புதன், 24 ஜனவரி, 2024

(EVM போல) கணினி மென்பொருளால் பிரிட்டன் தபால் துறையில் நடந்த மிகப்பெரும் நிதி மோசடி

 450 வழக்குகளில் நீதிபதிகள் மென்பொருள் பொய் சொல்லாது என்று தவறாக நம்பி, வேறு எந்த தடயம், சாட்சிகள் எதையும் பார்க்காகாமல் முட்டாள்தனமான தீர்ப்புகள் கொடுத்தார்கள். நீதித்துறை அழுகிப் போனால் நாடு சர்வ நாசமாகும்!

Arun Bala :    தேவிந்தர் மிஸ்ரா.
இந்திய வம்சாவளியைச் சார்ந்த தேவிந்தர் இலண்டனில் வசிப்பவர்; சொந்தமாக டாக்சி ஓட்டுகிறார்;  பத்து பதினோரு ஆண்டுகளுக்கு முன் தான் அக்கவுன்டிங் படித்த சீமாவை இந்தியா போய் திருமணம் செய்து இலண்டனுக்கு அழைத்து வந்திருந்தார்.
இப்போது அவரை எப்படியாவது அவரது தாய் தந்தையரிடம் பேச வைத்து, இப்போதைக்கு பிரச்சினையைச் சமாளிக்க முடிவெடுத்த தேவிந்தர், சீமா இருந்த இடத்திற்கு ஃபோன் செய்து, கெஞ்சி அனுமதி வாங்கி, சீமாவைப் ஃபோனில் பிடித்து, இந்தியாவில் இருக்கும் மாமனார் மாமியாருக்கு கான்பரன்ஸ் கால் போட்டுப் பேச வைத்துச் சமாளித்து முடிப்பதற்கும், சிறை அதிகாரிகள் நேரம் முடிந்து விட்டதால் அழைப்பைத் துண்டிக்கச் சொல்வதற்கும் சரியாக இருந்தது.


சீமா ஏன் சிறை சென்றார்? ஒரு ஆள் அதுவும் டாக்சி ஓட்டிச் சம்பாதிப்பது பத்தவில்லை என்று, சீமாவும் வேலை பார்க்க ஆசைப்பட, அவருக்கு ஒரு பழைய பெட்டிக் கடையை விலைக்கு வாங்கி, அதில் ஒரு அஞ்சல் அலுவலக பிரான்சைஸ் எடுத்து வைத்துக் கொடுத்திருந்தார் தேவிந்தர்.
இந்தியா போல் இல்லாமல் பிரித்தானியாவில், அஞ்சல் துறையைப், போஸ்ட் ஆஃபீஸ் லிமிட்டெட் என்கிற பெயரில்  ஒரு வணிக நிறுவனமாக அரசு நடத்தினாலும், எல்லா அஞ்சல் அலுவலகங்களும் நம்மூர் பிரான்சைஸ் கொரியர் போல், போஸ்ட் ஆஃபீஸ் லிமிட்டெடிடம் இருந்து  தனியார்கள் பிரான்சைஸ் முறையில் எடுத்து நடத்தும் சிறு வணிக நிறுவனங்களே.

அப்படி எடுத்த பிரான்சைஸ் அஞ்சல் அலுவலகத்தில், கணக்கு வழக்கைக் கையாள போஸ்ட் ஆஃபீஸ் லிமிட்டெட் நிறுவனம் நிறுவி வைத்திருந்த, ஜப்பானின் பியூஜிட்சு நிறுவனத்தின் 'ஹொரைசான்' என்கிற மென்பொருள் முதல் நாளே 8000 ரூபாய் கணக்கில் குறைவதாகக் காட்டியது.

சீமா எவ்வளவோ முறை, கணக்கைச் சரி பார்த்தும் எங்கே பிழை என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாகச், சில மாதங்களில், ஹொரைசான் சீமா 22 இலட்சம் திருப்பி கட்ட வேண்டும் என்று சொல்ல,
பலரிடமும் கடன் வாங்கிக் கட்டி இருக்கிறார்கள் தம்பதிகள். மீண்டும் சில மாதங்களில் 75 இலட்சம் ரூபாய் அளவுக்குத் துண்டு விழுந்திருப்பதாக ஹொரைசான் சொல்ல,
அந்த பணத்தைச் சீமா கையாடல் செய்து விட்டார் என்று குற்றம் சாட்டி,
அவரது பிரான்சைஸை ரத்து செய்து, வழக்குத் தொடர்ந்தது போஸ்ட் ஆஃபீஸ் லிமிட்டெட்.
(பிரிட்டனில், 17ம் நூற்றாண்டில் இருந்து காவல் துறை தலையிடாமல், அஞ்சல் துறையே நேரடியாக வழக்குப் பதிவு செய்து, வழக்கு நடத்தலாம்)

அப்போது மாதமாயிருந்த சீமா, தான் ஒரு பைசாவைக் கூட திருட வில்லை;
வந்த முதல் நாளில் இருந்து ஹொரைசான் தான் தப்பும் தவறுமாகக் கணக்குக் காட்டுகிறது,
அவ்வளவு பணத்தைக் கட்டச் சொன்னால் நான் எங்கே போவேன்?
என்னை நம்புங்கள் என்று சத்தியம் செய்தும், கதறியும் அழுதும் போஸ்ட் ஆஃபீஸ் லிமிட்டெடும், நீதிமன்றமும் அவரை நம்பவில்லை.

ஆனாலும் இந்த பிரச்சினைக்குக், கர்ப்பிணியான தனக்குச் சிறைத் தண்டனை எல்லாம் கொடுக்க மாட்டார்கள் என்று நம்பிய சீமா,
தீர்ப்பு நாள் காலையில் கூட மகனிடம், அவனது பத்தாவது பிறந்த நாளை அன்று மாலை கொண்டாடுவோம் என்று நம்பிக்கையாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்.

அதெப்படி ஒரு மென்பொருள் உனக்கு மட்டும் தப்ப்பாகக் கணக்கு காட்டும் என்று சொல்லிய நீதிபதி, சீமாவுக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தணடனை விதித்துப், பணத்தை, அபராதம், வட்டி எல்லாம் சேர்த்துக், கடை, வீடை விற்றுக் கட்ட  உத்தரவிட, நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார் சீமா.

மலிவான இங்கிலாந்து ஊடகங்கள் சீமாவைக் 'கர்ப்பிணித் திருடி' என்று பட்டம் கொடுத்து செய்தி போட, தேவிந்தருக்கும் மகனுக்கும் 'திருட்டு வந்தேறிகள்' என்று செல்லும் இடமெல்லாம் 'நாம் பிரித்தானியர்களால்' அவமானங்கள்,
அச்சுறுத்தல்கள் தொடர்ந்தன. தண்டனை காலத்தின் இடையில் சீமாவிற்குக் குழந்தை பிறந்த போதும் கூட, கைதியான அவர் தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக ஒரு எலக்ட்ரானிக் விலங்கு ஒன்றைக் கை, காலில் கட்டித் தான் பிரசவ வார்டிற்கே அனுப்பி வைத்தது சிறைத்துறை.

2003-2010 கால கட்டத்தில் சீமா கதை இப்படி நடந்து கொண்டிருக்கும் போது,
இதே போல் பிரித்தானியா முழுவதும், 1999 முதல் 2015 வரை, இதே போல் 4000 அஞ்சல் நிலைய அதிகாரிகள், ஹொரைசான் மென்பொருள் கொடுத்த கணக்கின் படி, பிரச்சினையில் மாட்டினார்கள்,

அதில் பலர் சத்தம் போடாமல் பணம் கட்டி விட, 900 பேர் மீது பணம் கையாடல் குற்றச் சாட்டு எழுப்பட்டது. அத்தனை பேர்களிடமும், அவர்களுக்கு மட்டும் தான் இப்படிக் கணக்கில் துண்டு விழுந்திருக்கிறது.

அவர்கள் மட்டும் தான் மென்பொருள் மேல் குறை சொல்கிறார்கள் என்றது போஸ்ட் ஆபீஸ் லிமிட்டெட் நிறுவனம். அதில் சீமா தான் முதலில் சிறைக்குச் சென்றவர் என்றாலும், தொடர்ந்து 236 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.
மற்றவர்கள் சொத்துக்களை விற்று, நீதிமன்றத்தில் பணம் கட்டினார்கள்.
மொத்தத்தில் எல்லாருடைய கடை, தொழில், குடும்ப வாழ்க்கை எல்லாம் நாசம் ஆகியது.
பலருக்கு மணமுறிவுகள் ஏற்பட்டன. வீடிழந்து நடைபாதையில் வாழ்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள்.
 5 பேர் கொடூரத் தற்கொலை செய்து கொண்டார்கள். வழக்குகள் நடக்கும் போதே 50-60 பேர் பிரச்சினைகளில், வறுமையில் துவண்டே இறந்து போனார்கள்.

பாதிக்கப்பட்ட அஞ்சல் நிலைய அதிகாரிகள் வேண்டுகோளின் படி, அரசு கொடுத்த அழுத்தத்தில், போஸ்ட் ஆஃபீஸ் லிமிட்டெட் நிறுவனம் தானே வேண்டா வெறுப்பாக ஒரு விசாரனை நடத்தி, அதையும் முடிக்க விடாமல் தடுத்து நிறுத்திப், பிறகு பேச்சுவார்த்தை என்று பல பல உத்திகளில் காலம் தாழ்த்தியது;

வழக்கு போட்ட அஞ்சல் நிலைய அதிகாரிகளை மிரட்டியது;
போஸ்ட் ஆஃபீஸ் லிமிட்டெட் நிறுவனத்தைப் பற்றியோ, ஹொரைசான் பற்றியோ நாட்டில் யாரும் எதுவும் பேசி விடாத படி சாம, பேத, தான, தண்டங்களைக் கையாண்டது.

அப்படியே ஹொரைசான் பிரச்சினைகளயும் சரி செய்யாமல், யாருக்கும் எந்த இழப்பீடையும் கொடுக்காமல், 20 வருடங்களாக 2019 வரை இழுத்து அடித்தது.
அப்போது அதன் நிறுவனத் தலைவராக (சிஈஓ) இருந்த திருமதி பவுலா வின்னல்சுக்கு, அவர் காட்டிய இலாப வளர்ச்சிக்குச் சன்மானமாகப் பல மில்லியன் பவுண்டுகள் போனஸாகக் கொடுக்கப்பட்டு, பிரித்தானிய அரசர் கொடுக்கும் மிக உயர்ந்த பட்டமான சிபிஇ (பிரித்தானிய சாம்ராஜ்யத்தின்(!) தளகர்த்தர்) பட்டமும் கொடுக்கப்பட்டது.

அவர் ஒரு அங்கிலிகன் மதகுரு என்பதும், இந்த பிரச்சினைகள் எழுந்த நேரத்தில், அவருக்கு ஆதரவாக மத பிஷப்கள் பேசினார்கள் என்பதும் கூடுதல் தகவல்கள்.
கடைசியாக, 2019ல் 555 அஞ்சல் நிலைய அதிகாரிகள் கூட்டாக உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஹொரைசான் மென்பொருளில்,
அஞ்சல் நிலைய அதிகாரிகளுக்குத் தெரியாமல், அவர்கள் கணக்குகள் ரகசியமாக போஸ்ட் ஆஃபீஸ் லிமிட்டெட் மற்றும்  பியூஜிட்சு நிறுவன மென்பொறியாளர்களால் திரைமறைவில் மாற்றப்பட்டு வந்ததும், தெரிந்தே பல உண்மைகளை, மென்பொருள் பிரச்சினைகளை போஸ்ட் ஆஃபீஸ் லிமிட்டெட் நிறுவனம் மறைத்ததும் நிரூபணம் ஆகி,
போஸ்ட் ஆஃபீஸ் லிமிட்டெட் நிறுவனத்திற்கு 600 கோடி ரூபாய்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
அனாலும் அதில் 80% வழக்குச் செலவுகளுக்கே சென்றது கொடுமை.
தொடர்ந்து, அந்த தீர்ப்பின் அடிப்படையில் சீமா உட்பட பலருக்கு எதிரான பழைய தீர்ப்புகள் ரத்து செய்யப்பட்டன.  
பிரித்தானிய வரலாற்றிலேயே மிகப்பெரிய அநீதி இழைப்பாகப் பார்க்கப்படும் இந்த இமாலய ஊழல் வழக்கில்,
இன்னும் நூற்றுக்கணக்கான சாமானியர்கள் நீதி கிடைக்காமல் மேல்முறையீடுகளில் வழக்குகள்  நடந்து கொண்டிருக்கிறன.
வெகு சிலருக்கு மட்டுமே அவர்கள் இழந்த பணத்தில் ஒரு சிறிய பகுதி மட்டுமே திரும்ப கிடைத்திருக்கிறது. யாருக்கும் இழந்த பல வருட வாழ்க்கைக்காண இழப்பீடு எதுவும் கொடுக்கப் படவில்லை. தெரிந்தே தவறு இழைத்த போஸ்ட் ஆஃபீஸ் லிமிட்டெட், பியூஜிட்சு  நிறுவன அதிகாரிகள் யாருக்கும் எந்த தண்டனையும் இதுவரை வழங்கப்படவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன் பிரித்தானிய தொலைக்காட்சி ஐடிவியில், Mr Bates vs The Post Office என்கிற பெயரில் (ட்ரைலர் இணைப்பு முதல் கமெண்டில், விக்கிபீடியா இணைப்பு இரண்டாவதில்) இந்த வழக்கின் கதை ஒரு தொடர் நாடகமாக வர,

நாடே கொந்தளித்துப் போகக், கடைசியாகப் பிரதமர் ரிஷி சுனாக் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தண்டிக்கப்பட்ட எல்லா அஞ்சல் நிலைய அதிகாரிகளுக்கு எதிரான தீர்ப்புகள், வழக்குகள் எல்லாவற்றையும் மொத்தமாக ரத்து செய்து,
கூடுதல் இழப்பீடு கொடுத்துத், தவறிழைத்த நிறுவனங்கள், அதிகாரிகள்  மீது சட்ட நடவடிக்கை எடுப்போம்  என்று அறிவித்திருக்கிறார்.

இந்த இமாலய நீதிப் பரிபாலன பிழைச் சம்பவத்தில் இருந்து இந்தியா, இந்தியர்கள், தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் என்னவென்றால்:

1) கிட்டத்தட்ட 450 வழக்குகளில் நீதிபதிகள் மென்பொருள் பொய் சொல்லாது என்று தவறாக நம்பி, வேறு எந்த தடயம், சாட்சிகள் எதையும் பார்க்காகாமல் முட்டாள்தனமான தீர்ப்புகள் கொடுத்தார்கள். நீதித்துறை அழுகிப் போனால் நாடு சர்வ நாசமாகும்.
2) கட்டற்ற தனியார் மயமாக்கல், சமூகத்தின் தூண்களான அஞ்சல்துறை போன்ற அடிப்படைத் துறைகளை நாசமாக்கி சமூகத்தைச் சிதைக்கும்.
3) அரசு இயந்திரமும், முதலாளிகளும், மதமகுருமார்களும், நீதிபதிகளும், ஆட்சி பீடமும் பின்னிப் பிணைந்து, ஒரே படுக்கையில் கிடந்து உருளும் போது, சாமானிய மக்களின் வாழ்க்கை பந்தாடப்படும். இமாலய ஊழல்கள் நடந்தாலும் வெளியே தெரியாது.
4) கடைசியாக, முக்கியமாகக், கணிப்பொறி மென்பொருள் சொல்வதை மாற்ற முடியாத, மறுக்க முடியாத, வேத சத்தியமாக எடுப்பது மகா தவறு! மென்பொருள் தானாகப் பொய் சொல்லாது என்றாலும்  திரைமறைவில் செயல் படும் மகா சக்திகளால் அதைப் பொய் சொல்ல வைக்க முடியும்;
உண்மைகளை மாற்றி எழுத முடியும்; மாற்றியதற்கான தடயங்களையும் துல்லியமாக அழித்துப் புதிய பொய்யான 'உண்மைகளை' உருவாக்க முடியும்.

ஆகவே, இந்தியர்களே, இன்னும் வரும் பல தலைமுறைகளுக்கானத் தலைவிதியைத் தீர்மானிக்கும் தேர்தல்களை, ஆபத்தான,  பலவீனமான, திரைமறைவில் மாற்றப் படக் கூடிய எலெக்ட்ரானிக் இயந்திரங்களில் நடத்தி, உங்கள் நாட்டை மிகப்பெரிய, மீளமுடியாத புதை குழியில் விழச்செய்யாதீர்கள்!!
- அருண்பாலா

கருத்துகள் இல்லை: