திங்கள், 21 டிசம்பர், 2020

அறிவாலயத்தில் ஐபேக் கெடுபிடிகள்!

மின்னம்பலம் மற்ற எந்த கட்சியின் அலுவலகத்தை விடவும், திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில்தான் பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக உணருவார்கள். அந்த அளவுக்கு திமுக தலைவராக இருந்தபோது கலைஞரையே பத்திரிகையாளர்கள் நினைத்தால் எளிதில் சந்திக்க முடியும்.

அறிவாலயத்தில் ஐபேக் கெடுபிடிகள்!

அப்பேற்பட்ட அறிவாலயத்தில் நேற்று (டிசம்பர் 20) மாவட்டச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை கொரோனா ஊரடங்குக்குப் பிறகு ஸ்டாலின் நேரடியாக சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பத்திரிகையாளர்களும், பத்திரிகை, தொலைக்காட்சி கேமராமேன்களும் திரண்டிருந்தனர்.

அறிவாலயத்தில் பத்திரிகையாளர்களை பூச்சி முருகன், துறைமுகம் காஜா ஆகியோர்தான் டீல் செய்வார்கள். ஆனால், நேற்று வழக்கத்துக்கு மாறாக அறிவாலயத்தின் மெயின் கேட்டிலேயே ஐபேக் டீமை சேர்ந்த இளைஞர்கள் நீல ஜீன்ஸ், கறுப்பு டி ஷர்ட் அணிந்தபடியே பத்திரிகையாளர்களின் அடையாள அட்டை விவரங்களை சோதித்த பிறகே உள்ளே அனுப்பினார்கள். அதன் பின் அறிவாலய வளாகத்தில் ஒருமுறை சோதனை, மீண்டும் கலைஞர் அரங்கத்துக்குள் நுழையும்போது சோதனை என மூன்று முறை பத்திரிகையாளர்களை சோதனை செய்திருக்கிறார்கள் ஐபேக் இளைஞர்கள்.

ஒருகட்டத்தில் மூன்றாவது சோதனையில் உட்படுத்தப்பட்ட தமிழின் பிரபல நாளிதழின் போட்டோகிராபர், “நான் இந்த நிகழ்ச்சி போட்டோவை வேற வழியில வாங்கிப்பேன். ஆனா உன்னாலதான் என்னால இந்த நிகழ்ச்சியில கலந்துக்க முடியாம போச்சுனு என் ஆபீஸ்ல சொல்லணும். உன்னை ஒரு போட்டோ எடுத்துக்கறேன் நில்லு’ என்று கேமராவைத் தூக்க, அரண்டு போன அந்த ஐபேக் இளைஞர், ‘ சாரி சார்... எல்லாரையும் செக் பண்ண சொல்லியிருக்காங்க’ என்று சமாளித்து அந்த போட்டோகிராபரை சமாதானப்படுத்தியிருக்கிறார்.

பத்திரிகையாளர்களை மட்டுமல்ல...திமுக நிர்வாகிகளிடத்திலும் இதே கெடுபிடியைத்தான் ஐபேக் டீம் காட்டியிருக்கிறது.

“தேர்தல் உத்தி வகுப்பு என்ற பணிக்குத்தான் ஐபேக் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக திமுக தலைவர் அறிவித்தார். ஆனால் அறிவாலயத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு வேலைகளை எல்லாம் ஐபேக் செய்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? அழைப்பிதழ் இருக்கும் நிர்வாகிகளை மட்டும் அரங்கத்துக்குள் அனுமதிக்கவேண்டும் என்பது சரிதான். ஆனால் திமுக நிர்வாகிகள், தொண்டர்களிடத்தில் ஐபேக் டீமின் அணுமுகுறை சரியில்லை. அவர்களின் அட்டகாசத்தையெல்லாம் தலைவரிடம் எப்படி எடுத்துச் சொல்லுவது?” என்று அறிவாலயத்தின் முதன்மை வாயிலுக்கு வெளியே நின்ற திமுக தொண்டர்கள் குமுறுகிறார்கள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: