செவ்வாய், 27 ஏப்ரல், 2021

காப்பர் பிளான்ட்டுக்குள் நுழையக் கூடாது: ஸ்டெர்லைட்டுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பர் பிளான்ட்டுக்குள் நுழையக் கூடாது:  ஸ்டெர்லைட்டுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

 minnambalam :கொரோனா பரவல் நெருக்கடியையும் ஆக்ஸிஜனுக்கான தேவையையும் உணர்ந்து, ஒரு அசாதாரண நடவடிக்கையாக வேதாந்தா நிறுவனம், தனது ஆக்ஸிஜன் உற்பத்தி பிரிவை தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் வளாகத்தில் இயக்க உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 27) செவ்வாய்க்கிழமை அனுமதித்தது.   தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் காப்பர் ஆலை நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க, தனது ஆலையில் இருக்கும் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் மூலமாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, பின் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்ஸிஜன் மட்டும் உற்பத்தி செய்ய அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம், “எங்கள் ஆலையில் தமிழக அரசு கையகப்படுத்தி ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியாது. அந்த அளவுக்கு தொழில் நுட்பத் திறன் அரசுக்கு இல்லை”என்று வாதிட்டது.

இந்நிலையில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், “ "இந்த தருணத்தில் தேசம் ஒன்றாக நிற்க வேண்டும். நெருக்கடியைக் கண்காணிப்பதில் நீதிமன்றங்களின் பங்கு தொடரும். தேசிய நெருக்கடியின் போது உச்ச நீதிமன்றம் ஒரு ஊமையாக பார்வையாளராக இருக்காது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற தேசிய நெருக்கடியின் போது வேதாந்தாவால் ஆக்ஸிஜன் உற்பத்தியில் அரசியல் சச்சரவு இருக்கக்கூடாது.

10 நாட்களுக்குள் தினமும் 200 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யக்கூடிய இந்த ஆலையை இயக்க அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். வேதாந்தாவின் கோரிக்கைப்படி, ஆக்ஸிஜன் ஆலையை ஒரு முழுமையான பிரிவாக இயக்க அனுமதிக்க நாங்கள் விரும்புகிறோம். ஆக்ஸிஜனுக்கான தேசிய தேவையை கருத்தில் கொண்டு மட்டுமே இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளது. தவிர இந்த உத்தரவு வேதாந்தாவுக்கு ஆதரவாக எந்தவொரு சூழலையும் ஏற்படுத்தாது.வேதாந்தா நிறுவனத்தை இது தொடர்பாக கண்காணிக்க ஒரு குழுவை அமைக்குமாறு நீதிமன்றம் தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டது, இதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், துணை கலெக்டர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த உத்தரவின்படி ஸ்டெர்லைட் ஆலையில் அமைந்திருக்கும் காப்பர் தயாரிக்கும் பிளான்ட்டுக்குள் நுழைய வேதாந்தா நிர்வாகம் அனுமதிக்கப்படாது. இதை கண்காணிப்புக் குழு உறுதி செய்யும். மக்களின் கவலைகளைப் போக்கும். இந்த உத்தரவு ஜூலை 31 வரை அமலில் இருக்கும்” என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

வேந்தன்

கருத்துகள் இல்லை: