செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

ஜெ சொத்து வழக்கு: தீபக் தீபாவுக்கு உத்தரவு!

ஜெ சொத்து வழக்கு: தீபக் தீபாவுக்கு உத்தரவு!மின்னம்பலம் : ஜெயலலிதா சொத்தை நிர்வகிப்பது
தொடர்பான வழக்கில் தீபக் தீபா நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்கத் தனி நிர்வாகி நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.கே.நகரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியான புகழேந்தி வழக்குத் தொடர்ந்திருந்தார். வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து, அவரது சொத்துகளை நிர்வகிக்க தங்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என்று தீபக், தீபா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணையில் உள்ளது. ஜெ சொத்து தொடர்பாகக் கடந்த ஜூலை 30 ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தீபா, நாங்கள் சொத்துகளுக்கு ஆசைப்படவில்லை. வேண்டுமென்றால் ஏற்கனவே கேட்டுப் பெற்றிருப்பேன். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. இவர்கள் தான் வாரிசு, இவர்களுக்கு உரிமை உள்ளது என்று நீதிமன்ற வாயிலாக முடிவு வரவேண்டும் என்பது தான் எங்களது விருப்பம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இன்று (ஆகஸ்ட் 27) இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெ சொத்துகளை நிர்வகிக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும். ஜெயலலிதாவின் சொத்துகள் சிலவற்றைப் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் தற்போது ஜெயலலிதா சொத்துகள் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் இருப்பதாக தீபக், தீபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வருமான வரித்துறை தரப்பில், 1996ஆம் ஆண்டு ஜெயலலிதா வங்கியில் வாங்கிய கடன் தற்போது வட்டியுடன் ரூ.20 கோடியாக உள்ளது, இதுதவிர வருமான வரி பாக்கி 40 கோடி ரூபாய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள் ஜெயலலிதா சொத்து தொடர்பாக வழக்குத் தொடர்ந்தது குறித்து விளக்கமளிக்க தீபா , தீபக் ஆகியோர் வரும் 30ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: