நாம் தமிழர் காட்சியைப் பொருத்தளவு இன்னொரு நிலையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. நிதானமாக இருக்கும்போது பேசியது. நிதானமற்ற நிலையில் இருக்கும்போது பேசியது என இரு நிலைகள் உள்ளன. இரண்டாவது நிலையில் பேசியதை எல்லாம், "தெளிந்த பிறகு" அது என் குரல் இல்லை என்று சொல்லிவிடுவது!
அண்மையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப் புலிகள் உளவுத்துறையின் தலைவரான பொட்டம்மான் குறித்துப் பேசும்போது, 'மயிர்' என்ற சொல்லைப் பயன்படுத்தியதும், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர், வழக்கறிஞர் சந்திரசேகர் ஒரு தொலைபேசி உரையாடலில், அண்ணன் கொளத்தூர் மணி அவர்களைத் 'திராவிட நாய்' என்று குறிப்பிட்டதும் நாகரிகக் குறைவு மட்டுமில்லை, கட்டுக்கடங்காத திமிர்த்தனமம் கூட! அந்தத் திமிர் பாஜக வின் பின்புலத்திலிருந்தும், அவர்கள் கொடுக்கும் மற்ற மற்ற சிலவற்றிலிருந்தும் வருகிறது.
ஈழம் குறித்து ஒவ்வொரு நாளும் சீமான் அள்ளித் தெளிக்கும் கதைகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனுடன் தான் பேசிக் கொண்டிருந்ததாய் அவர் சொல்லும் செய்திகளை எல்லாம் பார்த்தால், தலைவர் பிரபாகரன் தன் மனைவி மதிவதனியிடம் கூட அவ்வளவு நேரம் பேசியிருக்க மாட்டார் போலிருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது.
உண்மையாக, நெருக்கடியான காலங்களிலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த, பல்வேறு உதவிகளை செய்த அய்யா நெடுமாறன், அண்ணன் வைகோ, கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் போன்ற யாரும் இப்படித் தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை. திராவிடர் கழகம் நடத்திய பல நிகழ்ச்சிகள்தான், இளைஞர்களிடம் ஈழ ஆதரவைத் தமிழ்நாட்டில் பெருமளவு உருவாக்கியது. ஈழத்திற்காகத் தன் உயிரையே 1987 இல் முதல் பலியாகக் கொடுத்தவன், ஸ்ரீமுஷ்ணம் என்னும் ஊரைச் சேர்ந்த உதயசூரியன் என்னும் திமுக இளைஞன். 1990 களில் பாட்டாளி மக்கள் கட்சியும் ஈழத்திற்கு ஆதரவாக மாநாடுகளை நடத்தியது. ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஈழ விடுதலை உணர்வைக் கொண்டுசென்ற பெருமை, திருமாவளவனுக்கும், அவர் சார்ந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் உண்டு. தோழர்கள் மணியரசன், தியாகு போன்றோரும் எத்தனையோ தமிழ் அமைப்புகளும், எண்ணற்ற தனி மனிதர்களும் ஈழத்திற்கு ஆதரவாக இங்கு பரப்புரை செய்துள்ளனர். போராடியுள்ளனர். நிதி அளித்துள்ளனர். சிறை சென்றுள்ளனர். அவர்கள் யாரும் பிரபாகரனுக்கு அடுத்தது நான்தான் என்று திமிராகப் பேசியதில்லை.
அவர்களுக்காக எதையும் செய்யாமல், அவர்களை வைத்து விளம்பரமும், வியாபாரமும் செய்து கொண்டிருக்கிற நாம் தமிழர் கட்சிக்கு இவ்வளவு ஆணவம் கூடாது. ஈழத்திற்காக ஆயிரம் தியாகங்களைச் செய்துள்ள அண்ணன் கொளத்தூர் மணி போன்றவர்களைத் திராவிட நாய் என்று சொல்வதற்கு எந்த நாய்க்கும் உரிமை கிடையாது.
இப்பொழுது வெளிப்படையாகச் சீமான் மற்றும் அவர் கட்சியினர் பற்றிய குற்றச்சாற்றுகள் வரத் தொடங்கிவிட்டன. திமுக வைத் திட்டுவதற்காக, அமைச்சர் எஸ்பி. வேலுமணியிடம் 3 கோடி ரூபாய் வாங்கவில்லை என்று சீமானைச் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று ஒரு நேர்காணலில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார் ஜெகத் கஸ்பர்.
பொட்டம்மான் பற்றிப் பேசியதற்குப் பல்வேறு ஈழ அமைப்புகளே கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் அவற்றை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், "ஈழப் பிரச்சினையை நாங்கள் ஒன்றும் சீமானுக்கு குத்தகைக்கு விட்டுவிடவில்லை" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
என்ன செய்ய வேண்டும் நாம் தமிழர் கட்சி?
தங்கள் பக்கம் தவறு இருப்பதை உணர்ந்தால், வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல், எங்கள் எல்லோர் மீதும் வழக்குத் தொடர வேண்டும்.
இரண்டையும் செய்ய மாட்டார்கள். அப்படிச் செய்தால், நீதிமன்றத்தில் அந்தக் குரல் அவருடையதுதான் என்ற உண்மை குரல் சோதனைகள் மூலம் வெளிப்பட்டுவிடும். பணப் பரிமாற்றம் பற்றிய பல செய்திகள் வெளிவந்து விழும்.
எனவே அவர்கள் வழக்கு மன்றத்திற்கு எல்லாம் போக மாட்டார்கள். ஒன்றே ஒன்று மட்டும்தான் செய்வார்கள். அவர்களின் 'காவி' எஜமானர்கள் கற்றுக்கொடுத்துள்ள பாடம் ஒன்றே ஒன்றுதான்....இதோ இந்தப் பதிவுக்கு எதிராகவும் அத்தனை ஆபாசச் சொற்களையும் அள்ளி வீசுவார்கள்.
நாகரிகத்தைக் குலைக்கும் நாம் தமிழர் கட்சிக்குத் தெரிந்ததெல்லாம் அது மட்டும்தான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக