நக்கீரன் :வங்கக்கடலில் உருவாகி ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையைக் கடந்த யாஸ் புயலால் ஏற்பட்ட சேதத்தை ஆய்வுசெய்த பிரதமர் மோடி, சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்திற்கு வருகைதந்தார்.
அங்கு அவரும், மேற்கு வங்க முதல்வரும் புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்துவதாக இருந்தது. ஆனால், மம்தாவும் மேற்கு வங்க தலைமைச் செயலாளரும் இந்தக் கூட்டத்திற்குத் தாமதமாக வந்ததாகவும், வந்தவுடன் கிளம்பிவிட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.
பிரதமருடனான ஆலோசனைக் கூட்டம் முடிந்த சில மணிநேரங்களிலேயே, மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய் இடமாற்றம் செய்யப்பட்டு,
மத்திய அரசுப் பணிக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்.
இன்று காலை (31.05.2021) 10 மணிக்கு டெல்லி நார்த் ப்ளாக்கில் பணியில் சேரவும் அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா, பிரதமரின் அனுமதியுடன்தான் கூட்டத்திலிருந்து சென்றதாக விளக்கமளித்ததோடு, பிரதமரைக் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், தலைமைச் செயலாளரை மத்திய அரசுப் பணிக்கு அழைக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, மம்தா பிரதமருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் அவர், "இந்த முக்கியமான நேரத்தில் மேற்கு வங்க அரசால் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது. விடுவிக்கவுமில்லை" எனத் தெரிவித்ததோடு, தலைமைச் செயலாளரைத் திரும்ப அழைக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்து, ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்தநிலையில் தற்போது திடீர் திருப்பமாக மம்தா பானர்ஜி, அலபன் பாண்டியோபாத்யாய் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும், அவர் இனி மூன்று வருடங்களுக்கு அரசின் தலைமை ஆலோசகராகச் செயல்படுவார் எனவும் அதிரடியாக அறிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக