக்கு மத்தியில், மாலத்தீவில் உள்ள இரண்டு முக்கிய எதிர்க்கட்சிகள் மாலத்தீவு அரசின் ‘இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு’ குறித்துக் கவலை தெரிவித்துள்ளன.
மேலும், இந்தியாவை ‘மிக நீண்டகால நட்பு நாடு’ என்றும் கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.
மாலத்தீவு அரசாங்கம், ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஒரு சீனக் கப்பல் மாலத்தீவு துறைமுகத்தில் நிறுத்தப்படுவதற்கு அனுமதியளிக்கப் பட்டதாகவும், அது துறைமுகத்தில் நிறுத்தப்படும் எனவும் அரசாங்கம் கூறியதைத் தொடர்ந்து இந்தக் கூட்டறிக்கை வெளியாகியுள்ளது.


மாலத்தீவு ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “தற்போதைய அரசு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை நோக்கித் தெளிவாகக் குவிவதாக இரு கட்சிகளும் நம்புகின்றன. மாலத்தீவின் வளர்ச்சியில் பங்களிக்கும் எந்தவொரு பங்காளரையும், குறிப்பாக நாட்டின் மிக நீண்டகால கூட்டாளியை அந்நியப்படுத்துவது நாட்டின் நீண்டகால வளர்ச்சிக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்,” என்று தெரிவித்துள்ளன.
மாலத்தீவு அதிபரை எச்சரித்த எதிர்க்கட்சிகள்: இந்தியாவை எதிர்ப்பது வளர்ச்சியை பாதிக்குமா?

பட மூலாதாரம், MDP Secretariat/X

அதுமட்டுமின்றி, “மாலத்தீவு பாரம்பரியமாகச் செய்து வருவதைப் போல, நாட்டு மக்களின் நலனுக்காக, நாட்டின் அடுத்தடுத்த அரசுகள் அனைத்து வளர்ச்சிப் பங்களிப்பாளர்களுடனும் இணைந்து செயல்பட முடிய வேண்டும். இந்தியப் பெருங்கடலில் அமைதியும் பாதுகாப்பும் நிலவுவது, மாலத்தீவின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் இன்றியாதது,” என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதியின் லட்சத்தீவு பயணத்தின்போது, மாலத்தீவின் மூன்று துணை அமைச்சர்கள், பிரதமருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதால் சர்ச்சை வெடித்தது.

மூன்று அமைச்சர்களின் சமூக ஊடக பதிவுகளுக்குப் பிறகு அதிபர் முகமது முய்சு அவர்களை இடைநீக்கம் செய்தார். இந்த சர்ச்சை இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதைப் புறக்கணிக்குமாறு சமூக ஊடகங்களில் அழைப்பு விடுக்கும் அளவுக்கு சர்ச்சையானது.

இந்தியப் பெருங்கடலின் நடுவில் அமைந்துள்ள சுமார் 1,200 பவளப்பாறை தீவுகள் மற்றும் வளைவடிவ தீவுகளைக் கொண்டது மாலத்தீவு. இந்தத் தீவில் சுமார் 520,000 மக்கள் வசிக்கின்றனர். இது இந்தியாவின் 1.4 பில்லியன் மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறியது.

சிறிய தீவு நாடாக இருப்பதால், உணவு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக அதன் பெரிய அண்டை நாடான இந்தியாவையே பெரும்பாலும் நம்பியுள்ளது.
தலைநகரான மாலேவில் வசிப்பவர்கள் பலர், இந்த ராஜ்ஜீய மோதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்று கவலைப்படுகின்றனர்.

மாலத்தீவு 300 சதுர கி.மீ மட்டுமே பரப்பளவு கொண்ட ஒரு சிறிய நாடு. இருப்பினும் புவியியல் ரீதியாக உலகில் மிகவும் முக்கியமான நாடு மாலத்தீவு எனக் கூறப்படுகிறது.
இந்தியப் பெருங்கடல் நாடான மாலத்தீவில் ஐந்தரை லட்சம் மக்கள் மட்டுமே வாழ்கின்றனர். ஆனால், “அதன் புதிய சீன ஆதரவு அதிபர், தனது பெய்ஜிங் பயணத்தின் மூலம், மாலத்தீவுக்கு பரிசாக அளிக்கப்பட்ட ஹெலிகாப்டர்களை பராமரிக்கும் வகையில், இந்தியாவுக்கு காலக்கெடு கொடுத்து, இந்தியா குறித்து ஆக்ரோஷமான அறிக்கைகளை வெளியிடும் அளவுக்கு தைரியத்தைப் பெற்றுவந்துள்ளார்,” என்று தமது ட்விட்டரில் முன்பு பதிவிட்டிருந்தார் இந்தியாவின் புகழ்பெற்ற உத்திரீதியாகச் செயல்படும் துறையைச் சேர்ந்த நிபுணர் பிரம்மா செல்லனி.

மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்சு இந்த மாதத் தொடக்கத்தில் சீனாவுக்கு ஐந்து நாள் பயணமாகச் சென்று வந்தார். நாடு திரும்பிய பிறகு, “மாலத்தீவு, சிறியதாக இருக்கலாம்” என்று தலைநகர் மாலேவில் அதிபர் முகமது முய்சு கூறினார்.

அவர் இந்தியாவின் பெயரை வெளிப்படையாகப் பயன்படுத்தாவிட்டாலும், அவரது பேச்சு இந்தியாவை மட்டுமே குறிக்கும் எனக் கூறப்படுகிறது.

மாலத்தீவுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய அரசிடமிருந்து வெளிப்படையாக வலுவான எதிர்வினை எதுவும் எழவில்லை. ஆனால், முய்சு அரசாங்கம் அதன் நிலையில் தொடர்ந்து உறுதியாக உள்ளது. இந்த நிலையிலேயே, மாலத்தீவு எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டறிக்கை வெளியாகியுள்ளது.

இந்தியா தனது ராணுவ வீரர்களை மார்ச் 15ஆம் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும் என்று மாலத்தீவு கெடு விதித்துள்ளது. இதுபோன்ற நிலையில் இந்த எதிர்மறையான நிலையை இந்தியா அமைதியாக வேடிக்கை பார்ப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இதற்கு அடிப்படைக் காரணம், மாலத்தீவு அமைந்திருக்கும் இடம்தான். இந்தியப் பெருங்கடலின் முக்கிய கடல் வழித்தடங்களுக்கு அருகில் அந்நாடு அமைந்துள்ளது. அந்தப் பாதைகள் வழியாகத்தான் சர்வதேச வர்த்தகம் நடக்கிறது. அந்த வழியாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எரிசக்தி அனுப்பப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் இந்தியாவின் மாலத்தீவுடனான உறவு மோசமடைவது எந்த வகையில் சரியானது இல்லையென்றே கருதப்படுகிறது.

தற்போது மாலத்தீவு இந்தியாவை மிக அதிகமாக எதிர்ப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் இதற்கு எதிர்வினையாற்றினால் மாலத்தீவு மக்களின் கோபத்தை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் பின்னர் அதைச் சரிசெய்வது அவ்வளவு எளிதானது இல்லையென்றும் கருதப்படுகிறது.

புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள சீன ஆய்வு மையத்தின் இணை பேராசிரியர் அரவிந்த் யெல்லேரி முன்பு இதுகுறித்து பிபிசியிடம் பேசியபோது மாலத்தீவு போன்ற சிறிய நாடுகளைத் தமது பக்கம் கொண்டு வர இந்தியா பெரியளவில் முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை என்றார்.

“இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் சீன முதலீட்டிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால், பூடான், மாலத்தீவில் தனது செல்வாக்கை சீனா வலுப்படுத்தியுள்ளது.

இந்த விஷயத்தில் சீனாவுடனான உறவின் மதிப்பை இந்த நாடுகள் புரிந்துகொள்ளும் வரை பொறுமையாக இருப்பதே இந்தியாவின் கொள்கையாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். இப்போது சீனாவின் நிதியுதவி பல நாடுகளுக்குச் சுமையாக மாறியுள்ளது.”

ஆகவே, அந்தப் ‘பொறியில்’ இருந்து அந்த நாடுகள் வெளியேற விரும்பும். அதுமட்டுமின்றி, “பூகோள ரீதியாக மாலத்தீவு இந்தியாவுடன் நெருக்கமாக உள்ளது. அங்குள்ள மக்கள்தொகை அமைப்பும் இந்திய மக்கள்தொகையின் அமைப்பிற்கு நெருக்கமாக உள்ளது."
மாலத்தீவு மீதான சீனாவின் செல்வாக்கை குறைக்க முடியுமா?

"இது சீனாவின் மக்கள்தொகையுடைய தன்மை மற்றும் இயல்புடன் பொருந்தவில்லை. ஆகையால், மாலத்தீவின் பண்புகள் சீனாவுடன் பொருந்தவில்லை என்பதை அந்த நாடு புரிந்துகொள்ள நேரம் கொடுக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார் அரவிந்த் யெல்லேரி.

அதேநேரத்தில், தொடக்கத்தில் இருந்தே முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான உத்தியையே கொண்டுள்ளார். இது இந்தியா மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் அமைதி மற்றும் மோதல் தீர்வுகளுக்கான நெல்சன் மண்டேலா மையத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் பிரேமானந்த் மிஸ்ரா, “மாலத்தீவின் பொருளாதாரத் தேவைகளில் சீனாவின் தலையீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்புத் துறை, பொருளாதார, மூலோபாய கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்றார்.

ஆகவே இந்தியா தனது அண்டை நாட்டுக் கொள்கையில் இந்தப் பிரச்னைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
 

கருத்துகள் இல்லை: