நடுவண் அரசு வகுத்த பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் தொடர்பான விதிகளின்படி, நீலகிரி மலைவாழ் படுகர் இன மக்களுக்கு, பழங்குடி தகுதி பொருந்தி வராத காரணத்தினால் அந்தப் பட்டியலில் படுகரை சேர்க்காமல் தமிழக அரசு நிராகரித்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். அது குறித்த கடித சான்றுகள் தேடிக்கொண்டிருக்கிறோம்.
இது ஒருபுறமிருக்க பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு படுகர்களிலேயே மூன்று விதமான கருத்துகளை நிலவுகிறது.
ஒருசாரார் பழங்குடி பட்டியலில் சேர்ப்பதுகுறித்த விருப்பம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.
ஒரு சாரார் பட்டியலில் இணைத்தால் நல்லது என்று நினைக்கிறார்கள்.
இன்னொரு சாரார் கிருத்துவ மதத்துக்கு மாறியவர்கள், அவர்கள் பெரும்பகுதியாக இருக்கிறார்கள், அவர்கள் இந்த விவாதத்துக்குள் வரவே இல்லை
இன்று நீலகிரி முழுக்க அரசுத்துறை , அரசியல்துறை என எந்த இடத்தை எடுத்துக்கொண்டாலும் எந்தவேலைவாய்ப்பை எடுத்துக்கொண்டாலும் ஆதிக்கம் செய்பவர்கள் படுகர் இனமக்களாகவே இருக்கிறார்கள். நீலகிரியில் இருக்கும் அரசுபணியிடங்கள் இடஒதுக்கீட்டின்படி நிரப்பப்பட்டிருக்கிறதா என்ற வெள்ளையறிக்கை ஒன்றை, அரசு வெளியிடவேண்டும் என கோருமளவுக்கு எங்கும் படுகர் இனமக்கள் நிறைந்திருப்பதை பார்க்கிறேன்.
பழங்குடிகளிலேயே தோடர்களுக்கும் கோத்தர்களுக்கும் கொஞ்சம் நிலமிருக்கிறது.கொஞ்சம் செளகரியமாக இருக்கிறார்கள்.
உண்மையில் மலையில் பாவப்பட்டவர்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள் வக்கற்று வறுமையிலும் கடையிலும் கடைகோடியாய் இருப்பவர்கள், இருளர், குரும்பாஸ், காட்டுநாயக்கர்கள் பணியர்கள் ஆகிய பழங்குடிகள்தான் என்பதை கொஞ்சம் பண்பாடான படுகர்கள் நன்கு உணர்வார்கள். உங்கள் எழுச்சி கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர முயற்சித்துக்கொண்டிருக்கும் அவர்களை இன்னும் பின்னோக்கி தள்ளிவிடுவதற்கான முயற்சியாக வேதனையோடு பார்க்கிறேன்.
சிலர் கி மு 8000 ம் ஆண்டுக்கு முன்பிருந்தே படுகர்கள் மலையில் இருப்பதாகவும் மற்றவர்கள் கி பி 12 ஆம் நூற்றாண்டிலிருந்து குடியேறத்துவங்குவதாகவும் புனைவுகளை எழுதுகிறார்கள்.
"கல்தோன்றி மன்தோன்றா காலத்தே ஒண்டி ஹணாவோடு தோன்றிய மூத்தகுடி நாங்கதான்.. உலகில் முதல் குரங்கு நாக்கு பெட்டாவிலிருந்துதான் வந்தது என்று எங்க ஆளுக சொல்ல வாய்ப்பிருக்கிறது" என்று என்னோடு பணிபுரிந்த படுகர் இனத்தை சேர்ந்த நண்பர் ரமேஷ் 8 வருடத்துக்கு முன்பு சொன்ன ஜோக் நினைவுக்கு வருகிறது.
இன்றும் படுகர்களின் தோட்டங்களில் நடக்கும் அறுவடைகள் குரும்பாஸ் பழங்குடிகளின் சமயமொதலிகள் இல்லாமல் நடப்பது இல்லை. அரிக்கட்டும் ஹப்பா விழாவும் குரும்பாஸ் மொதலிகள் இல்லாமல் நடப்பதில்லை. ,இந்த முதல்மரியாதை என்பது குரும்பாஸ் உள்ளிட்ட பழங்குடிகள் படுகர்களுக்கு முன்பிருந்து அங்கிருக்கிறார்கள் என்பதை பறை சாற்றும் சாட்சியங்கள் இப்படி நிறைய பேச முடியும். வாய்ப்பிருக்கும்போது பேசலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக