செவ்வாய், 1 ஜூன், 2021

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆல் பாஸ் ! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 மின்னம்பலம் : ஆல் பாஸ்: எந்தெந்த வகுப்புகளுக்கு?
தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த தேர்வு எப்போது நடைபெறும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும், 10, 11ஆம் வகுப்பு மாணவர்களும் தேர்வுகள் எதுவுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகத் தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.



அந்த அறிவிப்பில் எட்டாம் வகுப்பு முடியும் வரையில் எந்தவொரு மாணவரையும் தேக்க நிலையில் வைத்தல் கூடாது. அதாவது அனைவரும் தேர்ச்சிபெற வேண்டும். எந்த குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்றக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆல் பாஸ் அறிவிப்பைப் பள்ளியின் பதிவேட்டில் இடம் பெறச் செய்யவும், மாவட்ட கல்வி அதிகாரிகள் அதனை உறுதி செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பின்னர் பள்ளிகள் திறப்பு குறித்தும் மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்குவது குறித்தும் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

-பிரியா

கருத்துகள் இல்லை: