ஞாயிறு, 21 ஜனவரி, 2024

ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தமும் கடமை தவறிய இந்திய ஒன்றிய அரசும்

 ராதா மனோகர் :  Floating  People -  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நூற்றாண்டுகளாக மக்கள் அங்கும் இங்குமாக போய்வந்தனர் என்பது வரலாறு!
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு இப்படியாக போக்கு வரவு செய்துகொண்டிருந்த மக்களின் தொகையானது இலங்கையில் . குறிப்பாக சிங்கள மக்களிடையே ஒரு குடிப்பரம்பல் அச்ச உணர்வை உண்டாக்கியது.
இதன் காரணமாகவே ஒரு இந்திய எதிர்ப்பு மனநிலை அங்கு உருவானது.
பல்வேறு தொழில்கள் காரணமாகவும் வியாபார நோக்கங்களுக்காகவும் ஏறக்குறைய ஐம்பதுகள் வரை இந்த போக்கு வரத்து வாழ்வியல் தொடர்ந்தது.
இலங்கையில் ஆட்சிக்கு வந்த அத்தனை அரசுகளும் இது தொடர்பாக இந்திய அரசோடு பல தடைவைகள் பேச்சுக்களை நடத்தி இருந்தன..
ஸ்ரீமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் இது விடயத்தில் ஒரு தீர்வை நோக்கி இருந்தது

அந்த ஒப்பந்தத்தில்  இந்தியா ஐந்தே கால் இலட்சம் மக்களுக்கு இந்திய குடியுரிமை கொடுப்பதென்றும்,
இலங்கை மூன்றே முக்கால் இலட்சம் மக்களுக்கு இலங்கை குடியுரிமை கொடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது



இந்த ஒப்பந்த எண்ணிக்கையில் வராத ஏனைய மக்களுக்கு பின்னர் பேசி தீர்வை எட்டுவதென்று தற்காலிகமாக  தீர்மானிக்கபட்டது

பின்பு கால ஓட்டத்தில் போர் உட்பட பல்வேறு காரணிகளால் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட அளவு மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க படவில்லை.
இந்திய குடியுரிமை பெற்ற மக்களில் பலர் இந்தியாவுக்கு வந்து சேரவில்லை
போரின் பக்கவிளைவாக போக்குவரத்து இன்மை போன்ற காரணங்களால் இலங்கையிலேயே தங்கி விட்டார்கள்.
 
இந்நிலையில் 1989 இல் ஜேஆர் ஜெயவர்த்தன அரசில் திரு சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் கடுமையான போராட்டத்தின் பயனாக இலங்கையில் அப்போது வாழ்ந்து வந்த அத்தனை இந்திய வம்சாவளி மக்களுக்கும் இலங்கை குடியுரிமை  கொடுப்பதற்கு இலங்கை அரசு முடிவெடுத்தது
அதை வேகமாக நடைமுறை படுத்தியது.

இதன் பின்பு இலங்கையில் நாடற்றவர்கள் என ஒருவரும் இல்லை.
இதன் படி சுமார் ஏழு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டது.

இது எப்படி திரு தொண்டைமானால் சாத்தியமானது?
ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்தானது 1964 இல்
அதன் பின்பு பிறந்த குழந்தைகள் தொகையானது  மீண்டும் மீண்டும் ஸ்ரீ மா சாஸ்திரி ஒப்பந்தத்தில் குறிப்பிடாத ஒரு  மக்கள் தொகை வளர்ச்சியை கொண்டிருந்தது
இந்த புதிதாக சேர்ந்த தொகையை பற்றிய  விடயத்தை திரும்பவும் இந்திய அரசோடு பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று,
 அப்போது ஜேஆர் ஜெயவர்த்தனா அரசில் வலிமையான அமைச்சர்களாக இருந்து திரு லலித் அத்துலத் முதலி திரு காமினி திஸாநாயக்க   திரு பிரேமதாசா போன்றவர்கள் வாதித்து கொண்டிருந்தனர்.

ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நீங்கள் இந்த மக்களின் பிரச்னையை வெறும் சட்ட பிரச்சனை அல்லது எண்ணிக்கை பிரச்சனை என்று விவாதித்து கொண்டிருப்பது  உங்கள் மீதான  எனது நம்பிக்கையை அடியோடு  தகர்த்து விட்டது என்று தொண்டமான் அறுதியிட்டு கூறினார்.  

இன்னும் சரியாக மூன்று மாதங்களுக்குள் இலங்கையில் இருக்கும் குடியுரிமை அற்ற அத்தனை மக்களுக்கும் இலங்கை குடியுரிமை வழங்கவேண்டும்!

இவர்களின் பிரச்சனை எண்ணிக்கை சார்ந்த விடயம் அல்ல.
இது ஒரு மனிதர்களின் மனித பிரச்சனை .
இதை இனி வேறு ஒரு கோணத்திலும் என்னால் பார்க்க முடியாது
எனது மக்களிடம் சென்று எனது தோல்வியை ஒப்புக்கொண்டு இந்த பொறுப்பை எதிர்கால சந்ததிக்கு விட்டு விடப்போகிறேன்  என்று அதிரடியாக பிரகடன படுத்தினார்.

இந்த விடயத்தை கேள்விப்பட்ட எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவி ஸ்ரீ மாவோ அம்மையார்  திரு தொண்டைமானை தொடர்பு கொண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  உங்களின் கோரிக்கையை நூறு வீதம் நடைமுறைப்படுத்த தயார் என்று கூறி திரு தொண்டைமானின் ஆதரவை நாடினர்.
இதை அறிந்து திரு பிரேமதாசா ஜேஆர் ஜெயவர்தனவிடம் சென்று .
ஸ்ரீமா அம்மையாரால் எல்லோருக்கும் குடியுரிமை கொடுக்க முடியும் என்றால் எம்மால் ஏன் முடியாது  நாம் கொடுப்போம் என்றார்.
இலங்கையில் அனைவர்க்கும் குடியுரிமை கிடைத்ததன் சுருக்கமான பின்னணி இதுதான்

இப்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் போக்கு வரத்து செய்து அங்கங்கே தங்கிய மக்களின் (Floating People)   குடியுரிமை பிரச்சனையில்  இந்தியா எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

இதுவரையில் இந்திய ஒன்றிய அரசு ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தில்  ஒப்பு கொண்ட  ஐந்தே கால் இலட்சம் மக்களுக்கு கூட குடியுரிமை வழங்கவில்லை

மறுபுறத்தில் இந்தியாவில் தங்கி உள்ள இந்திய இலங்கை மற்றும் கலப்பு வம்சாவளி மக்களின் குடியுரிமை பிரச்சனையை  இன்னும் கூட ஒரு மனித பிரச்சனையாக கருதவில்லை
வெறும் ஏட்டு சுரைக்காய் சட்ட பிரச்சனை என்பதாக நேரத்திற்கு ஒரு விதமாக பேசிக்கொண்டே இருக்கிறது
அக்கறையாக இருக்கிறோம் கவனிக்கிறோம் என்பது போன்ற வார்த்தை ஜாலங்களில் இந்திய ஒன்றிய அரசு நடந்து கொள்கிறது

இலங்கை இந்திய floating people என்பது இந்திய வம்சாவளியா இலங்கை வம்சாவளியா என்பதல்ல பிரச்சனை!  குடியுரிமை அற்று இந்த மக்கள் ஏறக்குறைய வாழ்நாள் முழுவதும் எந்த வித அடிப்படை மனித உரிமைகளுக்கும் அற்ற ஒரு அகதி கூட்டமாகத்தான் இருக்கிறார்கள்!

இவர்களை இப்படியே வைத்திருப்பது இந்திய ஒன்றிய அரசின்  பார்வையில் ஒரு இலாபகரமான விடயம் என்றுதான் தோன்றுகிறது .

இலங்கை விடயத்தில் எப்போதும் இந்தியாவுக்கு சாதகமான ஒரு உயிர்த்துடிப்புள்ள பிரச்சனை இந்திய ஒன்றிய அரசின்  தேவையாக இருக்கிறது
இலங்கை மீதான ஆதிக்கத்திற்கு இது தேவை போலும்?

அடுத்தது ராஜீவ் காந்தி கொலை பற்றிய அதிருப்தி என்று கூறினால் அது பற்றியும் சிந்திக்கலாம்
ஆனால் இந்திய ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் ராஜீவ் கொலையாளிகளின் பெரிய கட்டவுட் வைத்து அரசியல் செய்வதை ஊக்குவித்து கொண்டிருக்கிறதே?
ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் கலர் கடவுட்களை வைத்து அந்த புகழை பாடும் அரசியலை  ஊக்குவிக்கும் இந்திய அரசு ராஜீவ் கொலையாளிகள் பற்றிய கவனம் இருப்பதாக எப்படி கருத முடியும்?
எனவே அந்த காரணமும் அடிபட்டு போகிறது

ஒரு மக்கள் குழுமத்தின் பிரச்னையை அது தொடர்புள்ள இரு நாடுகளில் ஒரு நாடு அதுவும் சிறிய நாடு,  அளவுக்கு அதிகமாக ஏறக்குறைய இரட்டிப்பு பங்கை ஆற்றி விட்டது.

ஆனால் அதில் தொடபுடைய இன்னொரு நாடு .. அதுவும் பெரிய நாடு இன்னும் ஆரம்ப படியே தாண்டவில்லை என்றால்  இது எதை குறிக்கிறது?
இலங்கையில் உள்ள மலையக தலைவர்களும் சரி வடகிழக்கு தலைவர்களும் சரி இது பற்றி இன்றுவரை இந்திய அரசை  கேள்வியே கேட்கவில்லை.
இலங்கை அரசையும் எந்த கேள்வியும் கேட்கவில்லை1

இந்திய தூதரகங்களின்  விருந்தோம்பல் தவிர வேறொன்றும் அறியாத ஒரு கூட்டமாகி விட்டது இது  
இலங்கை அரசு இந்திய ஒன்றிய அரசை இந்த விடயத்தில் நிர்பந்திக்க வேண்டும்
அதற்கு உரிய தார்மீக உரிமையும் கடமையும் இலங்கை அரசுக்கு உண்டு!
நேர்மையுள்ள இலங்கை தமிழ்  அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும். 

கருத்துகள் இல்லை: