ஞாயிறு, 6 அக்டோபர், 2019

பழிவாங்கப்பட்டாரா டி.கே.சிவக்குமார் ?

savukkuonline.com : கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்,  வீடு மற்றும் பண்ணை வீடுகளில், கடந்த ஆகஸ்ட் 2017ல் வருமான வரித் துறை சோதனைகள் நடத்தியது.   அந்த சோதனைகளின்போது, 15 கோடி ரொக்கம் மற்றும் கணக்கில் வராத 300 கோடி ரூபாய் கண்டு பிடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியது.  தற்போது, சிவக்குமார் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார்.
சிவக்குமார் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்திய காலம் முக்கியமானது.   குஜராத்தில், மாநிலங்களவை தேர்தலில், சோனியா காந்தியின் உறவினரான அஹமது பட்டேல் போட்டியிட்டார். அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பது அமித் ஷாவின் தனிப்பட்ட விருப்பம். இதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கட்சி மாறி வாக்களிக்க ஏற்பாடு செய்தார்.  சோனியாவின் உதவியாளர் என்பதால், அவரை ஜெயிக்க வைக்கும் பொறுப்பு டி.கே.சிவகுமாரிடம் கொடுக்கப்பட்டது.  பிஜேபி கையாண்ட தந்திரங்களை போலவே, சிவக்குமாரும் அனைத்து தந்திரங்களையும் கையாண்டார். 
எம்.எல்.ஏக்களுக்கு தேவையான பணத்தை கொடுத்து, அவர்களை அஹமது பட்டேலுக்கு வாக்களிக்க ஏற்பாடு செய்தார்.  அந்த சமயத்தில்தான் இந்த வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.

மும்பை வருமான வரித் துறையில், தலைமை ஆணையராக உள்ளவர் அல்கா தியாகி.  இவர், மத்திய நேரடி வரி வருவாய் ஆணையராக (Chairman of Central Board of Direct Taxes CBDT) உள்ள சந்திரா மோடி என்பவருக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமனுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், “ஒரு முக்கியமான வழக்கை” கைவிடுமாறு தனக்கு தொடர்ந்து சந்திரா மோடி அழுத்தம் தந்து வருகிறார் என்று எழுதியுள்ளார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.   மத்திய வரி வரி வருவாய் ஆணையரின் கீழ்தான், நாடு முழுக்க உள்ள வருமான வரித் துறை செயல்படுகிறது.  வருமான வரி சோதனைகள், புலனாய்வு அனைத்தும் நேரடி வரி வருவாய் வரி ஆணையரின் கீழேதான் வருகிறது.
அல்கா தியாகி எழுதியுள்ள கடிதத்தில், சிபிடிடி தலைவர் சந்திரா மோடி, ஒரு முக்கிய வழக்கை கைவிடுமாறும், ஒரு முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் மீது வெற்றிகரமான சோதனைகளை நடத்தியதாலேயே, அவருக்கு சிபிடிடி தலைவர் பதவி கிடைத்ததாக சந்திரா மோடி தெரிவித்ததாகவும், அல்கா தியாகி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தனது கடிதத்தில், அல்கா தியாகி, 2019 ஏப்ரல் கடைசி வாரத்தில், சில முக்கிய நபர்கள் மீதான வருமான வரித் துறையின் வழக்குகள் கைவிடப்பட வேண்டும் என்றும், அது, மே 2019க்குள் கைவிடப்பட வேண்டும் என்றும் மோடி அழுத்தம் தெரிவித்ததாக கூறுகிறார்.
“இத்தகைய அழுத்தங்கள், எனக்கு பணியில் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிவித்தபோதும், அழுத்தங்கள் தொடர்ந்தன” என்று கூறுகிறார்.  இப்படி அழுத்தம் தெரிவித்ததாகவோ, யாருக்காக அழுத்தம் தெரிவிக்கப்பட்டதோ அவரோடு மோடிக்கு தொடர்பு இருப்பதாக எந்த இடத்திலும் பதிவு செய்யக் கூடாது என்றும் மோடி கூறியதாக அல்கா தியாகி தெரிவிக்கிறார்.  என்ன ஆனாலும் சரி, அந்த நபர் மீதான வருமான வரித் துறையின் விசாரணை மூடப்பட வேண்டும் என்று மோடி கூறியதாக அல்கா தியாகி தெரிவிக்கிறார்.
வருமான வரித் துறையின் கவனத்துக்கு, வரி ஏய்ப்பு குறித்து தகவல் வந்தால், அதை விசாரணை நடத்தாமல் மூடுவது அத்தனை எளிதல்ல என்பதையும், அப்படி மூடும் அதிகாரி பின்னாளில் சிபிஐ விசாரணைக்கு ஆளாக நேரிடும் என்பதை தெரிவித்தபோதும், மோடி பின்வாங்கவில்லை என்றும் தியாகி தெரிவிக்கிறார்.  அந்த நபருக்கு நோட்டிஸ் அனுப்பும் முன்னர் தன்னிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று மோடி தனக்கு உத்தரவிட்டதாக தியாகி கூறுகிறார்.

மத்திய நேரடி வரி வருவாய் ஆணைய தலைவர் சந்திரா மோடி.
யார் சார்பாக இப்படியொரு அழுத்தத்தை சிபிடிடி தலைவர் மோடி, அல்கா தியாகிக்கு அளித்தார் என்பதையும் எளிதாக ஊகிக்க முடிகிறது.
செப்டம்பர் 15, 2019 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட மற்றொரு செய்தியில், இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.  28 மார்ச், 2019 அன்று, மும்பை வருமான வரித் துறை முகேஷ் அம்பானி, அவர் மனைவி நீத்தா அம்பானி மற்றும், அவர்களது மூன்று குழந்தைகளுக்கும், வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுவிட்சர்லாந்து எச்.எஸ்.பி.சி வங்கியில், 1195  இந்தியர்கள் கருப்புப் பணத்தை பதுக்கியுள்ள விபரம் வெளியானதை அடுத்து இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதே செய்தியில், இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்த நோட்டீஸ் அனுப்படுவதற்கு முன்னதாக, நேரடி வரி வருவாய் ஆணையர் அலுவலகத்துக்கும், மும்பை வருமான வரித் துறை அலுவலகத்துக்கும், இடையே நீண்ட கடிதப் போக்குவரத்து இருந்ததாகவும், நோட்டீஸ் அனுப்பபட ஓரிரு நாட்கள் இருந்த நிலையில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
அந்த செய்தியையும்,  இன்று வெளியாகியுள்ள அல்கா தியாகியின் கடிதத்தையும் பொருத்திப் பார்க்கையில்,  முகேஷ் அம்பானிக்காகவே,  நேரடி வரி வருவாய் தலைவர் சந்திரா மோடி, அல்கா தியாகிக்கு அழுத்தம் தந்துள்ளார் என்பது தெளிவாகிறது.
ஒரு முறை இரவு 8.45 / 9 மணிக்கு, தன்னை வந்து சந்திக்குமாறு உத்தரவிட்ட சந்திரா மோடியின்  உத்தரவை, தான் நிராகரித்ததாகவும்,  34 ஆண்டுகளாக ஒரு பெண் அதிகாரியாக வருமான வரித் துறையில் பணியாற்றிய பிறகு, இப்படி இரவு நேரத்தில் மீட்டிங்குக்காக வரும் அழைப்புகள், சட்ட விரோதமான உத்தரவுகளுக்காகவே இருக்கும் என்பதை புரிந்தே, தான் அந்த உத்தரவை நிராகரித்ததாக தியாகி தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
இந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி, வருமான வரித் துறை தலைமை ஆணையர் அல்கா தியாகியின் அலுவலகம் உடைக்கப்பட்டு, பல ஆவணங்கள் திருடு போனது குறிப்பிடத்தக்கது.  நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவிக்களோடு, உயர்மட்ட பாதுகாப்பில் இருக்கும் வருமான வரித் துறையின் மூத்த அதிகாரியின் அறையில் நடந்திருக்கும் இந்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழலை ஒழிப்பதே என் வாழ்நாளின் லட்சியம் என்று உரக்க உரக்க கூவும், ஊழல் ஒழிப்பாளர் நரேந்திர மோடி இது குறித்து எடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா ?
இரண்டு நடவடிக்கைகள்.
1) ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரை காப்பாற்ற முயற்சித்த நேரடி வரி வருவாய் ஆணைய தலைவர் சந்திராவின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்தோடு முடிவடைந்தது.  அவருக்கு ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கினார் மோடி.
2) சந்திரா மோடி மீது நிதி அமைச்சகத்துக்கு புகார் அனுப்பிய அல்கா தியாகி, வருமான வரித் துறையின் புலனாய்வுப் பிரிவில் இருந்து, வருமான வரி பயிற்சிக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார்

கருத்துகள் இல்லை: