திங்கள், 26 ஆகஸ்ட், 2019

இம்ரான் கான் : காஷ்மீருக்காக எதையும் செய்வோம்.. அணு ஆயுத போர் நடந்தால் உலகுக்கே பாதிப்பு.

Veerakumar  - tamil.oneindia.com : இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெரிய தவறு செய்துவிட்டார், அணு ஆயுதம் கொண்ட இரு நாடுகள் நடுவே, போர் வெடித்தால் அது மொத்த உலக நாடுகளையுமே பாதிக்கும் என்று, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று மாலை அந்த நாட்டு மக்களுக்கு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார். அனைத்து சர்வதேச அரங்குகளிலும் கடும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், பிரான்சில் நடைபெற்ற ஜி -7 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இப்படி ஒரு உரையாற்ற இம்ரான் கான் தள்ளப்பட்டார். 
இம்ரான் கான் தனது உரையில் கூறியதாவது: நாங்கள் காஷ்மீருக்காக எந்த அளவுக்கும் செல்வோம். இந்தியா ஒரு படி முன்னாடி எடுத்து வைத்தால், நாங்கள் இரண்டு அடி முன்வைப்போம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மூலமாகத்தான் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முடியும். பாகிஸ்தானுக்கு தேவை பேச்சுவார்த்தை. ஆனால் இந்தியா பயங்கரவாத பிரச்சினையை தொடர்ந்து எழுப்புகிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அமைதியும் வளர்ச்சியும் தேவை. 370வது பிரிவை காஷ்மீரில் இருந்து நீக்கியது பிரதமர் நரேந்திர மோடி செய்த மிகப் பெரிய தவறு. வரலாற்று தவறு இது. இறுதியில் காஷ்மீரின் விடுதலைக்குதான் இது வழிகோல உள்ளது. 
காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச அளவுக்கு கொண்டு சென்றுள்ளோம். காஷ்மீர் பிரச்சினை குறித்து, முஸ்லிம் நாடுகளுடன் பேச உள்ளேன். பாலகோட் போன்ற தாக்குதல்களை இந்தியா இனியும் செய்ய முடியாது. 
பாகிஸ்தானை ராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்த இந்தியா முயன்றபோதும், பாக்கிஸ்தானை கருப்புப்பட்டியலில் வைக்க நிதி நடவடிக்கை பணிக்குழுவை (எஃப்ஏடிஎஃப்) வற்புறுத்தியும் அது, தோல்வியடைந்தது. பாஜக அரசின் நோக்கங்களை விரைவில் எனது அரசு உணர்ந்து கொண்டது. எனவேதான், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பின்பற்றும் இந்தியாவிலுள்ள தற்போதைய அரசுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது என்று நாங்கள் முடிவு செய்தோம். 
காந்தியின் கொலைக்குப் பின்னணியில் இருந்தது இந்த ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம்தான். இந்தியாவில் தற்போது நடைபெறும் 'கும்பல் கொலை சம்பவங்கள்' இப்போது முஸ்லிம்களும் பிற சிறுபான்மையினரும் இந்தியாவில் இரண்டாம் தர குடிமக்களாக வாழ காரணமும் அந்த சித்தாந்தம்தான். இந்தியாவில் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுகிறார்கள்.&
காஷ்மீர் மக்களுக்கு உதவ என்ன வேண்டுமானாலும் செய்வோம். இந்திய அரசின் பிடிவாதம் போரை நோக்கி இட்டுச் செல்ல கூடும். இரு நாடுகளிலும் அணு ஆயுதங்கள் உள்ளன. போர் சூழ்நிலை ஏற்பட்டால் உலகம் முழுவதுமே அதனால் பாதிக்கப்படும். எனவே சூப்பர் பவர் நாடுகளுக்கு காஷ்மீர் விவகாரத்தில் முக்கிய பங்கு உள்ளதை அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். இவ்வாறு இம்ரான் கான் உரையாற்றினார்.&
இதனிடையே, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அனைத்து பிரச்சினைகளும் இருதரப்பு ரீதியிலானது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி இன்று ஜி-7 உச்சி மாநாட்டில் சந்தித்து, வலியுறுத்தி தெரிவித்துவிட்டார். இதையடுத்து, ட்ரம்ப்பும், அமெரிக்கா காஷ்மீர் விஷயத்தில் தலையிடாது என கூறிவிட்டார். இந்த நிலையில், பாகிஸ்தான் தனித்து விடப்பட்டுள்ள சூழ்நிலையில், அணு ஆயுத விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் இம்ரான் கான்

கருத்துகள் இல்லை: