சனி, 31 ஆகஸ்ட், 2019

தி.மு.க பற்றிய அவதூறு… மாரிதாஸை யார் ஆதரிக்கிறார்கள்… யார் எதிர்க்கிறார்கள்?

பா.ஜ.க ஐடி விங் நிர்மல்

பா.ஜ.க ஐடி விங் நிர்மல்
நிர்மல்
மாரிதாஸ் விகடன் : தி.மு.க மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் பொய்யான தகவல்களோடு வீடியோ வெளியிட்டதாகக் கல்லூரிப் பேராசிரியர் மாரிதாஸ் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அக்கட்சி புகார் அளித்தது. அதன் தொடர்ச்சியாக ட்விட்டரில், இணைய தி.மு.க-வினர் & வெர்சஸ் மாரிதாஸ் ஆதரவாளர்களிடையே ட்ரெண்டிங் வார் நடந்துவருகிறது. #ISupportMaridhas, #MentalMaridhas ஆகிய ஹேஷ்டேக்குகள் நேற்று தேசிய அளவில் முதல் இரண்டு இடங்களில் ட்ரெண்டாகின. இதையொட்டி இருதரப்பிடமும் பேசினோம். பா.ஜ.க-வின் ஐ.டி விங் மாநிலச் செயலாளர் நிர்மல்குமாரிடம் பேசியபோது, “மாரிதாஸ் மீது தி.மு.க-வினர் காவல் துறையில் புகார் அளித்ததற்கு, பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் முதற்கொண்டு இன்னபிற தலைவர்களும் அவருக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அந்த வழக்கைச் சந்திப்பதில் அவருக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்போம் எனச் சொல்லியிருக்கிறார்கள்.



இத்தனைக்கும் அவர் எங்கள் கட்சியைச் சார்ந்தவர்கூட அல்ல. மாரிதாஸ், மதுரையைச் சேர்ந்தவர். ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். கடந்த நாலைந்து வருடங்களாகத் தன்னுடைய கருத்துகளைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகிறார். அத்துடன் கல்லூரிகளில் நடைபெறும் கருத்தரங்குகளிலும் பங்குபெற்று வருகிறார். பலருக்கும் தெரியாத தி.மு.க-வின் உண்மை முகத்தை மாரிதாஸ் மக்களிடம் கொண்டுசேர்த்து வருகிறார். அவரை, பாதுகாக்க வேண்டியது எங்களுடைய கடமை.


அவருக்கும் பா.ஜ.க-வினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனினும், நாங்கள் ஏன் மாரிதாஸுக்கு ஆதரவாக இருக்கிறோமென்றால், பா.ஜ.க எப்போதும் கருத்துரிமையை மதிக்கும் கட்சி. கருத்துச் சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. மாரிதாஸுக்கு எதிராக தி.மு.க செய்திருக்கும் புகாரானது, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது.



நாங்கள் மாரிதாஸுக்கு மட்டுமல்ல, அவரைப்போல யாருடைய கருத்துரிமை நசுக்கப்பட்டாலும், பா.ஜ.க அவர்களுக்கு ஆதரவாகக் களத்தில் இருக்கும். தி.மு.க-விற்கு ஆதரவாக அவர்கள் உருவாக்கும் ஹேஸ்டேக்குகள் திட்டமிடப்பட்டு ட்ரெண்டிங் ஆகுகின்றன. ஒரு மணி நேரத்திற்குள்ளேயே மென்டல் மாரிதாஸ் என்கிற ஹேஸ்டேக்கில் பதினெட்டாயிரம் ட்வீட்ஸ் வர வாய்ப்பில்லை.
தமிழ்நாடு முழுக்க தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் ஒரு லட்சம் பேர் ட்விட்டரில் இருப்பார்கள் என வைத்துக்கொள்வோம். அதில் ஒரு மணி நேரத்தில் பதினெட்டாயிரம் பேர் இணைவதற்கு வாய்ப்பு குறைவு. நீண்டநாள்களாகவே தி.மு.க ஐ.டி விங் தாங்கள் விரும்பிய ஹேஸ்டேக்கை ட்ரெண்டிங் ஆக்குவதற்கென்றே சில நிறுவனங்களிடம் கைகோத்திருக்கிறது.



ஆனால், அவர்களுடைய பொய்ப் பிரசாரம் இனி எடுபடாது. அந்தப் பயத்தில்தான் அவர்கள் மாரிதாஸை ஒட்டுமொத்தமாக ஒடுக்க வேண்டுமென நினைக்கிறார்கள். இணையதளத்தில் வரும் செய்திகளைவைத்து எந்தவித வழக்கும் தொடரக்கூடாது என்று உச்ச நீதிமன்றமே சொல்லியிருக்கிறது.


 
தி.மு.க காவல் துறையில் செய்திருக்கும் புகாரானது, ஒன்றுமில்லாதது. அதுபோலவே இனி கருத்துரிமை சார்ந்து பேசுவதற்கு அவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பது மாரிதாஸ் விஷயத்தில் தெளிவாகிவிட்டது” என்றார்.



தி.மு.க அமைப்புச் செயலாளரும் வழக்கறிஞருமான ஆர்.எஸ்.பாரதியிடம் பேசியபோது, “கருத்துரிமை என்பது வேறு. தவறான பொய்ப் பிரசாரம் என்பது வேறு. இவ்விரண்டையும் இனங்காண முடியாத அளவிற்கா நாங்கள் இருக்கிறோம்.


ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி
விகடன்
எங்களை விமர்சிக்கலாம். எத்தனையோ விமர்சனங்களை எதிர்கொண்டு, இன்றும் ஆலமரம்போல் படர்ந்திருக்கும் கட்சி தி.மு.க. நாங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம். ஆனால், அவதூறுகளுக்கு அமைதிகாக்க முடியாது.
தி.மு.க தலைவரை வேண்டுமென்றே தீவிரவாத இயக்கத்துடன் இணைத்துப் பேசுவது அயோக்கியத்தனம்தானே? அதை எப்படி அனுமதிக்க முடியும்? இதுபோன்று அவதூறு செய்பவர்களை ஒடுக்கத்தானே ‘Defamation’ என்கிற சட்டம் இருக்கிறது.



கருத்துச் சுதந்திரம் என்றாலும் அவரவர் எல்லைக்குள் இருக்க வேண்டுமே தவிர, இன்னொருவர் மூக்கைத் தொடக்கூடாது அல்லவா? புகார் கொடுத்திருக்கிறோம், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அடுத்தகட்ட நடவடிக்கைக்குச் செல்வோம். மாரிதாஸ் போன்றோர்மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், பொய்யான தகவல்களை இளைஞர்களிடம் விதைத்துக்கொண்டே இருப்பார்கள்” என்றார்.

கருத்துகள் இல்லை: