புதன், 28 ஏப்ரல், 2021

திமுகவின் வெவ்வேறு தளங்களில் அமைச்சரவை பற்றிய விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

அமைச்சரவை பட்டியல்: ஸ்டாலினுக்கு  துரைமுருகன் சொன்ன குத்தல் பதில்!

 minnambalan :தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதிக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன.

இந்த நிலையில் திமுகவின் வெவ்வேறு தளங்களில் அமைச்சரவை பற்றிய விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. கொடைக்கானலில் சில நாட்கள் குடும்பத்தோடு ஓய்வெடுத்த திமுக தலைவர் ஸ்டாலின், அடுத்த அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவது என்பது பற்றி தனது மாப்பிள்ளை சபரீசனுடன் பேசி முடிவுசெய்து, தனது கைப்பட வெள்ளைத்தாளில் எழுதி வைத்திருக்கிறார் என்று திமுகவின் உயர் வட்டாரங்களில் தகவல்கள் கசிகின்றன. அந்த வெள்ளைத்தாளில் தங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறியவும், அப்படி இடம்பெறவில்லை என்றால் கடைசி நேர மாற்றங்களில் தங்கள் பெயர் இடம்பெறவும் பலத்த முயற்சிகளைச் செய்து வருகிறார்கள் திமுக புள்ளிகள்.

இந்த நிலையில் கொடைக்கானலில் இருந்து திரும்பிய மு.க.ஸ்டாலின் திமுகவின் பொதுச் செயலாளரான துரைமுருகனோடு பேசியிருக்கிறார். “அடுத்து நாமதான் ஆட்சி அமைக்கப் போறோம். கேபினட் பட்டியல் ரெடி பண்ணணும். உங்க கருத்துகளைச் சொல்லுங்க” என்று கேட்டிருக்கிறார் ஸ்டாலின்.

ஏற்கனவே வேட்பாளர் பட்டியலிலேயே தன்னை முறையாக ஆலோசிக்கவில்லை என்ற வருத்தத்தில் இருந்தார் துரைமுருகன். அதை மனதில் வைத்துக்கொண்டு, “தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியலையே நீங்கதான் சிறப்பா தயார் பண்ணீங்களே. அதுமாதிரி கேபினட் பட்டிலையும் நீங்களே நல்லபடியே ரெடி பண்ணிடுங்க” என்று பட்டும் படாமலும் பதில் சொல்லியிருக்கிறார் துரைமுருகன்.

இதுபற்றி துரைமுருகனுக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியபோது,

“திமுகவில் தலைவருக்கு இணையான அதிகாரம் படைத்த பதவி பொதுச் செயலாளர் பதவி. ஆனால், இப்போது அப்படி இல்லை. பொதுச் செயலாளர் பதவியின் அதிகாரங்கள் பல குறைக்கப்பட்டிருக்கின்றன. வேட்பாளர் பட்டியல் தயாரிப்பின்போதே பொதுச் செயலாளர் என்ற முறையில் தான் முறையாக கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்ற வருத்தம் துரைமுருகனுக்கு இருந்தது உண்மைதான்.

வேட்பாளர் பட்டியல் பற்றி அறிந்துகொள்ள துரைமுருகன் முயற்சி செய்தபோது அவருக்கு நெருக்கமான முரசொலி செல்வம் மூலமாகவே ஸ்டாலின் சில விஷயங்களை சொல்லியனுப்பினார். ‘வேட்பாளர் பட்டியல்ல யார் யார் இருக்காங்கனு தெரிஞ்சுக்க ஆசைப்படாதீங்க. உங்க வட்டத்துல அவங்களுக்கு இவங்களுக்குனு எதுவும் ரெகமண்ட் பண்ண வேணாம்னு தலைவர் சொல்லச் சொன்னாரு. யார் ரெகமண்டும் இல்லாம தலைவர் வேட்பாளர்களைப் பொறுக்கி எடுக்குறாரு’ என்று துரைமுருகனுக்கு தகவல் சொல்லப்பட்டது. அப்போதே உடைந்துவிட்டார் அவர். கலைஞர் காலத்தில், ‘துரை துரை...’ என்று பாசமாக பேசும் கலைஞர், கடைசி நேரத்தில்கூட துரைமுருகன் கேட்கும் மாற்றங்களை பட்டியலில் செய்வார். ஆனால் இப்போது திமுகவின் பொதுச் செயலாளர் ஆக இருந்தபோதும் திமுக தலைமையில் இருந்து சமூக இடைவெளியோடு நிறுத்தப்பட்டிருக்கிறார் துரைமுருகன்.

அதனால்தான் அமைச்சரவை பட்டியல் பற்றி சம்பிரதாயமாக ஸ்டாலின் தன்னிடம் கேட்டபோதும் கூட, ‘வேட்பாளர் பட்டியல் மாதிரியே இதையும் சிறப்பா பண்ணிடுங்க’ என்று தனது குத்தல் பதிலைச் சொல்லிவிட்டார். தனக்கு பொதுப்பணித்துறை கிடையாது சட்டத்துறை மட்டும்தான் என்று கிடைத்த தகவலால் துரைமுருகன் ஏற்கனவே நொந்து போயிருக்கிறார். அதை அறிந்துகொண்டு அவரை சமாதானப்படுத்துவதற்கே ஸ்டாலின் பேசியிருக்கலாம். ஆனாலும் வேட்பாளர் பட்டியலில் தான் புறக்கணிக்கப்பட்டதைத் தலைவருக்கு நினைவுபடுத்தும் வகையில்தான் துரைமுருகன் இப்போது இப்படிச் சொல்லியிருக்கிறார்” என்கிறார்கள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: