கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக திரை அரங்குகள் மூடப்பட்டு வருகின்றன என்பது எல்லோரும் அறிந்த உண்மை . அதற்கான காரணிகளாக கூறப்படுவது வீடியோக்கள் சிடிக்கள் வருகையும் தற்போதைய இணையதள வசதியும்தான் என்பதுவும் கூட ஓரளவு உண்மைதான்.
ஆனால் இவை எல்லாம் மேலெழுந்தமான உண்மைகள்.
திரை அரங்குகளின் மூடுவிழாக்களில் பெரும் பங்கை ஆற்றியது மிகப்பெரிய மாசாலா படங்கள்தான் . அதிலும் குறிப்பாக ரஜினியின் சிவாஜி படம்தான் திரை அரங்குகளுக்கு ஒரு சாபக்கேடாக அமைந்தது என்று கூறப்படுகிறது . குறிப்பாக இது பற்றி திரு மதிமாறன் ஒரு காணொளியில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.
அரங்குக்கு சென்று திரைப்படங்கள் பார்ப்பது ஒரு சுகானுபவம். வெறுமனே அந்த படங்களை மட்டும் பார்ப்பதல்ல ரசிக்கத்தன்மை என்பது.
அந்த திரை அரங்கம் அங்கு கூடும் மக்களின் உணர்ச்சி கலவைகள் . அந்த மனிதர்களின் வேர்வையும் வேறு பல வாசனை திரவியங்களும் . கூடவே சில நேரம் சிகரெட் வாசனைகளும் கூட ஒரு வினோத உணர்வுகளை தந்து மீண்டும் அதை அனுபவிக்க தூண்டுவதுண்டு.
மக்கள் மகிழ்வாக கூடும் வாய்ப்பு என்பது மனிதவாழ்வின் உன்னத தருணங்களாகும்.
திரை அரங்குகள் இந்த உணர்வு தீனியை தாராளமாக தந்து கொண்டு இருந்தன.
ரசிகர்களால் கட்டுப்படியாக கூடிய விலையில் அரங்கின் டிக்கெட் கட்டணம் இருந்த வரையில் இந்த சந்தோச அனுபவங்கள் தொடர்ந்தன .
ரஜினி நடித்த சிவாஜி படத்தில் ஆரம்பித்தது சனியன்.
ஒரே நேரத்தில் சுற்று வட்டாரத்தில் உள்ள பல தியேட்டர்களிலும் சிவாஜி . இந்த பக்கம் அந்த பக்கம் எல்லாமே சிவாஜி படம் .. அதிலும் டிக்கெட் விலை ஆயிரம் ரூபாய்களுக்கு எகிறிப்பாய்ந்தது.
ஒரே வாரத்தில் ஆக கூட்டிப்போனால் பத்தே நாட்களில் மொத்த வசூலையும் அள்ளிக்கொண்டு போனார் ரஜினியும் அவரது திரை மாபியாவும் இந்த வியாபாரத்தையும் பறித்து எடுத்தார்கள் ( ஜாஸ் சினிமா வரலாறு)
ஒரு படம் ஒரு மாதத்திற்கு மேலாக ஓடினால் ஒரு தடவை அல்லது இரண்டு தடவையாவது சாதாரண ரசிகர்கள் பார்க்க கூடும்.
அடிக்கடி அரங்குக்கு சென்று பார்ப்பது குடும்பங்களின் மகிழ்வாக இருந்த காலங்கள் அது.
அதற்கு ஒரே அடியாக வேட்டு வைத்தது இவர்களின் ஒரே வாரத்தில் அள்ளக்கூடிய அளவு அள்ளிக்கொண்டு போதல் என்ற பார்முலா .
சிறிய படகுகளில் மீன்பிடிப்பதை விடுத்த பெரிய ட்ரோலர்களை கொண்டு மொத்த கடலையும் வாரி சுருட்டுவதற்கு ஒப்பானது இந்த "ஆயிரம் ரூபாய் ஒரு வார வசூல் பார்முலா".
இந்த பெரிய பட்ஜெட் கொள்ளையர்களால் சிறிய அரங்குகளும் சிறிய படங்களும் மட்டுமல்ல சாதாரண மக்களும் தங்களின் உன்னத திரை அரங்கு அனுபவங்களை இழந்து கொண்டு வருகிறார்கள்
திரை அரங்குக்கு மக்கள் செல்வது வெறுமனே படங்களை பார்ப்பதற்கு மட்டுமல்ல என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ளவேண்டும்
இனி வரப்போகும் அரசுக்களாவது இது விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும்
திரை அரங்குக்கு வரும் மக்களிடம் கொள்ளை அடிப்பதை எல்லோரும் நிறுத்தவேண்டும்.
இல்லாவிடில் இருக்கவே இருக்கிறது இணையம் என்பது ஞாபகத்தில் இருக்கட்டும்
(அகஸ்தியா திரை அரங்கம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக