சனி, 5 ஜூன், 2021

ஒன்றிய அரசு என்ற ஒற்றை வார்த்தையில் அதிரடி .. முரசொலி முழக்கம்

Murasoli slams the critics on the usage of the word Indian Union

tamil.oneindia.com :சென்னை: ஒன்றிய அரசு.. இந்த வார்த்தைதான் இன்று கடும் விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது சிலரிடம்.
இது தவறு, பிரிவினைவாதப் போக்கு இது என்றெல்லாம் பாய்ந்து கொண்டுள்ளனர்.
இந்த ஒற்றை வார்த்தை குறித்து முரசொலி ஒரு தலையங்கத்தை தீட்டியுள்ளது. அதை இப்போது பார்ப்போம்.
'ஒன்றிய அரசு' என்று உச்சரித்துவிட்டாராம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மொத்தமாக சொறிந்து கொண்டு இருக்கின்றன பிரிவினை மூளைகள்!
மக்களை மதத்தால், சாதியால், நிறத்தால், பணத்தால், வர்க்கத்தால், சிந்தனையால், உடலால், உடையால், உணவால், உணர்வால் நித்தமும் பிளவுபடுத்திக் கொண்டிருக்கும் கூட்டத்துக்கு 'ஒன்றியம்' என்று சொல்வது கூட பிரிவினைச் சொல்லாகத் தெரிகிறது.
ஒன்றியம் என்பதே ஒற்றுமைச் சொல். ஒற்றுமையை ஏற்படுத்தப்பயன்படும் சொல்.
அவர்கள் மொழியில் சொல்வதானால் ஒருமைப்பாட்டை உருவாக்க ஒன்றியம் என்ற சிந்தனையால்தான் முடியும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 1957 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே 'இந்திய யூனியன்' என்றுதான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால் யூனியன் என்ற சொல்லை அண்ணாவே சொல்லவில்லை, கலைஞரே சொல்லவில்லை என்று சிலர் வரலாறு அறியாமல் உளறிக்கொண்டு இருக்கிறார்கள்.



1963 சனவரி 25 நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய பேரறிஞர் அண்ணா அவர்கள், "அரசினுடைய இறைமை என்பதற்கு நாம் மேற்கொள்ளும் பொருள் என்ன?
அரசியல் இறைமையானது பொதுமக்களிடம் நிலைத்துள்ளது என அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது. சட்டம் சார்ந்த இறைமையானது, கூட்டாட்சி ஒன்றியத்துக்கும் (மத்திய அரசு), அதன் அங்கங்களுக்கும் இடையே (மாநிலங்கள்) பிரித்துத் தரப்பட்டுள்ளது" என்று பேசி இருக்கிறார்.

கழகத்தின் முக்கியக் குறிக்கோளாக மாநில சுயாட்சியை பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். உண்மையான கூட்டாட்சி உருவாக வேண்டுமானால் மாநிலங்கள் சுயாட்சி பெற்றவையாக இருக்க வேண்டும் என்று சிந்தித்தார் அண்ணா.

"கூட்டாட்சித் தத்துவத்தை மக்களுக்குக் கற்றுத்தர வேண்டும். கொல்லைப்புற வாயில் வழியாக நுழையும் ஒருவகை இரட்டை ஆட்சியே நமது இன்றைய அரசியல் சட்டம் என்பதை தி.மு.க ஆட்சியிலிருப்பதன் மூலமாகச் சிந்திக்கும் ஆற்றல் படைத்த மக்களின் கவனத்துக்குக் கொண்டுவர முடியுமெனில் உண்மையில் அதுவே நாம் அரசியல் உலகத்திற்குச் செலுத்திய உரிய பங்காகும்" என்பதுதான்

1969 ஆம் ஆண்டு முதல்வர் அண்ணா இறுதியாக எழுதிய 'தம்பிக்கு' கடிதம் ஆகும். \\"உறுப்பினரே இல்லை.. ஒன்னும் பண்ண முடியாது\"..
இதைத்தான் முதல்வர் கலைஞர் அவர்கள் 1971 திருச்சி மாநாட்டில், 'மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி' என்ற முழக்கமாக வடித்துக் கொடுத்தார்கள்.

"மாநிலத்தில் சுயாட்சி கேட்பது பிரிவினை ஆகாது, ஏனென்றால் மத்தியில் கூட்டாட்சி என்பதை ஏற்றுக் கொண்டு தான் மாநிலத்தில் சுயாட்சி கேட்கிறோம்" என்றார் அன்றைய முதல்வர் கலைஞர்.
கூட்டாட்சி - சுயாட்சி என்று பேசினாலே சமஸ்கிருதப் பிறப்பாளர்களுக்கு அது பிரிவினைக் கோரிக்கையாகத் தெரிகிறது.
அதற்கும் அன்றே முதல்வர் கலைஞர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.

"மாநிலத்திற்குத் தன்னாட்சி கேட்கிறோமேயல்லாமல் தனியாட்சி கேட்கவில்லை" என்று சொன்னார்
அவர். இதனை நாம் சொல்லும் போது பிரிவினை என்பார்கள்.
இதையே தான் 'இந்திய தேசியத்தையும் - தமிழ்த் தேசியத்தையும்' ஒரே நேரத்தில் வலியுறுத்திய மரியாதைக்குரிய ம.பொ.சி. அவர்களும் சொன்னார்கள்.

"தமிழர் சுயாட்சி கோருவது, அதிகாரப் பரவல் கொள்கையின் அடிப்படையில் அல்ல, மொழிவழித் தேசிய இனத்துக்குரிய பிறப்புரிமையின் அடிப்படையில்தான்'' என்றார் ம.பொ.சி. இவை அவர்களுக்குத் தெரியாது. மாநிலங்களின் உரிமைப் பிரச்சினை என்பது, ஒரு பக்கம் மாநில சுயாட்சி, இன்னொரு பக்கம் மத்திய சமஷ்டி என்றும் சொன்னவர் ம.,பொ.சி.யே!

இன்றைக்கு ஒன்றியம் என்ற சொல்லைப் பார்த்து எரிச்சல் அடைபவர்களுக்கு இராஜாஜியின் கூற்றையே பதிலாகச் சொல்லலாம்.
'வெளியேறுக மிகுதியான அதிகாரக் குவிப்பு - வருக உண்மையான கூட்டாட்சி' என்று ஒரு கட்டுரையை அவர் எழுதினார்.

"தி.மு.க. ஒரு மாநிலக் கட்சி என்று மேலோட்டமாகச் சிலர் கருதலாம். ஆனால் எல்லா மாநில அரசுகளுக்கும் நியாயமானசுயாட்சி என்கிற அடிப்படையில் ஒரு உண்மையான கூட்டாட்சி உருவாவதற்காகத்தான் தி.மு.க. பிரதிநிதியாக இருக்கிறது.

செயல்பட முடியாத, திறமையற்ற, கொடுமையான மத்திய அரசிற்கான தேசிய எதிர்ப்பைத்தான் தி.மு.க பிரதிபலிக்கிறது. பிரிவினைவாதிகள் என்று அவர்களைக் கூறுவது ஒரு கட்சிக் கொடுங்கோன்மையை நாட்டில் நீட்டிக்கச் செய்வதற்காகக் கண்டுபிடித்த பூச்சாண்டியாகும்.

இந்தியாவின் அளவிற்கும் இயல்பிற்கும் ஏற்ற திறமையான அமைப்பு உண்மையான கூட்டாட்சி அரசுதான். தி.மு.கவின் வெற்றிகரமான மறுப்பியக்கம் இந்த அரசியல் உண்மையின் அடையாளமாகும்" என்று சொன்னவர் இராஜாஜி அவர்கள்.
இன்னும் சொன்னால் ஒன்றியம் என்ற சொல்லை சட்டப்படிதான் நாம் பயன்படுத்துகிறோம். நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதல் வரி,"இந்தியா அதாவது பாரதம் - மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்" என்று தான் உள்ளது.

"India that is bharath shall be a union of states" என்றுதான் இருக்கிறது. அதைத் தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை அல்ல. 1773 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் மத்திய அரசு என்ற ஒன்றே கிடையாது என்பதுதான் நிர்வாக வரலாறுகள் எழுதியவர்களது கூற்று.

வடக்கே பெரும் பரப்பை மௌரியர்களும் குப்தர்களும் ஆண்டார்கள். அவர்களது கட்டுப்பாட்டில் தென்னகம் இல்லை. சென்னை, பம்பாய், கல்கத்தா - ஆகிய மூன்று நிறுவனங்களையும் இணைப்பதைப் போல மூன்று நிலப்பகுதியையும் ஒருங்கிணைத்தார்கள். சென்னை, பம்பாய் அலுவலகம் கலைக்கப்பட்டு கல்கத்தா நிறுவனம் அதிகாரம் பெற்றது. மூன்று கவர்னர் ஜெனரல்களுக்குமான அதிகாரமும் ஒரே கவர்னர் ஜெனரலுக்குப் போனது.

இதுதான் இவர்கள் சொல்லும் 'மத்திய அரசு' உருவானவிதம். சென்னை, பம்பாய் கவர்னர் ஜெனரல் அதிகாரம் பறிக்கப்பட்டு அது கல்கத்தா கவர்னர் ஜெனரலுக்குக் கொடுக்கப்பட்டதால் உருவாக்கப்பட்டது தான் மத்திய அரசு. இனம் - மொழி - வாழ்வியல் - பண்பாட்டு நெறிமுறைகள் அற்ற வெறும் நிர்வாக - அதிகாரச்சக்கையாகத்தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அன்றைய 'மத்திய அரசை' உருவாக்கினார்கள். சமஸ்கிருத சவலைப்பிள்ளைகள் அதைத் தான் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

"நமது அரசமைப்புச் சட்டத்தின் பல ஒற்றைத்தன்மைகளை எதிர்த்துப் போரிடுகின்ற ஒரு தாக்குதல் முன்னணியாகவே நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கருதிக் கொள்ள வேண்டுகிறேன்" என்று மாநிலங்களவையில் சொன்னார் அண்ணா. செய்து கொண்டு இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்!

கருத்துகள் இல்லை: