103 கிலோ தங்கம் திருட்டு சி பி ஐ மீது வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி.. சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்கம்???
Jeyalakshmi C - tamil.oneindia.com : சென்னை: சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிபிஐக்கு பெரிய களங்கமாக கருதப்படும் தங்க கட்டிகள் காணாமல் போன விவகாரத்தில், சிபிஐ அதிகாரிகள் சென்னையில் தனியாக விசாரணையை தொடங்கியுள்ளனர். சென்னை பாரிமுனையில் செயல்படும் தனியார் தங்க ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் 400.47 கிலோ தங்கத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
பறிமுதல் செய்யப்பட்ட அந்த தங்கம், அதே நிறுவனத்தில் உள்ள பாதுகாப்பு
லாக்கரில் பத்திரமாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அந்த லாக்கரின்
சாவிகள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
கடந்த பிப்ரவரி மாதம் அந்த லாக்கரை திறந்து பார்த்தபோது, 400.47 கிலோ
தங்கத்தில், 103.864 கிலோ தங்கம் மாயமாகிவிட்டது
மாயமான 103.864 கிலோ தங்கத்தை ஒப்படைக்க கோரி ராமசுப்பிரமணியன் உயர்
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ்
முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான சிறப்பு வக்கீல்
சீனிவாசன், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டபோது சுரானா நிறுவனத்தில் உள்ள எடை
மிஷினில்தான் எடைபோடப்பட்டது. தனி சாட்சி முன்னிலையில் எடை போடப்பட்டது.
ஆனால், தவறுதலாக 400.47 கிலோ என்று பதிவு செய்யப்பட்டது என்றார்.
இதையடுத்து 103 கிலோ தங்கம் மாயமானது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு
நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டார்.
இதனையடுத்து சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார் தலைமையில் தனிப்படை
அமைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருட்டு வழக்கு பதிவு
செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிபிஐக்கு பெரிய களங்கமாக கருதப்படும்
தங்க கட்டிகள் காணாமல் போன விவகாரத்தில், சிபிஐ அதிகாரிகள் தனியாக
விசாரணையை தொடங்கியுள்ளனர். டெல்லியில் இருந்து சிபிஐ அதிகாரிகள் சென்னை
வந்து முகாமிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தங்கம் மாயமான காலத்தில் சிபிஐயில் அதிகாரிகளாக இருந்து தற்போது ஓய்வு
பெற்றுள்ளவர்களிடம் ஏற்கனவே சென்னை மண்டல சிபிஐ அதிகாரிகள் விசாரணை
நடத்தியுள்ளனர். சிபிசிஐடி அதிகாரிகள் இந்திய தண்டனைச் சட்டம் 380 திருட்டு
பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
103 கிலோ தங்கம் மாயமான வழக்கில் ஒரு பக்கம் சிபிசிஐடி போலீசாரும்,
மறுபக்கம் சிபிஐ அதிகாரிகளும் போட்டி போட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக