செவ்வாய், 8 அக்டோபர், 2019

திருப்பூரில் ஆயுதபூஜை: ஏடிஎம்-ஐ தண்ணீரால் கழுவிய காவலாளி!

ஆயுதபூஜை: ஏடிஎம்-ஐ தண்ணீரால் கழுவிய காவலாளி!   மின்னம்பலம் : இன்றும் நாளையும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சிறிய தொழிற் நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவரும் ஆயுத பூஜை கொண்டாடினர். வாகனங்களை கழுவி பூ, பொட்டு வைத்து பூஜை போடும் நிகழ்வுகளும் நடைபெற்றது. அதாவது இந்த பண்டிகையின் போது அனைத்து தொழில் உபகரணங்களுக்கும் பூஜை போடுவது வழக்கம். புதிதாக இந்தியாவுக்கு வரும் ரஃபேல் விமானத்துக்குப் பூஜை போடுவதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றுள்ளார்.
இதுவொருபுறமிருக்க திருப்பூரில் ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் நகைச்சுவை சம்பவமும் நடைபெற்றிருக்கிறது.
இச்சம்பவம் மண்ணை தொட்டு கும்பிடு படத்தில் நடிகர் செந்தில் ஆயுத பூஜை கொண்டாடிய காட்சியைத்தான் நினைவுபடுத்துகிறது. இப்படத்தில் செந்தில் ஆயுத பூஜைக்காக லாரியைச் சுற்றி கற்பூரம் காட்டுவார். ஒரு கட்டத்தில் கற்பூரத்தை டீசல் டேங்கில் காட்டுவார். இதனால் லாரி வெடித்து சிதறிவிடும்.

அந்த பாணியில் திருப்பூரில் தனியார் வங்கி காவலாளி ஒருவர் ஏடிஎம் இயந்திரத்துக்குப் பூஜை போடுவதற்காகத் தண்ணீர் ஊற்றிக் கழுவிய நகைச்சுவை சம்பவம் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் - பெருந்துறை சாலையில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இதன் அருகில் இருக்கும் கடை ஊழியர்கள் தங்களது கடைகளைச் சுத்தம் செய்து சந்தனப் பொட்டு வைத்துள்ளனர். இதனை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏடிஎம் மைய காவலாளி , அந்த மையத்தின் தரையைத் துடைத்ததுடன் மட்டுமின்றி, ஏடிஎம் மீது தண்ணீர் ஊற்றி கழுவியுள்ளார்.
அப்போது அங்குப் பணம் எடுக்க ஒருவர் வந்த போதுதான் ஏடிஎம் பழுதடைந்தது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து வங்கி மேலாளருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தற்போது இயந்திரத்தைச் சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கருத்துகள் இல்லை: