வியாழன், 29 ஆகஸ்ட், 2019

யாழ்ப்பாணப் புத்தகக்காட்சி 2019: .. Jaffna Book Fair

தேனீ.com : யாழ்ப்பாணம் வீரசிங்கம் (மண்டபத்தில் புத்தகக் காட்சியும் விற்பனையும் நடந்து கொண்டிருக்கிறது. எத்தனை ஆண்டுகாலக் கனவு! இப்பொழுதுதான் நிறைவேறியிருக்கிறது. உண்மையில் இது ஒரு நல்ல தொடக்கமே. “நூலகத்தை எரித்து விட்டார்கள்” என்று ஆண்டுக்கணக்கில் அழுது புலம்பிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, இந்த மாதிரிப் புத்தகங்களின் பரவலாக்கத்தையும் வாசிப்பையும் சமூக மயப்படுத்தும் காரியங்களே தேவை. இதை இவ்வளவு காலமும் எவருமே செய்யவில்லை என்பது வருத்தமே. இப்பொழுது இதை வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனும் ஆர்வலர்கள் சிலருமாக இணைந்து தொடங்கியுள்ளனர். இதற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும். இனி இந்த நிகழ்வு ஆண்டு தோறும் நிகழவே போகிறது. ஒவ்வொரு ஆண்டும் இது மேலும் மேலும் வளர்ச்சியடையும். இப்பொழுதே இந்த இடம் (வீரசிங்கம் மண்படம்) போதாது. விற்பனையாளர்களும் இதைச் சொன்னார்கள்.
நேற்றும் இன்றும் பார்த்தேன். கூட்டம் கூட்டமாக மக்கள்  வந்து கொண்டேயிருக்கிறார்கள். வயது வேறுபாடில்லை. இளைய தலைமுறையினர் நிறைய வருகிறார்கள்.
சின்னப் பிள்ளைகள் பெற்றோருடன் வருகிறார்கள். தொலைதூரங்களிலிரும் பலர் வந்திருந்ததைக் கண்டேன். மன்னாரிலிருந்து பத்திநாதன். வாழைச்சேனையிலிருந்து ஜிஃப்ரியும் இன்னொரு நண்பரும். கிளிநொச்சியிலிருந்து கஜீபாவும் தாயாரும். இப்படி ஏராளமானவர்கள் பல திசைகளிலிருந்தும் வந்திருந்தனர். அந்தளவுக்குச் சனங்களுடைய ஆர்வம் உற்சாகத்தைத் தருகிறது.
புத்தக விற்பனையும் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள் விற்பனையாளர்கள். இதை விட வேறென்ன வேணும். மெத்தச் சந்தோசமாக இருக்கிறது.
“இப்ப நம்ம ஜீவா இங்க இருக்க வேணும். இதையெல்லாம் பார்த்தா எவ்வளவு சந்தோசப்படும் மனுசன்” என்று மேமன் கவியிடம் சொன்னேன். கொடகே பதிப்பகத்தின் சார்பாக மேமன் கவியே பொறுப்பிலிருந்தார். “ஓம் கருணாகரன், “ச்சா, என்ன ஆச்சரியமப்பா. இந்தச் சனங்களை என்னெண்டு நினைச்சியள். எங்கட சனங்கள் எப்பவும் நல்லதுகளை ஆதரிக்குங்கள். என்ன இருந்தாலும் யாழ்ப்பாணத்தானுக்கு புத்தகத்தோட ஒரு பற்றுப் பாசம் இருக்கு எண்டது உண்மைதான்…” எண்டு சொல்லிருப்பார்” என ஜீவா பேசுவதைப்போலவே பாவனை செய்தார் மேமன்.
இதையே பூபாலசிங்கம் புத்தகசாலை ஸ்ரீதரசிங்கின் மகனும் சொன்னார். இதை ஜீவா பார்த்திருந்தால் உண்மையில் பூரித்துப்போயிருப்பார். ஆன்மா கரைந்து மகிழ்ந்திருப்பார். ஏனோ தெரியவில்லை. இந்தக் காட்சியைப் பார்க்கும்போது எனக்கு ஜீவாவின் எண்ணமே அலையலையாகக் கிளர்ந்து கொண்டிருந்தது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பே ஜீவா இப்படியொரு புத்தகக் காட்சியைப்பற்றிப் பேசியிருக்கிறார். பேசியிருக்கிறார் என்றால் அப்படியொரு கனவு அவருக்குள்ளே கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், என்ன செய்ய முடியும். ஜீவாவின் காலத்தில் அதற்குச் சாத்தியங்களிருக்கவில்லை. இப்பொழுது சாத்தியங்கள் உருவாகி கனவு நனவாகியிருக்கிறது. ஜீவாதான் அதைப்பார்க்கும் நிலையில் இல்லை. அவர் நினைவு மங்கிய நிலைக்குச் சென்று விட்டார்.
இதைப்போல இதை கா. சிவத்தம்பி கண்டிருந்தாலும் ஜீவாவைப்போல உருகியிருப்பார். புத்தகங்களின் விற்பனைக்காக அல்ல. இது உருவாக்கப்போகும் பண்பாடு பற்றிய எண்ணமே அவரை அப்படிப் பூரிக்க வைத்திருக்கும்.
கொடகேயில் ஒரு தொகைப் புத்தகங்களை வாங்கிக் கொண்டு நின்றார் அ.யேசுராசா. அதற்கப்பால் சத்யன், ஜெ.கி.ஜெயசீலன், கவிஞரும் யாழ் மாநகர ஆணையாளருமான த.ஜெயசீலன், ஈ.சு. முரளிதரன், குமாரதேவன், விருபா குமரேசன், றஞ்சினி, சி.ரமேஸ், கேசவன், இளங்கோ, வெற்றிச்செல்வி, அழ பகீரதன், சிவபாலன், மோகன் எனப் பலரும் நின்றனர். இன்னும் பலர் வந்து சென்றிருந்தார்கள். நானும் பத்திநாதனும் எல்லாக் கடைகளுக்கும் ஒரு சுற்றுச் சுற்றி வந்தோம். வழியில் இடைமறித்து டான் தொலைக்காட்சிக்காக முகுந்தன் பத்திநாதனை நேர்கண்டார். என்னிடமும் அபிப்பிராயம் கேட்டார்கள். சொன்னேன்.
இன்னொரு பக்கத்தில் பிரிட்டிஸ் கவுன்ஸிலிலிருந்து வந்திருந்தவர்கள் சிறார்களுக்கான புத்தகங்களையும் விளையாடு பொருட்களையும் வைத்து சிறார்களை நிகழ்கலையில் ஈடுபடுத்தினர். பிள்ளைகளுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் இது ஒரு வித்தியாசமான – சந்தோசமான விசயம். ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர் எல்லோரும்.
காட்சியில் பதிப்பகங்கள் கலந்து கொண்டதை விடவும் விற்பனையாளர்களே அதிகமாக இருந்தனர். கொடகே, குமரன், பூபாலசிங்கம் போன்றவை பதிப்பையும் விற்பனையையும் செய்கின்றவை. நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் பூபாலசிங்கத்தோடு இணைந்து நின்றது. சிங்களத்திலிருந்து தமிழில் நிறையப் புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறது கொடகே. பல புத்தகங்களைப் பெயர் சொல்லித் தேடினார்கள் என்று பெருமையாகச் சொன்னார் மேமன் கவி.
தமிழினியின் கூர்வாளின் நிழலில் புத்தகத்தை எப்படியாவது எடுத்துத் தாருங்கள் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தார் வவுனியாவிலிருந்து வந்திருந்த இளம் சட்டத்தரணியான வாசகர் ஒருவர். ஆனால் புத்தக அரங்கில் கூர்வாளின் நிழலில் இல்லை என்றார்கள். எங்காவது தேடி எப்படியும் ஒரு பிரதியை வாங்கித் தாருங்கள். வந்து எடுக்கிறேன் என்று சொல்லி விட்டுப்போனார் அவர். இன்னொரு பொறியாளர் வந்து “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” வேண்டும் என்றார். அந்தப் புத்தகமும் தீர்ந்து விட்டது. நாளை எடுத்துத் தருகிறேன் என்றார் ரவி. இப்படிப் பலருக்கும் ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது. அவர்கள் அதைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு ஆச்சரியமான விசயம் இவ்வளவு பேர் வாசிப்பில் ஆர்வமாக இருக்கிறார்களா என்பதுதான். எழுபது, எண்பதுகளில் எல்லா வயதினரும் வாசிப்பில் உச்சவிருப்பத்தோடிருந்ததைக் கண்டிருக்கிறேன். அப்பொழுது புத்தகங்களும் வானொலியுமே மைய ஊடகங்கள். அதிலும் புத்தக வாசிப்பு பெண்களை ஆக்கிரமித்திருந்தது. இன்றும் அதையே காண்கிறேன். காட்சியிடத்தில் பெண்களின் தொகையே அதிகம். நாற்பது வயதுக்கு மேலானவர்களின் தொகை கூடத்தான். இருபத்தைந்துக்குள் உள்ளவர்களில் பெண்கள் அதிகம். நாம்தான் இதைச் சரியாக மதிப்பிடவில்லை. என்பதால்தான் இதுவரையான இலக்கியக் கூட்டங்கள், புத்தக வெளியீடுகளில் ஒரே வட்டத்தினர் திரும்பத்திரும்ப சுழல வேண்டியிருந்தது. இனி அந்த நிலை இருக்காது என்று எண்ணுகிறேன். இது ஏதோ மிகையுணர்ச்சியோ அதீத மதிப்பிடலோ அல்ல. நாமறியத் தவறிய ஒன்று. இனிக் கவனிக்க வேண்டிய ஒன்றும் கூட.
என்ன மாதிரியான புத்தகங்கள் அதிகமாக கேட்கப்படுகின்றன என்று புக்லாப் ரவியிடம் கேட்டேன். தேவ அபிராவின் சகோதரர் ரவி. முன்னர் சரிநிகரில் பணியாற்றியவர். நேற்றுப் பேசுவதற்கே நேரமில்லை என்று இருந்தார். இன்றும் ஏறக்குறைய அப்படித்தான். ஆனாலும் இடைப்பட்ட நேரத்தில் சில விசயங்களைக் குறித்துப் பேசினோம். வாசக எதிர்பார்ப்பை மதிப்பிடுங்கள் என்று சொன்னேன்.
இதை குமரன் பதிப்பகக் கூடத்தை நிர்வகித்துக்கொண்டிருக்கும் கேசவனிடமும் சொன்னேன். கேசவனும் குமரனும் பதிப்பு முயற்சிகளைப் பற்றிக் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு நாட்டு நடப்புகள், விக்கினேஸ்வரனின் புரட்சி, கூட்டமைப்பின் தோல்விகள் பற்றி இருவரும் சிறிது அரசியல் பேசி விட்டுத் திரும்பியபோது இளங்கோவைக் கண்டேன். மகளோடும் மருமகளோடும் வந்திருந்தார். காணும்போதெல்லாம் நாடகத்தைப் பற்றிப் பேசுவார் இளங்கோ. அவர் அதைப் பேசாது விட்டால் நான் அதைப்பற்றிக் கேட்பேன். புதுக்குடியிருப்பில் இருந்த காலத்தில் இளங்கோவும் கிரியும் இணைந்து பல நாடகங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். சில நாடகங்களுக்கான பாடல்களையும் கவிதைகளையும் எழுதியிருக்கிறேன். இளங்கோவே என்னை இயக்குவார். அவரில்லை என்றால் எனக்கு அதில் பங்கேற்ற வாய்ப்பில்லை. இப்பொழுதும் ஒரு நாடகத்தை உருவாக்கும் முயற்சியிலிருப்பதாகச் சொன்னார். அதைப்பற்றி அடுத்த வாரத்தில் விவாதிக்கலாம் என்று தீர்மானித்தோம். அதற்கு நேரம் வாய்க்க வேணும். தினக்கூலிக்காரனுக்கு பொழுது வாய்ப்பது அரிது. என்றாலும் இளங்கோவுக்கு எப்படியும் நேரத்தை ஒதுக்கிக் கொடுக்கத்தான் வேணும்.
இளங்கோ விடைபெற்றுச் சென்றபோது இராஜேஸ் கண்ணா வந்தார். அப்பொழுது ஜிப்ரிஹஸனும் அவரோடு கூட வந்திருந்த நண்பருமாகப் பேசிக் கொண்டிருந்தோம். ஜிப்ரிக்கு இராஜேஸ்கண்ணாவை அறிமுகப்படுத்தினேன். அதைப்போல இராஜேஸ் கண்ணாவை ஜிப்ரிக்கு. பேசிக்கொண்டிருக்கும்போதே ஜெயசீலன்கள் வந்தனர். யேசுராசாவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை? என்று கேட்டார் ஜெ.கி.ஜெயசீலன். ஜெயசீலனை 1980 களின் முற்பகுதியிலிருந்து தெரியும். இப்பொழுது அடிக்கடி சந்திப்பது குறைவு என்றாலும் பலமான உறவு. சகோதரர் தோமஸ் என்னோடு இயக்கத்திலிருந்தவர். அதனால் இன்னும் நெருக்கம் அதிகம். எனக்கும் யேசுராசாவுக்கும் தனிப்பட எந்தப் பிரச்சினையும் பிணக்கும் இல்லை. அவருடைய கருத்துகள், நிலைப்பாடுகள் பற்றிய கேள்விகளே எனக்குண்டு. அவர் பொது வெளியிலும் தனிப்பட நண்பர்களிடத்திலும் முன்வைக்கும் கருத்துகளைப் பற்றிய என்னுடைய நிலைப்பாட்டை எழுதினேன். இதிலே என்ன பிரச்சினை உண்டு. என்னுடைய கருத்துகள், தகவல்களைக் குறித்து யேசுராசாவோ பிற நண்பர்களோ தாரளமாக எழுதலாம் என்றேன்.
அது நியாயமே என்றார் ஜெயசீலன். தனக்கும் சில கதைகள் செவிவழியாக வந்ததைக் கேட்டேன் என்றார். நான் புன்னகைத்தேன். அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
தொடக்க நாள் பின்னேரம் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வந்து சென்றார் என்று சொன்னார் பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங். அவர்களே முன்நிலை ஏற்பாட்டாளர்கள். வரவேற்பாகவும் அவர்களே நிற்கின்றனர். முதல் காட்சிக்கூடம் வாயிலோடு. எரிக்க எரிக்க எழுந்து நின்ற மையம் பூபாலசிங்கம் அல்லவா. நுஃமானுடைய கவிதை மனதில் ஒலித்தது. வீரசிங்கம் மண்டப வாசலுக்கு வந்தபோது, முற்றவெளிக் காற்று வீசியது. முன்னே பச்சைப் புற் சதுரத்தில் கோட்டை. அந்த வளாகம் முழுவதும் நுஃமானே நிற்பதாக ஓருணர்வு. எத்தனை வரலாறுகள். தமிழராய்ச்சி மாநாட்டின்போது கொல்லப்பட்டோரின் நினைவுத் தூண்கள். இப்பொழுது நடப்பதும் ஒரு வரலாறுதான். நாளை இது ஒரு வரலாற்றுச் சம்பவம்.
இந்தக் காட்சியைப் பற்றி சமூக வலைத்தளங்கள் தொடக்கம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடகங்கள் வரையில் அனைத்தும் எழுத வேண்டும். பேச வேண்டும். இதை ஒரு பண்பாட்டு நிகழ்வாக வளர்த்தெடுப்பதற்கு இது அவசியம். நல்லூர்த்திருவிழாக்காலத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்தக் காட்சி புலம்பெயர்ந்து வந்திருப்போருக்கும் ஒரு வாய்ப்பே. ஆனால், எதிர்காலத்தில் இது நல்லூருக்குப் போட்டியாக வரும். அப்படி வருவதே சமூக வளர்ச்சிக்கு நல்லது. அரசியல் தலைவர்கள் தொடக்கம் பாடசாலை மாணவர்கள் வரையில் இதனை ஆதரித்து ஊக்கப்படுத்துவது அவசியம்.
பாடசாலை நாட்களில் இந்தக் காட்சி நடந்திருக்கும் என்றால் கூட்டம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். அதை விட பள்ளி மாணவர்களை பாடசாலைகளே அழைத்து வந்து இப்படியொரு புத்தகக் கடல் இருக்கிறது என்பதைக் காண்பித்திருக்க முடியும் என்றார் ஒரு பாடசாலை அதிபர். அவர் தனக்கும் தன்னுடைய பாடசாலைக்குமாகப் புத்தகங்களைக் கொள்வனவு செய்து கொண்டிருந்தார்.
முன்னொரு காலம் யாழ்ப்பாணம் முழுவதிலும் வாசிகசாலைகள் வாசிப்புக்கும் உரையாடலுக்குமான களங்களாக இருந்தன. இடதுசாரிய அரசியலின் விளைவுகளாக உருவாகிய வாசிகசாலைகள் இதில் முன்னிலையாக இருந்ததுண்டு. பின்னாளில் வாசிகசாலையிலிருந்தே பலரும் இயக்கத்துக்குப் போனர்கள். பிறகு வாசிக சாலைகள் இருளடையத் தொடங்கின. இப்பொழுது அங்கொன்றும் இங்கொன்றுமாக இயங்குகின்றனவே தவிர, ஏனையவை முதியோர் கூடுமிடங்களாகி விட்டன. இந்தக் காட்சி நிச்சயமாக இந்தத் தேக்கத்தை உடைக்கும். வாசிப்பு கூடக் கூட சமூகத்தில் மாற்றங்கள் நிகழும் என்பது விதி. நீர் நிலத்தில் ஊற ஊற பயிர் செழிப்பதைப்போல, சூழல் பச்சையாவதைப்போல.
இதுவரையிலும் கொழும்பு, கண்டி, காலி, அனுராதபுரம் ஆகிய இடங்களில் நடந்த புத்தகக் காட்சி இப்பொழுது முதற்தடவையாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது. இதில் பல வசதிக்குறைபாடுகள் இருக்கலாம். புத்தகங்களின் தொகையும் வகையும் போதாமையாகக் காணப்படலாம். இதெல்லாம் தொடக்க நிலையில் குறைபாடுகளே இல்லை. அடுத்த தடவை நிச்சயமாக நிறைய நல் மாற்றங்கள் நிகழும். அதற்காக முயற்சிப்போம். அது நம் பணிக்கடனல்லவா!
thenee.com

கருத்துகள் இல்லை: