‘The Free School Under the Bridge’ என்கிற இந்தப் பள்ளி இரண்டு கால அட்டவணையில் இயங்குகிறது. காலை 9 முதல் 11 மணி வரை 120 மாணவர்கள் படிக்கின்றனர். மதியம் 2 முதல் 4.30 மணி வரை 180 மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் ஏழு ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களில் சிலர் தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தன்னார்வலர்களாக இணைந்துகொண்டு நான்கு முதல் பதினான்கு வயது வரையிலும் உள்ள மாணவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கின்றனர்.
மற்ற பள்ளிகள் போலல்லாமல் இந்தப் பள்ளி திறந்தவெளியில் எந்தவித கட்டமைப்பு வசதிகளும் இன்றி இயங்குகிறது. ஐந்து இடங்களில் சுவற்றில் கருப்பு நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டு அவை கரும்பலகைகளாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆசிரியர்களுக்கு சாக்பீஸ், டஸ்டர், பேனா, பென்சில் போன்ற அடிப்படை எழுதுபொருட்கள் வழங்கப்படுகிறது. மாணவர்கள் நோட்டுப்புத்தகங்களைக் கொண்டு வந்து தரைவிரிப்பு விரிக்கப்பட்ட தரையில் அமர்ந்து படிக்கின்றனர்.
இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியாக கழிப்பறைகள் உள்ளன. மாணவர்களுக்கு அடிப்படை சுகாதாரம் குறித்தும் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
ராஜேஷ் தனது முயற்சிக்குக் கிடைத்த ஆதரவு குறித்துக் கூறும்போது, ”தற்காலிகப் பள்ளியை அமைப்பது தொடர்பாக ஆரம்பத்தில் சில அரசு சாரா நிறுவனங்கள் என்னைத் தொடர்பு கொண்டன. ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தால் நான் அனுமதிக்கவில்லை. இவர்களில் யாரும் குழந்தைகளின் கல்வி குறித்தும், அவர்களது எதிர்காலம் குறித்தும் அக்கறை காட்டவில்லை. இந்த முயற்சியைப் பயன்படுத்தி பணம் ஈட்டுவதிலேயே ஆர்வம் காட்டினர். அவர்களது செயல்பாடுகளுடன் எனது நோக்கம் பொருந்தாத காரணத்தால் நான் சம்மதம் தெரிவிக்கவில்லை,” என்றார்.
இந்தப் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் குப்பை பொறுக்குபவர்கள், சைக்கிள்ரிக்ஷா ஓட்டுபவர்கள், பிச்சை எடுப்பவர்கள் போன்ற அடித்தட்டு மக்களின் குழந்தைகள்.
இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கோடைக்காலத்தில் கடைக்காரர்கள் சிலர் குடிநீர் வழங்கி உதவி வருகிறார்கள். இன்னும் சிலரோ குழந்தைகளுக்குப் படிப்பதற்குத் தேவையான புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில், சிலேட்டு, புத்தகப் பைகள் போன்றவற்றையும் வாங்கித் தந்து உதவுகிறார்கள்.
ராஜேஷ் தனது இளம் வயதில் இதே போன்றதொரு சூழலைச் சந்தித்திருக்கிறார். எனவேதான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண பள்ளியைத் தொடங்கவேண்டும் என்கிற உந்துதல் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இவரது குடும்பத்தின் நிதிநிலை தொடர்ந்து மோசமாகவே இருந்து வந்ததால் இவரால் பி.எஸ்சி பட்டப்படிப்பை முடிக்கமுடியவில்லை.
குழந்தைகளுக்கு கல்வி மிகவும் முக்கியம் என்பதை இவர் உணர்ந்திருந்தார். ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் ராஜேஷ் மட்டுமே வருவாய் ஈட்டுகிறார். அதே பகுதியில் ஒரு சிறு மளிகைக் கடையை நடத்தி வருகிறார். பள்ளியை நடத்த உதவி வரும் லட்சுமி சந்திரா, ஷ்யாம் மஹ்தோ, ரேகா, சுனிதா, மனீஷா, சேத்தன் ஷர்மா ஆகிய ஆசிரியர்களுக்கு இவர் தற்போது கஷ்டமான இந்தச் சூழ்நிலையிலும் சம்பளம் குறைந்த அளவிலாவது தர வேண்டியுள்ளது.
“சிலர் எப்போதாவது பள்ளிக்கு வந்து பிஸ்கெட் பாக்கெட்டுகள், பழங்கள், தண்ணீர் பாட்டில்கள், பேக் செய்யப்பட்ட உணவுகள் போன்றவற்றை விநியோகிக்கின்றனர். சில இளைஞர்கள் இங்குள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி தங்கள் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனர். பலர் பாலத்தின் கீழே குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துகின்றனர். சமூகத்தில் ஒரு அங்கமாக இருக்கும் உணர்வு இதுபோன்ற தருணங்களில் தங்களுக்கு ஏற்படுவதாகக் கருதுகிறார்கள் இவர்கள்” என்கிறார் ராஜேஷ்.
பள்ளிக்கு வரும் மாணவர்கள் வருகையை வருகைப் பதிவேடு வைத்து கண்காணித்து வருகிறார் ராஜேஷ். மாணவர் ஒருவர் நீண்ட காலமாக வராமல் போனால் அவரது பெற்றோர்களைத் தொடர்பு கொண்டு காரணத்தைக் கேட்டறிகிறார். பண ரீதியாகவோ, மனரீதியாகவோ அந்தக் குடும்பம் தீர்க்க முடியாத பிரச்னையில் சிக்கி இருந்தால், அவற்றை தன்னால் முடிந்த அளவு தீர்த்தும் வைத்து, பள்ளிக்கு மாணவர்கள் வருவதை தொடரச் செய்கிறார் ராஜேஷ்.
இந்தப் பள்ளியில் படிக்கும் ஆறு வயது சுனிதா, “நான் என் வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க விரும்புகிறேன். எனவேதான் தினமும் மதிய நேரத்தில் இங்கு வருகிறேன். சில சமயங்களில் கன மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்வதன் காரணமாக பள்ளி மூடப்படும். அதுபோன்ற நேரங்கள் தவிர மற்ற எந்த நாட்களிலும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்து விடுவேன். அதற்குக் காரணம் படிப்பின் மீது எனக்குள்ள ஆர்வமே!” என்கிறார்.
'யார் என்ன ஆனால் நமக்கென்ன?' என்று , 'தான் உண்டு, தன் வேலை உண்டு' என்று வாழ்பவர்களின் மத்தியில், வறுமையின் காரணமாக கல்வி கற்க முடியாமல் தான் பாதிக்கப்பட்டது போன்று பிறரும் பாதிக்கப்படக் கூடாது என நினைத்துச் செயலாற்றி வரும் ராஜேஷின் பார்வை, இன்றைய சமுதாய மக்கள்-குறிப்பாக இளைஞர்கள் அனைவருக்கும் தேவை அல்லவா?
கற்கும் மனமும் ஆவலும் இருந்தால், பாலத்தின் கீழே என்ன, வானத்தின் கீழே கூட அமர்ந்து பாடம் நடத்த முடியும்; பாடம் படிக்க முடியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக