செவ்வாய், 23 ஜூலை, 2019

பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்திகளுடன் வன்முறை!

மின்னம்பலம் :சென்னை அரும்பாக்கம் அருகே அரிவாள், கத்திகளுடன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதி கொண்டது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (ஜூலை 23) மதியம் பிராட்வேயிலிருந்து பூந்தமல்லி நோக்கிச் சென்ற மாநகர பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணித்துள்ளனர். பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ரூட் தல தொடர்பாகப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை அரும்பாக்கம் அருகே பேருந்து சென்று கொண்டிருக்கும் போது மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஒரு தரப்பினர், தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்திகளை எடுத்துக் கொண்டு, மற்றொரு தரப்பை தாக்கத் தொடங்கினர். இந்த பதற்றத்தால் பேருந்து சம்பவ இடத்திலேயே நிறுத்தப்பட்டது. ஆயுதங்களுடன் இருந்த கும்பலைப் பார்த்து அஞ்சி மற்றொரு கும்பலைச் சேர்ந்த மாணவர்கள் பேருந்தை விட்டு இறங்கி ஓடியுள்ளனர்.

எனினும்,அவர்களை விடாமல் துரத்திய அந்தக் கும்பல், பொதுமக்கள் முன்னிலையில் விரட்டி விரட்டி தாக்கியது. அரிவாள் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சாலையில் அங்கும் இங்கும் ஓடிய மாணவர்களால், பேருந்தில் பயணித்த மக்கள் பீதி அடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. தற்போது அதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார், தாக்குதலில் ஈடுபட்டுத் தப்பியோடிய மாணவர்களைத் தேடி வருகின்றனர். அண்ணா நகர் துணை ஆணையர் முத்துசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரிவாள் வெட்டு தாக்குதலில் 7 மாணவர்கள் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் வசந்த குமார் என்ற இரண்டாம் ஆண்டு மாணவர் மட்டும் காயங்களுடன் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். முதல் கட்டமாக 4 மாணவர்கள் பிடிபட்டிருப்பதாகவும் மீதமுள்ளவர்களைத் தேடி வருவதாகவும் போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. பஸ் டே, ரூட் தல என மாணவர்கள் மத்தியில் பிரச்சனைகள் ஏற்படுவதும், அதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவதும் அதிகரித்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது காவல்துறையினரும், கல்லூரி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கும் நிலையிலும் மாணவர்கள் இதுபோன்று தொடர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: