சனி, 28 டிசம்பர், 2019

நீதியரசர்..மோகன் அவர்களுக்கு வீரவனக்கம் .... நீதித்துறையில் ஒரு திராவிட விதை


Karuna Skp : திராவிட வித்தான நீதியரசர்..மோகன் அவர்களுக்கு வீரவணக்கம்!!!
இந்த மோகன் ரொம்ப வருத்தம் தேரிவிச்சேன்னு உன் அம்மாவிடம் போய்
சொல்லு!.....
நிஜமான சாதனையாளர்கள், பெரும் ஆளுமைகள் பலருடன் ஒரு நாள், ஒரு கணமேனும் பார்த்துப் பழக வாய்க்கப் பெற்ற பெருவாழ்வு எனது.
ராஜீவ் படுகொலையின் போது அன்று இரவே அந்தக் கொலைப்பழி திமுக மீது போடப்பட்டு, அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகத்தில் வன்முறைக்கான
கதவு கேள்வி கேட்பாரேயின்றி திறந்துவிடப் பட்டதை 90களுக்குப் பின் பிறந்தவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அது குஜராத் மாடலுக்கான மினி முன்னோட்டம்.
திமுகவினர் வீடுகள், தொழில்கள் என தேடி தேடி அழிக்கப்பட்டன. பற்றியெரியும் தீயை அணைக்ககூட தீயணைப்பு வண்டி வரவில்லை. அப்படிதான் வெளியூரில்
நிறுத்தப்பட்டிருந்த எங்களது பேருந்து ஒன்று முழுவதுமாக தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அது எங்கள் தொழிலுக்கு பெரிய பின்னடைவும், மன வேதனையையும் அளித்தச் சம்பவம்.
பின்னாளில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பின்பு, அந்த வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும்

தர வேண்டி ஒரு விசாரணைக் கமிஷனை அறிவித்தார். கமிஷன் என்றால் ஆறுமுகச்சாமி கமிஷன் போல அல்ல! அந்தக் காலத்தில் மிகவும் கண்டிப்பான நீதியரசர் எஸ் மோகன் தலைமையில் அது அமைக்கப்பட்டது.
எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் எங்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். நடந்ததை போட்டோ ஆதாரத்துடன் கமிஷனுக்கு அனுப்பி வைத்து விட்டு அதை மறந்து விட்டோம். ஒராண்டு இருக்கும். அடுத்த நாளே ஆஜராகச் சொல்லி சம்மன் வந்தது.
நான் போனேன்! என்னைக் கூண்டில் ஏற்றினார்கள். முதன்முறையாக அந்த மாமனிதரை நேரில் பார்க்கிறேன். என் வயது, தோற்றம் கண்ட அவர் என்னை இறங்கி அருகில் வரச் சொன்னார். உரிமையாளர் பேரை படித்து (எனது அம்மாவின் பெயர்), நீங்கள் அவருக்கு என்ன சொந்தம்? என்றார்.
‘அவர் மகன்’ யுவர் ஆனர்.,
அதெல்லாம் வேணாம். சார்னே கூப்பிடு.
சரிங்க சார்.
என்ன படிச்சிருக்கீங்க?
பி. ஈ சார்.,
இப்போ லீவா?
முடிச்சுட்டேன் சார்., இப்போ கம்பனியை நான் தான் பார்த்துகிறேன்.
வெரிகுட்.., சரி! உங்களோட க்ளெய்ம் எவ்வளவு?
சார்?
நஷ்ட ஈடு தம்பி? அதை நீங்க குறிப்பிடவே இல்லையே!
அது நீங்க எவ்வளவு தந்தாலும் சரி சார்., (நான் நஷ்ட ஈடு எதிர்பார்த்தே போகலை. போலீஸ் கண் முன்னமே நடந்த வன்முறை என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுத்தால் சாட்சி சொல்லலாம்னு என போயிருந்தேன்!)
பஸ் முழுக்க எரிஞ்சுடுச்சுப் போலிருக்கே! என்றார் புகைப்படங்களப் பார்த்தபடி..
ஆமாம் சார்.,
ஆமாம்! புது பஸ் இப்போ என்ன விலையாகும்?
9 லட்ச ருபாய் ஆகும் சார்!
இன்சுரன்ஸ்லே எவ்வளவு தந்தாங்க?
3.5 லட்ச ரூபாய் சாங்ஷன் ஆச்சுன்னு சொல்லிருக்காங்க சார்., இன்னும் தரலை.
சரி! நான் அதிகம் தர முடியாது. என்கிட்டே அரசு கொடுத்திருக்கும் பணத்துலே நான் பெட்டிக்கடை, சலூன் போல மொத்த வாழ்க்கையையும் இழந்துட்டு இருப்பவங்களுக்கு தந்தாகணும். என்ன பண்ண?
நீங்க எவ்வளவு தந்தாலும் சரி சார்! இந்த 6 வருஷத்துலே இப்படி யாரும் கூப்பிட்டு ஆறுதல் கூட சொல்லலை சார். இதுவே பெரிசு என்றேன்.
புன்னகைத்தபடியே, I herebt grant 1.5 lakhs as a compensation to this gentleman
என்றபடி கேவலால் டேபிளைத் தட்டினார்.
நான் திகைச்சுப் போய் நின்றிருந்தேன்! ஐம்பதாயிரம் தந்திருந்தாலும் அரசிடம் இருந்து நஷ்ட ஈடை எதிர்பார்த்திராத எனக்கு அது போனஸ்தான்!
அடுத்து நீதியரசர் சொன்ன வாக்கியம்தான் இந்த திரெட் எழுத எனக்கு தூண்டுதல்.,
உன்னோட அம்மா இதை எப்படி எடுத்துகிட்டாங்க?
எதை சார்?
இப்படி அவங்க பேர்லே இருந்த பஸ் முழுக்க கொளுத்தப்பட்டதே! அதை?
ஷாக் ஆனாங்க! ஆனா, அழுதாங்களான்னு தெரியலை. எரிஞ்ச பஸ்சை நேர்லே பார்த்தப்போ நான் அழுதுட்டேன் சார்.,
நிச்சயமா அம்மாவும் அழுதுருப்பாங்க. பெண்களுக்குதான் உழைப்பின் அருமை அதிகம் தெரியும்.,
நான் அமைதியாக நின்றிருந்தேன்! இப்படியான உரையாடலை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
“உங்க தொழிலுக்குப் பாதுகாப்புத் தர வேண்டிய அரசாங்கம் அதை செய்ய தவறிடுச்சு. அதுக்காக இந்த மோகன் ரொம்ப வருத்தம் தேரிவிச்சேன்னு உன் அம்மாவிடம் போய் சொல்லு!” என்றார்.
அந்தக் கணம் என் உடல் நடுங்கிருச்சு! நண்பர்களே! நீதிமன்றமும், நீதியரசர்களும் இப்போது இருக்கும் நிலையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். எனது மனம் கலங்குகிறது. அந்த மனிதரிடம்தான் எப்பேற்ப்பட்ட உளவியல்! மானுடம்! அறம்!
வாழ்க்கையில் நாம வெகு வேகமாக இழந்து வருவது அடுத்தத் தலைமுறைகளுக்கு வழிகாட்டும்படியான வாழ்வினை வாழ்ந்த இப்படியான முன்னோடிகளைதான்..
இன்னுமொரு பின்னூட்டம் :
ஒரே வாரத்தில் காசோலை வந்தது. அதை எடுத்துக் கொண்டு நன்றி சொல்ல முதல்வர் கலைஞரைப் பார்க்கச் சென்றேன்.
அறிவாலயத்தில், ஆற்காட்டாரிடம் விசயத்தைச் சொல்ல, தலைவரிடம் அழைத்துச் சென்றார். காசோலையைக் கையில், வாங்கிய கலைஞர், என்னய்யா! போதலையா? என்றார்.
இல்லைண்ணா இதுவே அதிகம்., ஆனா ஜட்ஜ் கடைசியில் இப்படி நடந்ததுக்கு வருத்தம் தெரிவிச்சார்ணா, அதான் அதிர்ச்சி என்றேன்.
ஒரு கணம் திகைத்தவர் அருகில் அமர்ந்திருந்த முரசொலி மாறனைப் பார்த்து,
பார்த்தியா? எதுக்கு மோகன் என இப்போ புரியுதா? இதற்குத்தான் திராவிட வித்துகள் தேவைப்படுகிறது என்றார்.
சில கணங்கள் அந்த அறை அப்படியே உறைந்திருந்தது.
எனது தலைவரின் மனம் கவர்ந்த மாமனிதர், திராவிடப் பாரம்பரியத்தின் வேர்களுள் ஒன்றான நீதியரசர் எஸ். மோகன் அவர்களுக்கு எனது அஞ்சலி. 🙏
எழுத்தாளர் Karuna Skp

கருத்துகள் இல்லை: