சிலகாலம் அல்ஜீரியாவின் தலைநகரிருந்த பிரெஞ்சு உயர் கல்லூரியிலும் பின்னர் பிரான்சின் ஸ்ரார்ஸ்பேர்க்கிலுள்ள இராணுவ அதிகாரிகள் கல்லூரியிலும்; பேராசிரியராக பணிபுரிந்தார்.
அதன் பின்னர் இந்திய மொழிகள் பற்றி ஆய்வில் தனது கவனத்தைத் திருப்பினார்.முதலில் சமற்கிருத இலக்கியங்களை கற்றுத் தேர்ந்த அவருக்குத் தமிழ் மொழி மீது பற்றுதல் ஏற்பட்டது.தமிழ் இலக்கியங்களும் இவருக்கு அறிமுகம் ஆயின. பாரிசில் உள்ள இனால்கோ நிறுவனத்தில் இணைந்து தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார்.
1967 ம் ஆண்டிலிருந்து 1977 ம் ஆண்டுவரை இவர் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் (L'Institut français de Pondichéry) பணியாற்றினார்..
இந்த நிறுவனம் 1957 ம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது.
இங்கு பணியாற்றிய காலத்தில் தமிழ் இலக்கணம் இலக்கியம் தமிழ்நாட்டு வரலாறு என்பவற்றை பல் வேறு தமிழறிஞர்களிடம் இவர் கற்றுத் தேர்ந்தார்.
01 யூலை 1977லிருந்து 20 நவம்பர் 1989 வரை பிரெஞ்சு கீழ்த்திசை ஆய்வு நிறுவனத்தின்( L'École française d'Extrême-Orient (EFEO)) இயக்குநராக பணிபுரிந்தார்;.
சங்க இலக்கியத்தில் நல்ல பயிற்சியுடைய குரோ சங்க இலக்கியமான பரிபாடலை 1968 ம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தார்.
பிரெஞ்சு காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த காரைக்கால் பற்றியும் அந்த பகுதியின் வரலாறு வாழ்வியல் முறை பற்றியும், இன்று நடைமுறையிலுள்ள மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு முறையின் முன்னோடி வடிவமான குடவோலை முறை பற்றிய விரிவான செய்திகளைத் தரும் உத்திரமேரூர் பற்றிய வரலாற்றையும் 1970 ம் ஆண்டு பேராசிரியர் குரோ பிரெஞ்சுமொழியில் எழுதியுள்ளார்.
1982 ம் ஆண்டு தமிழ் பக்தி இலக்கியம் என்ற தலைப்பில் இவர் காரைக்காலம்மையார் இயற்றிய பாடல்களைப் பிரஞ்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.. காரைக்கால் அம்மையார் பாடிய அற்புதத்திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருவாலங் காட்டுத்திருப்பதிகம், சேக்கிழார் பாடிய காரைக்காலம்மையார் புராணம் என்பன இவரால் பிரெஞ்சுமொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. காரைக்கால் அம்மையார் பற்றி தெளிவான வரலாற்றையும் பேராசிரியர் குரோ இந்த நூலில் எழுதியுள்ளார்.
அப்பர், சுந்தரர் பாடிய தேவாரப்பாடல்களையும் அவர் இசைக் குறிப்புகளுடன் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
அதேபோல 1993 ம் ஆண்டு திருக்குறளின் காமத்துப்பால் பகுதியை அவர் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தார்.
தற்கால தமிழ் இலக்கியத்தையும் பிரெஞ்சு மொழிக்கு அறிமுகம் செய்யும் முயற்சியில் தமிழ்ச் சிறுகதைகளை மொழிபெயர்த்து நாகலிங்கமரம் என்னும் பெயரில் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் கண்ணனுடன் இணைந்து வெளியிட்டுள்ளார்.
தென்னிந்தியாவின் மத்திய கால வரலாற்றையும் தமிழ் நாட்டின் நவீன சமூக இலக்கிய வரலாற்றையும் விஞ்ஞான கண்ணோட்டத்தில் ஆய்வு செய்துள்ளார்.
எனது அறிவுக்கு எட்டியவரை இதுவே அவர் செய்த இறுதி ஆய்வாகும்.
லியோன் நகரில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான நூல்களை உள்ளடக்கிய ஒரு தனி நூலகத்தை அவர் வைத்திருந்தார்.அங்கே கிடைத்தற்கரிய தொன்மையான தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் பல இருந்தன.தனக்குப் பின்னர் இவை பராமரிப்பின்றி அழிந்து போய்விடும் என்ற கவலை அவரிடம் இருந்தது.அதன் பெறுமதியைப் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை உணராதவர்களின் கைகளில் அவற்றை ஒப்படைக்க அவர் தயாராக இருக்கவில்லை.
பிரெஞ்சு பல்கலைக்கழக மட்டத்தில் தமிழ்த் துறையை வளர்த்தெடுக்க பிரான்சிலுள்ள தமிழ்ச் சமூகம் உரிய அக்கறை காட்ட வில்லை என்ற கவலை அவருக்கு இருந்தது.
புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தன்னுடைய இறப்பு நெருங்கவிட்டது முன்கூட்டியே தெரியும்.
அவரது நூலகத்திலிருந்த நூல்களின் ஒரு தொகுதி கனேடிய பல்கலைக்கழகம் ஒன்றின் தமிழ்த் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இன்னொரு தொகுதி புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இங்கே பிரான்சில் தமிழ்க் கல்வி, தமிழ்க் கல்வி மேம்பாடு என்று மேடைகளில் முழக்கமிடும்; நபர்கள் எவரும் பேராசிரியர் குரோவுடன் தொடர்பு கொண்டதில்லை.அப்படி ஒருவர் இருந்தார் என்பதே இவர்களுக்குத் தெரியாது.
உண்மையில் பேராசிரியர் குரோ தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டு பற்றி இன்னும் நிறையச் சொல்ல முடியும்.
அவரது இழப்பு பிரெஞ்சு தமிழ் இணைப்பு பாலத்தில் ஏற்பட்ட உடைவு என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக