வியாழன், 3 ஜூன், 2021

கலைஞர் பிறந்தநாளில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

 தென் சென்னையில் ரூ.250 கோடி மதிப்பில் அதிநவீன பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கருணாநிதி பிறந்தநாளில் தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
சென்னை:  
முன்னாள் முதல்வர் கலைஞரின் ன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு  அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
தலைவர் கலைஞர் அவர்கள். தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக ஆட்சிக் கட்டிலிலே அமர்ந்து, நல்லாட்சி நடத்தியவர் -
சீர்மிகு திட்டங்களை பார்போற்றும் வகையில் தீட்டிச் செயல்படுத்தியவர் - ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்றத் தலைவராக விளங்கியவர் - பெரியாரின் சலியாத உழைப்பும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அயராத தொண்டும், பேரறிஞர் அண்ணா அவர்களின் பரந்த உள்ளமும் தன்னகத்தே கொண்டிருந்தவர் - உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர் - தன் அரசியல் அனுபவங்கள் அனைத்தையும், அடித்தட்டில் வாழ்கிற மக்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டவர்.



ஏழை எளியோர் ஏற்றம் பெற, தம் வாழ்நாளில் அவர் பல்வேறு நலத் திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்ததோடு மட்டுமின்றி, தான் வாழ்ந்த இல்லத்தை ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ வசதியினைத் தரும் மருத்துவமனையாகப் பயன்படுத்துவதற்கு தானமாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம் நெஞ்சமெல்லாம் வீற்றிருக்கும் அவரின் நினைவைப் போற்றும் வகையில், சென்னைப் பெருநகரத்தில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், 250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்.

இதையும் படியுங்கள்: கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம்-மளிகை பொருட்கள் தொகுப்பு: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடியவகையில், மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில், கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்படும்.

இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், இலக்கிய மாமணி என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். இவ்விருதாளர்களுக்கு பாராட்டுப் பத்திரம் மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்படும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:  “என்னுள் இருந்து நீங்கள் செயல்பட வைக்கிறீர்கள்”- கலைஞர்  பிறந்த நாளில் மு.க.ஸ்டாலின் செய்தி

திருவாரூர் மாவட்டத்தின் நெல் உற்பத்தியினை கருத்தில் கொண்டும், விவசாய விளைபொருட்கள் மழை வெள்ள பாதிப்பினால் சேதமடைவதை தவிர்ப்பதற்கும் கிராமப்புற அளவில் கூடுதலாக கிடங்குகள் கட்டுமானம் செய்வது விவசாயிகளுக்கு பேருதவியாக அமையும். விவசாயிகளின் நலன் காக்கும் இந்த அரசு, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் இனங்கண்டு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களிலும் ரூபாய் 24 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 16,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.

மேலும், அறுவடைக்கு பின் தானியம் மற்றும் பயறு வகைகளை சரியான முறையில் உலர வைக்காததால் ஏற்படும் இழப்பினை தவிர்க்க விவசாயிகள் நலன் கருதி திருவாரூர் மாவட்டத்தில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் 10 வட்டாரங்களில் சூரிய ஒளியில் உலர்விக்கும் 50 களங்களும், கோட்டூர் மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் 2 மறுசுழற்சி தொகுப்பு உலர்விப்பான்களும், நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி வட்டாரங்களில் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் 2 தொடர் ஓட்ட உலர்விப்பான்களும் ஆகமொத்தம் ரூபாய் 6 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூறியவாறு 54 உலர்களம் மற்றும் உலர்விப்பான்கள் ஏற்படுத்தப்படும்.

மகளிர் நலன் கருதி இந்த அரசு பொறுப்பேற்ற அன்றே முதலமைச்சர் அவர்கள் மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகையை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்கள்.

அதன் தொடர்ச்சியாக, மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் நகரப்புற அரசு பேருந்துகளில் இலவச பயண சலுகை வழங்க முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார். ஊரடங்கு காலம் விலக்கிக் கொள்ளப்பட்டவுடன் இந்த ஆணை நடைமுறைக்கு வரும்.  மாலைமலர்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: